தேர்தலுக்கு ஒரேயொரு ஆண்டு எஞ்சியுள்ள நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் இந்தி மொழியில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல்செய்ததன் மூலம் அதன் நோக்கம் என்ன என்பதும், முதல் குடிமகனான குடியரசுத் தலைவரில் தொடங்கி ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், எம்.பிக்கள் அனைவருக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம், அலுவலகச் செலவினங்கள், தொகுதிப் படிகளை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை ஆராயப்போவதாகக் குறிப்பிட்டதிலிருந்து இந்த பட்ஜெட் யாருக்கானது என்பதையும் கோடிட்டுக் காட்டிவிட்டார் நிதியமைச்சர் அருண்ஜேட்லி.
வரவேற்பும் வசவுகளும் வரவு-செலவு திட்ட அறிக்கையான பட்ஜெட்டுக்கு வழக்கமானதுதான். விவசாய நலன்சார்ந்த பட்ஜெட், சாலை வசதிகள் பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும், மருத்துவ காப்பீடு போன்ற மக்கள் நலத்திட்டங்கள் உள்ளன என்று பாராட்டுகள் குவிகின்றன. இன்னொரு புறம், வருமானவரி வரம்பில் மாற்றம் செய்யாதது, ஏற்றுமதியில் பங்கு வகிக்கும் ஜவுளித்துறையை புறக்கணித்தது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாதது, தமிழகத்திற்கான நீண்டகால கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு இல்லாதது, சுங்கக் கட்டணம் மாற்றம் என்று விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், பொதுமக்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகமிருந்தன. அவை நிறைவேறியிருக்கிறதா? நிறைவேறுமா?
இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் நரேன் ராஜகோபாலிடம் கேட்டோம் “""பொருளாதார மந்த நிலை, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டியால் துவண்டுபோயிருக்கும் சூழலில், குஜராத் தேர்தலில் முக்கி முனகிய வெற்றி, இந்த வருடத்தில் சந்திக்கப்போகும் எட்டு மாநில தேர்தல்கள், 2019-லிலோ அல்லது அதற்கு முன்பாகவோ வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் என பலவற்றையும் கணக்கிலெடுத்துதான் அருண்ஜேட்லி பட்ஜெட்டைப் போட்டிருக்கிறார்.
மத்திய அரசு ‘கோட்டுசூட்டு சர்க்கார்’ அல்ல என நிறுவுவதை இந்த பட்ஜெட் பிரதானமாகக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக கார்ப்பரேட்களுக்கு ஆதரவான அரசு என்கிற பிம்பம் மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதாலோ என்னவோ, இந்த முறை முழுமையாக விவசாயம், கல்வி, பொதுசுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்புத் துறைகளில் கவனம் திரும்பியிருக்கிறது.
விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச அரசு கொள்முதல் விலை ஒன்றரை மடங்காக உயர்வு, ஆபரேஷன் க்ரீன், நேரடிச் சந்தை சாத்தியங்களுக்கான ஒதுக்கீடு என விவசாயத்தின்மீது கனிவு காட்டப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கான காப்பீட்டுத் திட்டம், "ஆயுஷ்மான் பாரத்' என்கிற சுகாதார மையங்கள், மூன்று பாராளுமன்றத் தொகுதிகளுக்கு ஒன்று என்கிற கணக்கில் மருத்துவக் கல்லூரிகள் என பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு நடந்திருக்கிறது. தனிநபர் வருமான வரிவிகிதங்களில் மாற்றங்கள் இல்லையென்பது சம்பளம் வாங்கும் சாமான்யர்களுக்கு ஏமாற்றமே.
மேலும் சுங்கத் தீர்வை இறக்குமதியில் மாற்றங்கள் கொண்டுவந்திருப்பதால், அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பல பொருட்களுக்கான விலை ஏறும். கல்வி மற்றும் சுகாதார நிதி திரட்டலுக்கான கூடுதல் வரி 4 சதவிகிதமாக உயர்ந்திருப்பது, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை கொஞ்சமாய் காஸ்ட்லியாக மாற்றும். படிப்பு, திருமணம், வீடு என நீண்டகால செலவுகளுக்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமிக்கும் நடுத்தர வர்க்கம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் பார்ப்பின் அதில் 10% வரி பிடித்தம்செய்யப்படும். ஆக சாமான்யர்களின் தினப்படி செலவீனங்கள் அதிகரிக்கத்தான் செய்யுமே ஒழிய, குறையாது.
பார்க்க பிரமாதமாகத் தெரிந்தாலும், இந்த நோக்கங்களை செயல் அளவில் முழுமையாக நிறைவேற்றும் சாத்தியங்கள் உண்டா என்றால், அது விவாதத்துக்கு உரியது. இத்தனை புதிய திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் எப்படி அரசு கையாளப்போகிறது என்பது பற்றி தெளிவில்லை. வகுக்கப்பட்டிருக்கும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, போன பட்ஜெட்டிலிருந்து வெறுமனே 3-5% மட்டுமே உயர்ந்திருக்கிறது. அருண்ஜேட்லி தேர்தலைக் குறிவைத்துப் போட்டிருக்கும் பட்ஜெட் உரையில் வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால் இது தேர்தலில் வெற்றியைப் பெற்றுத்தருமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்'' என்கிறார்.
மற்றொரு பொருளாதார ஆய்வாளரான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா வேறொரு கோணத்தில் பட்ஜெட்டைப் பார்க்கிறார். ""கடந்த 2014-ஆம் ஆண்டு பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்மார்ட் நகரங்கள், தொழிற்பேட்டைகள் என்று தனது முதல் பட்ஜெட்டிலேயே கலர்ஃபுல்லாக அறிவித்து நகர்மயமாக்கலில் இருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அதே அரசு தனது கடைசி பட்ஜெட்டில் முழுக்க முழுக்க விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் தனது கொள்கைத் தோல்வியை வெளிப்படையாக அறிவித்துள்ளது. கடந்த குஜராத் தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் முழுமையான தோல்வியைத் தழுவியதால், எதிர்வரும் நாடாளுமன்ற-சட்டமன்றங்களின் தேர்தல்களை மனதில்வைத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
இப்போதும் விவசாயத்திற்காக அவர்கள் அறிவித்திருக்கும் திட்டங்களும் நிதிகளும் உர நிறுவனங்கள், பூச்சிமருந்து நிறுவனங்களுக்கு சென்று சேருமே தவிர விவசாயிகளுக்கு பெரிய அளவில் நேரடிப் பலனிருக்காது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருமான வரியையே நீக்குவோம் என்று கடந்த தேர்தலில் பி.ஜே.பி. சொன்னதை மறக்கமுடியாது. இந்தியாவில் நேர்மையாக, முழுமையாக வருமான வரிசெலுத்துவது சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் மட்டுமே. நாட்டின் பணவீக்கத்தால் பொருட்களின் விலைவாசி மிகக் கடுமையான அளவில் உயர்ந்திருக்கும் நிலையில், வருமான வரி வரம்பை உயர்த்தியிருந்தால் அவர்களுக்கு ஆறுதலளித்திருக்கும்.
வாங்கும் சக்தி கூடுவதால் வணிக விற்பனை நடவடிக்கையும் சிறிது உயர்ந்திருக்கும். ஆனால் வரிவிகிதத்தில் எந்த மாற்றமும் கொண்டுவராதது அவர்களை ஏமாற்றியிருக்கிறது. அதேநேரத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளின் வரிகளைக் குறைத்திருக்கிறது. மூன்று பாராளுமன்றத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று இப்போதுதான் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. விளைபொருட்களை விற்க ஊரகப் பகுதிகளில் சந்தை ஏற்படுத்துவோம் என்கிறார்கள். உழவர் சந்தை 20 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்துவிட்டது. மருத்துவக் காப்பீடு அறிவித்திருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னரே கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. வீடுதோறும் மருத்துவ சேவை என்ற பெயரில் ஒரு திட்டம் அறிவித்திருக்கிறார்கள். 1972-லேயே தமிழ்நாட்டில் மலேரியா இன்ஸ்பெக்டர், கிராமப்புற சுகாதாரப் பணியாளர் என்றெல்லாம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக தமிழகம் சாதித்துவிட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது''’என உதடுபிதுக்குகிறார்.
பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டோம். ""தமிழகத்தில் 400 விவசாயிகளும், நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த மரணத்திற்கு காரணம் கடன் தொல்லை என்று அரசும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் கடனை மட்டும் தள்ளுபடி செய்யாமலிருப்பது வேதனையளிக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். அதுகுறித்தும் பட்ஜெட்டில் தெளிவுபடுத்தவில்லை. உற்பத்திப் பொருட்களுக்கு அதைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் விலைகிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் தெளிவான விவரங்கள் இல்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டம், காவிரி-குண்டாறு போன்ற நீராதாரத் திட்டங்கள் கிடப்பில் இருக்கின்றன. அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. புதிய ஆறுகள் இணைப்புத் திட்டம் என்று அறிவித்தார்கள் அதற்கு முதலில் ஆறுகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். அதுதொடர்பான எந்த திட்டமும் இல்லை. விவசாயிகள் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அது யாருக்கானது என்று கேள்வியெழுகிறது. விவசாயத்தில் அந்நிய பெரும்நிறுவனங்கள் சந்தையில் ஈடுபட்டிருப்பதால் எந்த அடிப்படையில் செலவு செய்யப்போகிறார்கள் என்று வரும் காலங்களில்தான் தெரியும்''’என்கிறார் உற்சாகமின்றி.
தனியாக அறிவிக்கப்பட்டுவந்த ரயில்வே பட்ஜெட்டை, மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து ஒன்றாக்கியது பா.ஜ.க. ரயில்வேக்கு இந்த பட்ஜெட்டில் 1,48,528 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 13% அதிகமென்றாலும், இதில் மத்திய அரசு ஒதுக்கப்போவது வெறும் 53,000 கோடிதான். மற்றதை மாநில ரயில்வே தனியார் துணையுடன் சரி செய்துகொள்ள வேண்டும். மத்திய அரசின் இந்த நழுவல் எதிரிடையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
8 கோடி பேருக்கு இலவச கேஸ், 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு, காசநோயாளிகளுக்கு ரூ 500 உதவித் தொகை என அருண்ஜேட்லியின் பட்ஜெட், பா.ஜ.க. அரசு இதுவரை நடத்தி வந்த கார்ப்பரேட் ஆதரவு அரசியல்-நிர்வாக முறைகளிலிருந்து மாறுபட்டிருப்பதையும், தனது நிலைப்பாடுகள் தோல்வியடைந்திருப்பதையும் ஒப்புக்கொள்வதாகவுமே அமைந்துள்ளது.
-சி.ஜீவாபாரதி