முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால் சேலம் தொகுதியின் வெற்றி ஆளும் கட்சிக்கு கௌரவப் பிரச்சனையாக உள்ளது. அதுமட்டுமல்ல 2009, 2014 தேர்தல்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்றிருப்பதால், ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கிறது ஆளும் தரப்பு.
சேலம் தொகுதியைப் பொறுத்தவரை வன்னியர் சமுதாயத்தவரே மெஜாரிட்டியாக இருப்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர். எஸ்.சரவணனை களம் இறக்கியிருக்கும் எடப்பாடி, கரன்சிப் பாய்ச்சலுக்கும் தாராளம் காட்டுவதால் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் குஷியோ குஷி.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க.வேட்பாளராக களம் இறங்குகிறார் அதே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன். அ.ம.மு.க. சார்பில் களம் இறங்கும் எஸ்.கே.செல்வமும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஆளும் கட்சியின் எதிர்க்கட்சியான அ.ம.மு.க. என மும்முனைப் போட்டியில், மாங்கனி நகரில் வெற்றிக்கனியைப் பறிப்பது யார் என்பது பற்றிய அனலைஸ் ரிப்போர்ட்.
அ.தி.மு.க.வை அச்சுறுத்தும் விவகாரங்கள்!
அ.ம.மு.க.வின் எஸ்.கே. செல்வம்தான் முதல் அச்சுறுத்தலாக இருக்கிறார். ஆளும் கட்சிக்கு நிகராக இல்லையென்றாலும் ஓரளவு தாக்குப் பிடிக்கும் அளவுக்கு பணபலத்துடன் இருக்கிறார் செல்வம். கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, பூத் ஏஜெண்டுகள் நியமனம் என கடந்த ஓராண்டாக தொகுதி முழுவதும் களப்பணிகளில் இறங்கியிருக்கிறார். தனது கட்சி வேட்பாளரின் வெற்றியைவிட, ஆளும் கட்சி வேட்பாளரின் தோல்வியைத்தான் பெரிதும் எதிர்பார்க்கும் தினகரன், ஆர்.கே.நகர் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டத்தை இங்கேயும் அமல்படுத்தும் முனைப்புடன் இருக்கிறார்.
தினகரன் பிரிக்கும் அ.தி.மு.க. ஓட்டுகள்தான் இரண்டாவது அச்சுறுத்தலாக இருக்கிறது. மூன்றாவது அச்சுறுத்தலாக இருப்பது தே.மு.தி.க.தான். எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், பா.ஜ.க.வின் அழுத்தத்தால்தான் தங்களுக்கு இந்தத் தொகுதி கிடைக்கவில்லை என்ற கடுப்பில் இருக்கிறது தே.மு.தி.க. தலைமை. அதனால் அந்தக் கட்சியின் தொண்டர்கள் சைலண்ட் மோடுக்குப் போய்விட்டார்கள். அதே போல் 2009 தேர்தலின் போது அ.தி.மு.க.வின் உள்ளடி வேலைகளால்தான் அனைத்துத் தொகுதியிலும் பா.ம.க. தோல்வியைத் தழுவியது. அந்த உள்ளடி இப்போது எதிரொலிக்கலாம் என்பது நான்காவது அச்சுறுத்தல்.
தி.மு.க.வின் ப்ளஸ்ஸும் மைனஸும்!
ம.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த கு.சீ.வெ. தாமரைக்கண்ணனுக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என முயற்சி எடுத்தார் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன். பணம் புரட்ட முடியாமல் தடுமாறியதால் தாமரைக்கண்ணனுக்கு சான்ஸ் மிஸ்ஸானது. கிழக்கு மா.செ. வான வீரபாண்டிராஜா தரப்போ, மறைந்த தனது அண்ணன் செழியனின் மருமகன் டாக்டர் தருணுக்கோ, சென்னையில் வசிக்கும் தம்பி டாக்டர் பிரபுவுக்கோ சீட் வாங்கிவிட, கனிமொழி மூலமாக முயற்சித்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம், எஸ்.ஆர்.பார்த்திபனை வேட்பாளராக அறிவித்துவிட்டார் ஸ்டாலின். தனது இரண்டாவது சாய்ஸான பார்த்திபனை அறிவித்திருப்பதால் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் பரமதிருப்திதான். நாமக்கல் எம்.பி.தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த போது, அத்தொகுதியின் சின்னச்சின்ன கிராமங்கள்தோறும் கூட்டங்களை நடத்தி, கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெற்று இப்போது சீட்டையும் பெற்றிருக்கிறார் பார்த்திபன்.
தினகரன் பிரிக்கும் அ.தி.மு.க. ஓட்டுக்கள் தி.மு.க.வுக்கு பெரிய ப்ளஸ்ஸாக இருந்தாலும் அதைவிட மைனஸ்களும் மிரட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. கிழக்கு மா.செ.ராஜா, மேற்கு மா.செ. எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் டி.எம். செல்வகணபதி ஆகிய மூவரும் தனித் தனியே கோஷ்டி கானப்பாடுவதால் ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. ஓட்டுகளில் சேதாரம் ஏற்படலாம். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் டிஎம்.செல்வகணபதியை தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக நியமித்து விட்டார் ஸ்டாலின்.
சொந்த மண்ணில் எடப்பாடியை வீழ்த்தும் முனைப்பில் தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் இருப்பதால், அதை "சாதுர்யமாக' எதிர்கொள்ள ஆளுந்தரப்பு "வெயிட்' காட்டுவதால் சேலம் தொகுதியில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.