
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் வாக்காளர்களை விலைக்கு வாங்குவதாக பாஜகவினர் புலம்பித் தீர்ப்பதே வாடிக்கை. ஆனால், பாஜக வலுவான மாநிலங்களில் அவர்கள் அள்ளி இறைக்கும் பணத்துக்கு அளவில்லை என்பதை சமீபத்திய தேர்தல்கள் நிரூபித்தன.
திரிபுரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியையே விலைக்கு வாங்கி, பாஜக என்று பெயர் மாற்றியது சிரிப்பாய் சிரித்த விவகாரம். அதுபோக, வடகிழக்கு மாநிலங்களில் 2 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது எப்படி என்ற கதையெல்லாம் வெளியாகியது.
இதோ, கர்நாடகாவில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் பாஜக பட்டுவாடா செய்து முடித்திருக்கிறது. நேற்று இரவு மாநிலத்தின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளன.

ஆனால், பணத்தையும் மீறி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்கெனவே தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் பாஜக மீது பயங்கர வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அள்ளிவிட்ட பொய்கள் அனைத்தும் விவரமறிந்த வாக்காளர்களிடம் அவரை ஒரு கோமாளியாக்கி இருக்கின்றன என்கிறார்கள்.
இதற்கிடையே, கர்நாடகாவில் வாழும் தெலுங்கர்கள் மத்தியில் ஆந்திரா தொலைக்காட்சி சேனல்களில் பகிரங்கமாகவே பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்திருக்கிறது. வாட்ஸாப்புகளிலும் பாஜக எதிர்பபு பரவியிருக்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுப்பதாக கூறி ஏமாற்றிய பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று அந்த பிரச்சாரம் வலியுறுத்துகிறது.
எனவே, பணத்தை வாங்கிக் கொண்டு யாருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் தீர்மானித்து விட்டார்களா? யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் அரசியல்கட்சிகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.