வேலை செய்கிறதா 'ஷி-பாக்ஸ்'?
பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்குள்ளதா?

என்னதான் கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் என்று மாறிக்கொண்டே இருந்தாலும், மாறாத விஷயமாக பெண்கள் பாதுகாப்பு இருக்கிறது. இந்தியாவில் பெண்களின் மீது தொடுக்கப்படும் பாலியல் ரீதியான தாக்குதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனைத் தடுக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் "மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் " மேனகா காந்தி, 'ஷி பாக்ஸ்' [sexual harassment electronic box] எனும் வலைதளத்தை அறிமுகப்படுத்தினார். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளை பற்றிய புகார்களை இந்த தளத்தில் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த 'ஷி பாக்ஸி'ல் ஒரு முறை புகாரை தெரிவித்துவிட்டால், நேரடியாக சம்மந்தப்பட்ட அமைச்சகம், துறை மற்றும் புகார் ஆணையத்திற்கும் புகாரானது சென்றடையும். 2013 ஆம் ஆண்டின் 'பெண்கள் பணியிட பாதுகாப்பு, மற்றும் அத்துமீறல் தடுப்பு சட்ட'த்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இந்த 'ஷி பாக்சி'ல் ஜூலை முதல் இதுவரை மொத்தமாக 20க்கும் குறைவான புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. ஒரு வேளை குற்றங்கள் குறைவாக இருக்கிறதா என்றால் இல்லை. இதற்கு முன் இந்திய பார் கவுன்சில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. தகவல்தொழில்நுட்பத்துறை, மருத்துவமனை, பிபிஓ என தனியாரில் பணிபுரியும் ஆண்கள், பெண்கள் என சுமார் 6,047 பேரிடம் நடத்தப்பட்டது. இதில் 38% பேர் பாலியல் ரீதியான தொல்லைகளை, அத்துமீறல்களை அனுபவித்துள்ளார்கள். அவர்களில் 69% பேர் அதனைப் பற்றி வெளியே சொல்லவில்லை என்று தெரியவந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், தங்கள் வேலை, வருமானம் பாதிக்கப்படுமோ என்கிற பயம்தான். 'ஷி பாக்ஸ்' தொடங்கப்பட்டதற்கு பின்பும் இது போன்று புகார்கள், அளிக்கப்படாமல் இருப்பதற்கு காரணமாக கருதப்படுவது ஷி பாக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையே ஆகும்.

நம் நாட்டில் பசுக்களின் மீது கருணை சற்று அதிகம். பசு பாதுகாப்பிற்காக ஆதார் வரை எடுக்கச்சொல்லும். அரசு அதற்கான நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் மேற்கொள்ளும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமரே விளம்பர தூதராக வருகிறார். பெண்களின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு இன்னும் பெண்களை சரியாக சென்றடையவில்லை என்பதே உண்மை. இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் விளம்பரம் செய்யாமல், வேறு விளம்பரங்களில் கோடிகளை செலவளிக்கிறது மத்திய அரசு.
ஹரிஹரசுதன்