கேரளாவில் நடைபெற்ற தங்கக் கடத்தல் வழக்கு, முதல்வர் பினராயி விஜயனை குறி வைத்து நகர ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவர் அஜித் தோவல். இவருக்கும் பினராயி விஜயனுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. மலையாளியான அஜித் தோவல், அடிப்படையில் ஒரு கிறிஸ்தவர். பா.ஜ.க.வினர் பெருமளவு வெறுக்கும் தீவிரமான கிறிஸ்தவ மதப்பிரிவான பெந்தகோஸ்தே என்கிற வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர்.
62 வயதாகும் அஜித் தோவலும் 70 வயதைக் கடந்த பினராயி விஜயனும் கண்ணனூர் மாவட்டத்தில் அறிமுகமாகினர். கேரளா போலீஸ் சர்வீஸில் மிக நல்ல பெயர் எடுத்த அஜித் தோவல் பலமுறை அப்பொழுது மாநில அளவிலான அரசியல்வாதியாக இருந்த பினராயி விஜயனுடன் நெருக்கமாக பழகியிருக்கிறார். ஆனாலும் இந்த வழக்கின் போக்கு பினராயி விஜயனை நெருக்கடிக்கு ஆளாக்கும் என்கிறார்கள் கேரளாவைச் சார்ந்த பத்திரிகையாளர்கள்.
திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்திற்கு அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துதான் ஸ்வப்னா சுரேஷ் தப்பித்து போயிருக்கிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பை ஸ்வப்னா சுரேஷுக்கு வாடகைக்கு எடுத்துக்கொடுத்தது முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன்.
அந்தக் குடியிருப்பில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகள் மூலம் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரீப், கே.டி.ரமீஷ் ஆகியோர் அந்தக் குடியிருப்பில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. விமான நிலையத்தில் தங்கம் பிடிபடுவதற்கு முதல் நாளும், அதற்குப் பிறகும் அந்த ஃப்ளாட்டில் இவர்கள் தங்கியிருந்தார்கள். ஃப்ளாட்டின் உரிமையாளரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தார்கள்.
சிவசங்கரின் அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஒருவர் மூலம், முதல்வரின் அலுவலகத்தில் இருந்து இந்த ஃப்ளாட்டை ஸ்வப்னாவின் கணவரின் பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர் என ஃப்ளாட்டை இவர்களுக்குக் கொடுத்தவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதேபோல் ஜூன் மாதம் 30ஆம் தேதி இந்தக் கடத்தலில் தொடர்புடைய பார்சலை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பிடித்தபோது ஸ்வப்னா யார் யாரிடம் ஃபோனில் பேசினார். அவருடைய கூட்டாளியான சரீப் யார் யாருடன் பேசினார் என்கிற பட்டியலைச் சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிவசங்கரும் சரீப்பும், கடத்தல் பார்சல் சுங்கத்துறையிடம் சிக்கிய பிறகு 14 தடவை பேசியுள்ளனர். 9 முறை சரீப் சிவசங்கரை தொடர்பு கொண்டார். 5 முறை சிவசங்கர் சரீப்பை தொடர்பு கொண்டார். இதில் ஒரு ஃபோன் காலில் இவர்கள் 10 நிமிடம் பேசியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஸ்வப்னாவும் பேசியிருக்கிறார்.
ஸ்வப்னா பேசியபோது, அவருடைய செல்போன்டவர் லொக்கேஷன் கேரள தலைமைச் செயலகத்திற்கு அருகில் சிவசங்கரன் வாங்கிக்கொடுத்த வாடகை ஃப்ளாட்டின் லொகேஷனை காட்டியது. சிவசங்கரனை 14ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 2.30 மணி வரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் தலைமைச் செயலகத்திற்கு அருகில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இந்த வழக்கை இப்பொழுது கஸ்டம்ஸ் அதிகாரிகள் கையாண்டு வருகிறார்கள். அடுத்தக்கட்டமாக அஜித் தோவல் தலைமையிலான தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கின் விசாரணை மாறும். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், முதல்வரின் முதன்மைச் செயலாளரான சிவசங்கரை கேள்வி கேட்க தயாராகி வருகிறார்கள். இதுவரை இந்த வழக்கில் சிவசங்கரன் மற்றும் சபாநாயகர், மந்திரியான ஜலீல் மற்றும் முதல்வரின் செய்தித் தொடர்பாளரான ஜான் விட்டாஸ் ஆகியோர் சிக்கியிருக்கிறார்கள்.
கேரள மந்திரியான ஜலீல் மணிக்கணக்கில் ஸ்வப்னா சுரேஷூடன் ஃபோனில் காதல் ரசம் பொங்க பேசியுள்ளார். இதுபற்றி ஜலீலிடம் கேட்டபோது, "ஐக்கிய அரபு அமீரகத்தின் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி பெறுவதற்காகத்தான் நான் பேசினேன்'' என விளக்கம் அளித்துள்ளார். மந்திரி ஜலீல் மட்டுமல்ல, ஜலீலின் உதவியாளரும் ஸ்வப்னாவுடன் பேசியுள்ளார். ஸ்வப்னாவுடன் கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் செய்தித்தொடர்பாளரான சரீப் பலமுறை ஜலீலின் அலுவலகத்திற்கு வந்துள்ளார் என ஜலீலின் உதவியாளர் சாட்சியம் அளித்துள்ளார்.
ஸ்வப்னா சுரேஷ் தலைமையிலான அணி 14 முறை தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது என கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அத்துடன் என்.ஐ.ஏ.வின் விசாரணையில் ஸ்வப்னாவின் கூட்டாளியான சந்தீப் நாயர் போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி கடத்தப்பட்ட தங்கத்தை கேரளா முழுவதும் விநியோகித்தார் எனக் கண்டுபிடித்துள்ளதாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சிவசங்கரை விசாரிக்கப்போகும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை கைது செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. 10ஆவது கூட பாஸ் ஆகாத ஸ்வப்னா சுரேஷுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வரக்கூடிய வேலை கொடுக்கப்பட்டது எப்படி? அவரது சான்றிதழ்கள் போலி என அவருக்கு டிகிரி சான்றிதழ் கொடுத்த மகராஷ்டிராவில் உள்ள பாபசாகிப் அம்பேத்கார் பல்கலைக்கழகம் தெரிவித்துவிட்டது. கேரளா தகவல் தொழில்நுட்ப இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் கீழ் ஸ்பேஸ் பார்க் என்கிற விண்வெளித்துறையுடன் தொடர்புடைய ஒரு கம்பெனியின் நிர்வாகப் பதவியில் இருந்த ஸ்வப்னா சுரேஷுக்கு இந்த வேலை எப்படி கிடைத்தது? இப்படி ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்றால் அது முதலமைச்சரின் கவனத்திற்கு வராமல் நடந்திருக்க முடியாது.
அதேபோல் காவல்துறை வண்டிகளில் எப்படித் தங்கம் கடத்தப்பட்டது. சிவசங்கரின் செயல்பாடுகள் முதலமைச்சரான பினராயி விஜயனுக்கு எப்படித் தெரியாமல் போனது எனப் பினராயி விஜயனை விசாரணைக்கு உட்படுத்த தேசிய புலனாய்வு ஏஜென்சி திட்டமிட்டுள்ளது. தங்கக் கடத்தலில் கேரள முதல்வருக்கு தொடர்பு என்கிற செய்தியை வலுப்படுத்த இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறது எனத் தேசிய புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்தத் தங்கக் கடத்தலில் தமிழகம் தொடர்புடைய ஒரு கோணமும் வெளியே வந்துள்ளது. தமிழகத்தில் தங்க நகைக் கடைகள் வைத்துள்ள கேரள நிறுவனங்களுக்கு ஐக்கிய அமீரகம் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து ஸ்வப்னாவின் கூட்டாளியான ஜலால், தங்கம் சப்ளை செய்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு கொச்சி விமான நிலையத்தில் இமி கிரேஷன் அதிகாரிகள் துணையுடன் தங்கத்தை கடத்திய வழக்கில் ஜலால் குற்றவாளி என ஏற்கனவே கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தங்கத்தை கடத்துவதற்கு என காரின் பின் சீட்டில் ஒரு ரகசிய அறையை ஜலால் வைத்திருந்தார் என அவரது காரையும் கஸ்டம்ஸ் துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இந்த ஜலால் தமிழ்த் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் செய்திருக்கிறார் என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜலாலுடன் சேர்ந்து இந்தத் தங்கக் கடத்தலை ஐக்கிய அரபு குடியரசில் இருந்து பைசல் என்பவன் தலைமைத் தாங்கியுள்ளான். ஃபைசலை பிடிப்பதற்காக ஒரு தனிப்படை ஐக்கிய அரபு நாட்டிற்கு பறந்துள்ளது. இந்த நிலையில் சிவசங்கரன் தவறு செய்தாரா என விசாரணை செய்வதற்கு தலைமைச் செயலாளரையும், நிதித்துறை கூடுதல் செயலாளரையும் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை முதல்வர் பினராயி விஜயன் அமைத்துள்ளார். அவர்கள் சிவசங்கர் தவறு செய்துள்ளார் எனக் கண்டுபிடித்தால் அடுத்த நிமிடமே சிவசங்கரனை தற்காலிக பணிநீக்கம் செய்வேன் என முதல்வர் பினராயி விஜயன் தனக்கும் இந்தத் தங்கக் கடத்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிற வகையில் ஒரு அறிவிப்பைச் செய்துள்ளார். இந்த அறிவிப்பின் பின்னணியை தேசிய புலனாய்வு விசாரிக்கிறது.
எப்படியும் முதலமைச்சரை தங்களது விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விடுவார்கள் என்கிறது கேரள காவல்துறை வட்டாரங்கள்.
இதற்கிடையே கர்நாடகாவிற்கு காரில் தப்பிச் சென்ற ஸ்வப்னா போகும் வழியில் தனது செல்ஃபோனில் உள்ள சிம் கார்டை மாற்றியுள்ளார். அதுவரை அணைத்து வைக்கப்பட்டிருந்த அவரது செல்போன் புதிய சிம் மாற்றியவுடன் ஆன் செய்யப் பட்டுள்ளது. அதன் சிக்னலை பின்தொடர்ந்துதான் தேசிய புலனாய்வு ஏஜென்ஸி பெங்களுருவில் ஸ்வப்னாவை கைது செய்தது. ஸ்வப்னா தனது செல்போனை ஆன் செய்த இடம் தமிழக எல்லைக்குள் வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வழியாகத்தான் ஊரடங்கு காலத்தில் ஸ்வப்னா தப்பிச் சென்றுள்ளார். அவருக்கு தமிழகத்தில் பயணம் செய்ய இ-பாஸ் எப்படிக் கிடைத்தது எனத் தேசிய புலனாய்வு முகமை தனது விசாரணை வளையத்தைத் தமிழகத்திலும் விரித்துள்ளது.