Skip to main content

களத்தில் இறங்கிய திமுக...பாமகவை வைத்து சமாளிக்கும் அதிமுக...வெற்றி யாருக்கு?

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

அ.தி.மு.க. முத்தமிழ்ச் செல்வன், தி.மு.க. ந.புகழேந்தி, நாம் தமிழர் கட்சி கந்தசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி கௌதமன் உட்பட 18 பேர் களம் காண்கிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க.வில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதுமே இரண்டு பெரிய கட்சிகளிலும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சூடு பறக்க ஆரம்பித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே 39 பறக்கும் படையையும் 319 கண்காணிப்புக் குழுவையும் களத்தில் இறக்கினார் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன். பறக்கும் படையும் கண்காணிப்புக் குழுவும் எஸ்.பி.ஜெயக்குமாரின் நேரடி கண்ட்ரோலில் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர ஆந்திராவிலிருந்து சிறப்புப் பார்வையாளர்களும் வருகின்றனர்.

 

election



இந்த ஏற்பாடுகளையெல்லாம் தேர்தல் கமிஷன் ஆரம்பிப்பதற்கு முன்பே, பணப்பட்டுவாடாவிற்கான முன்னேற்பாடுகளை பக்காவாக செய்து முடித்துவிட்டார் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். பறக்கும் படையின் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக மாவட்டத்தின் முக்கிய ஊர்களுக்கு கரன்சி லோடு போய் சேர்ந்துவிட்டது. ஆளும் கட்சியின் கிளைச் செயலாளர்களை நன்றாகவே கவனித்திருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். அதே சமயம் ஆளும் கட்சி மீதான அதிருப்தியால் மைனஸ் ஆகும் ஓட்டுக்களை பா.ம.க. மூலம் சரிக்கட்டிவிடலாம் என்ற தெம்புடன் வலம் வருகிறார் அமைச்சர்.


விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் சண்முகத்திற்கு அரசியல் போட்டியாளராக இருப்பவர் மாஜி அமைச்சரும் தி.மு.க. மா.செ.வுமான பொன்முடி. இத்தொகுதியின் தேர்தல் என்பது மேற்படி இருவருக்கும் இடையிலான போட்டியாகத் தான் உள்ளது. ஆலோசனைக் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் நடந்து முடிந்திருந்தாலும், இன்னும் கைக்கு எதுவும் வரலையே என்ற குரல்கள், கடந்த 30-ஆம் தேதி வரை உ.பி.க்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

"நம்ம கேண்டிடேட் நாமினேஷன் தாக்கல் பண்ணி முடியட்டும், அதுக்குப் பிறகு எல்லாம் நல்லபடியா நடக்கும்' என உ.பி.க்களுக்கு பொன்முடி தெம்பூட்டியிருப்பதால், தி.மு.க. முகாமில் உற்சாகம் தெரிகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய ஊர்களில் இருக்கும் லாட்ஜுகள், வாடகை வீடுகள் எல்லாமே ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணிக்குழுவினரால் நிரம்பி வழிகிறது. முதல்வர் எடப்பாடி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சார வருகைக்குப் பின், விக்கிரவாண்டியில் விறுவிறுப்பு அதிகமாகும்.