கடவுள் தன்னால் எல்லோரையும் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் படைக்கப்பட்டவள்தான் தாய். பெண் என்றாலே தாய். தாய்மை ஒரு பெண்ணை முழுமையாக்குகிறது. என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் பெண்ணின் முதல் கடமை, தன் குழந்தையை நல்ல விதமாக வளர்ப்பதுதான். இயற்கையும், இறைவனும் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பொறுப்பு அதுதான்.
இந்த கடமையை குறைவில்லாமல் செய்த பின்னர்தான், நம் மனதிற்குள் உள்ள திறமைகளை, சாதிக்கக்கூடிய துடிப்புகளை வெளிக்கொண்டுவர வேண்டும். இதை நிச்சயமாக எந்த பெண்ணும் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னை பிற்போக்குவாதி என்றுகூட சொல்லிக்கொள்ளுங்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
ஆணுக்கு இல்லையா கடமை என்று நினைக்கலாம். அவர்களுக்கும் கடமை இருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஆணைவிட ஒரு படி அதிகமாக பெண்ணுக்கு பொறுப்பு இருக்கிறது. ஒரு பெண்தான் அந்த குழந்தையை சுமக்கிறாள், பெற்றெடுக்கிறாள் என்பதால் குழந்தையை வளர்ப்பதில் அதிக பொறுப்பு பெண்ணுக்கு உள்ளது.
நிறைய பேப்பர்களை படித்தால், தன் குழந்தையை கூட தூக்கி எறிந்துவிட்டு தன்னுடைய சுதந்திரம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள் என செய்தி வருகிறது. பெண்ணுக்கு சுதந்திரம் உள்ளது, யாரும் தடுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு குழந்தையை பார்க்க வேண்டும். அந்த தியாகத்திற்கு பெண் தயாராக இருக்க வேண்டும். குழந்தையின் மனம் பாதிக்காத வகையில்தான் எதையும் செய்ய வேண்டும். சாப்பாடு மட்டும் போட்டா போதுமா, மனதளவில் அந்த குழந்தை வளர தாய் பல தியாகங்களை செய்ய வேண்டும்.
கடந்த தலைமுறையை பார்த்தீர்கள் என்றால், பெண்கள் பெரிய அளவில் வெளியே வந்து சாதிக்கவில்லை. ஆனால் ஒரு தாயாக, ஒரு மனைவியாக, ஒரு குடும்பத் தலைவியாக சாதித்திருக்கிறார்கள். கணவன் கொண்டு வரும் வருமானம் குறைவானதாக இருந்தாலும், அந்த வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, படிக்க வைத்திருப்பார். அதோடு சிறிய சேமிப்பையும் வைத்திருப்பார்.
இதனால் அந்த குடும்பத்தில் அந்த பெண்ணுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். நிறைய இடங்களில் பார்க்கலாம், வீட்டுக்குள்ளேயே தாய், பாட்டி போன்றவர்கள் இருப்பார்கள், ஆனால் அவர்களின் சொல்லுக்கு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள். அதற்கு காரணம், தன்னை மறந்து குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் அவர்கள் செய்த தியாகம், முழு ஈடுபாடு காட்டியதும்தான்.
மகன் திருமணத்தில் எனது தாயார் மற்றும் பெரியம்மாக்கள்
எனக்கு 18 வயது முடிந்தவுடன், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது திருமணம் நடந்தது. பின்னர் பி.ஏ., முடித்து, பி.எட்., முடித்து, எம்ஏ முடித்தேன். எங்களது குடும்பம் பெரிய குடும்பம், எனது தாயார் காந்திமதியை எவ்வளவு நேசித்தேனோ, அதைப்போலவே எனது பெரியம்மாக்கள் கமலம், பங்கஜம் ஆகியோரையும் நேசித்தேன். அவர்களும் என்னை தங்கள் பிள்ளையாகவே வளர்த்தார்கள். நேசித்தார்கள். என் மகன் திருமணத்தில் எங்க அம்மாவுக்கு என்ன செய்தோமோ, அதே மரியாதையை எங்க பெரியம்மாக்களுக்கும் செய்தேன்.
திருமணம் முடிந்து கரூரில் இருந்து நான் சென்னை வந்துவிட்டேன். கணவர் வீடு, அவர்களது குடும்பம், அவர்களுக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வது என மாற்றிக்கொள்ளும்போது, கரூரில் இருப்பவர்களை நினைக்கத்தோன்றவில்லை. ஆனால் எனது தாயார் என்னை பிரிந்து மிகவும் கஷ்டப்பட்டார். எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. வளர, வளர எனக்கு மெச்சூரிட்டி வரும்போதுதான் அந்த உணர்வுகள் புரிய ஆரம்பித்தது. கரூரில் இருந்து மகள் சென்னைக்கு சென்றிருக்கிறாளே என்ற ஒரு ஏக்கம், மிகப்பெரிய கவலை எங்க அம்மாவுக்கு இருந்திருக்கிறது.
எனது கணவர் தொலைபேசி துறையில் இருந்ததால் வீட்டில் லேன் லைன் தொலைபேசி இருந்தது. அங்க ஊர்ல எங்க சித்தப்பா காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் அவுங்க வீட்டிலேயும் தொலைபேசி இருந்தது. இந்த வசதி இருந்ததால ஒவ்வொரு சந்தேகத்தையும் கேட்பேன். சமையில் சந்தேகம். அதற்கு இப்படி செய்யணும், அப்படி செய்யணும் என்று அம்மா சொல்வாங்க. எனது கணவருக்கு கொஞ்சம் முன்கோவம் வரும். அப்ப புரியாத வயது என்பதால் அதையும் போனில் சொல்லுவேன். எதையுமே மனசுல வைச்சுக்காம உடனே அம்மாவுக்கு போன் போட்டு சொல்லுவேன். அவங்க உடனே இப்படி நடந்துக்குமா, அப்படி நடந்துக்குமா என சொல்லுவாங்க. அன்னையர்தினத்தையொட்டி இன்னைக்குக்கூட எங்கம்மாகிட்ட பேசினேன். இன்னைக்கும் அறிவுரை சொல்றாங்க, அம்மாவின் பேச்சு இன்னைக்கும் என்னை அரவணைக்கிறது.
எனக்கு ஒரு மகன்தான். பார்ட் டைமா வேலைக்கு சென்றேன். ஆகையால் வீட்டில் கணவருக்கு வேண்டியவற்றையும், மகனுக்கு வேண்டியவற்றையும் தயார் செய்து வைத்துவிடுவேன். நான் வேலைக்கு சென்றாலும், அவர்களுக்கு வீட்டு சாப்பாடுதான். நான் வேலைக்கு சென்றாலும் என் வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கும் வீட்டு சாப்பாடுதான். அந்த அளவுக்கு நான் தயார் செய்து வைத்திருப்பேன். நான் வெளியே எங்கு சென்றிருந்தாலும் எனது வீடு, கணவர், மகன் நினைப்பாகவே இருக்கும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வைத்துவிட்டுதான் கிளம்புவேன். இன்று வரை அப்படித்தான். இப்படி என்னை உருவாக்கியது எனது அம்மா காந்திமதிதான். அன்னையர் தினத்தில் அன்னையை போற்றுவோம். வணக்குவோம்.
நிர்மலா பெரியசாமி
அதிமுக நட்சத்திர பேச்சாளர்