திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
முதலில் இதற்கு சுரேஷ்பாபு தர மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து திவாரி தரப்பில் பேச்சுவார்த்தையில் நடைபெற்றது. இறுதியாக 51 லட்சம் ரூபாய் கண்டிப்பாக தரவேண்டும் என மிரட்டி உள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி திவாரி. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையை கேட்டுள்ளார் அங்கித் திவாரி.
மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவியே 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார். தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி சரவணன் தலைமையில் கடந்த 12 மணி நேரமாக திண்டுக்கல் இ.பி காலனியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து திவாரியிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது. அதேநேரம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.