நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விவேக். கலைவாணர் என்.எஸ்.கே போல அவர் நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகளில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துக் கூறியவர். நகைச்சுவை மூலம் லஞ்சம், ஊழல், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை, சமூக சீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், அவருக்கு 'சின்ன கலைவாணர்' என்ற அன்புப் பட்டம் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். அதேபோல், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது கருத்துகளை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றியவர். மேடைகள் தோறும் கலாமின் கருத்துகளைப் பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதல் போன்றவற்றை ஊக்குவித்தவர் விவேக்.
கடந்த 2009ஆம் ஆண்டு கலையில் சிறந்த பங்களிப்பை தந்ததற்காக அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை இதுவரை ஐந்து முறை பெற்றுள்ளார். 'உன்னருகே நானிருந்தால்', 'பார்த்திபன் கனவு', 'அந்நியன்', 'சிவாஜி' ஆகிய படங்களுக்காக விருது பெற்றுள்ளார். ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமல்லாது, விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, மாதவன் என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, கோவை சரளா, சந்தானம், யோகிபாபு ஆகியோருடனும் நடித்துள்ளார். 'நான் தான் பாலா', 'வெள்ளைபூக்கள்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன்2' படத்திலும் விவேக் ஒப்பந்தமாகியிருந்தார்.
இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதைப் பராமரிக்கவும் செய்திருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.