Skip to main content

அமலாக்கத்துறை இயக்குநர் யார்? - விளக்கும் பால்கி

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Who is the Director of Enforcement? - Palki

 

அமலாக்கத்துறை இயக்குநரகத் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நீட்டிப்பு சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் பால்கியை சந்தித்து பேட்டி கண்டோம். அதில் சிலவற்றை வாசகர்களுக்கு தொகுத்துள்ளோம்.

 

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பதவி நீட்டிப்பு செல்லாது என்று சொல்வதற்கான காரணம் என்ன?

 

மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து இதுபோன்று நீர்த்துப் போகிறது என்று நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு. சுதந்திர இந்தியாவில், அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு, காவல்துறையில் உயர்ந்த பொறுப்புகளில் பாரபட்சமற்று செயல்படுபவர்களைத் தேர்வு செய்து வைத்திருப்பார்கள். மத்திய அரசின் கட்டுப்பாடுகளில் இயங்கக்கூடிய ஒரு குழு தேர்வு செய்யப்பட்டவர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யும். இதைத் தான் சுதந்திர இந்தியாவில் நாம் கடைப்பிடித்து வந்திருக்கிறோம்.

 

Who is the Director of Enforcement? - Palki

 

அமலாக்கத்துறையின் பழைய இயக்குநர் அப்படிப்பட்ட காவல்துறையில் இருந்து வந்தவர். ஆனால், சஞ்சய் குமார் மிஸ்ரா அப்படிப்பட்டவர் அல்ல. இவர் காலம் முழுவதும் வருவாய்த் துறையில் செயல்பட்டு வந்த ஒரு அதிகாரி. வருவாய்த் துறையில் இருக்கும் ஆட்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்றால், நிர்வாகம் கொடுக்கக்கூடிய அழுத்தத்திற்கு ஏற்றவாறு எந்த பிரச்சனை முன்னுக்கு வருகிறதோ அதைத் தான் கையில் எடுப்பார்கள். அந்த முன்னுக்கு வந்த பிரச்சனையை அதனுடைய வரலாற்றையோ அதை சார்ந்த விஷயங்களையோ தொடர்புப்படுத்தாமல் அவர்கள் நினைத்த நடவடிக்கையை எடுப்பார்கள். ஒரு வேளை அதற்கு எதிர்ப்பு வந்தது என்றால் உடனே அந்த நடவடிக்கையை மாற்றிக் கொள்வார்கள். இது தான் வருவாய்த் துறையின் செயல்பாடுகள்.

 

அப்படி செயல்பட்ட சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையின் இயக்குநர் பதவியை கொடுக்கிறார்கள். அவர் பதவி ஏற்கும்போதே பல எதிர்ப்புகள் வந்தது. அதுமட்டுமல்லாமல், பிரசாந்த் பூஷணுடைய தந்தை சாந்தி பூஷண், இந்த தேர்வு முறையே செல்லாது என்று ஆங்கில பத்திரிகை ஒன்றில் பேட்டி அளித்தார். இன்றைக்கும் சஞ்சய் குமாரின் பதவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பது யாரென்றால் பிரசாந்த் பூஷண் தான்.

 

இதனையடுத்து, வருவாய்த் துறையில் இருந்து கொண்டுவரப்பட்ட சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் தான். அதன்படி, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியோடு அவருடைய பதவி முடிந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அவருடைய பதவியை 1 வருடம் நீட்டித்தது. அப்போது, 1 வருடம் நீட்டித்தது சரியல்ல என்று சொல்லப்பட்டது. அதன் பின் 2021 ஆம் ஆண்டு இந்த அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் அனைத்தையும் சற்று நினைவு கூர்ந்து பாருங்கள். 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அதன்படி பா.ஜ.க கட்சி மற்ற கட்சிகளுக்கு நெருக்கத்தை உருவாக்குவதற்கு அமலாக்கத்துறையை பயன்படுத்தினார்கள் என்று தெரிகிறது. அதன்படி, பா.ஜ.க வின் செயல்பாடுகள் அனைத்தையும் அமலாக்கத்துறையின் தலைமை பதவியில் இருந்து கொண்டு சஞ்சய் குமார் நிறைவேற்றினார்.

 

இதனையடுத்து  அவருக்கு மீண்டும் 1 வருடம் அதாவது  2021- 2022 ஆம் ஆண்டில் பதவி நீட்டிப்பு வழங்குகிறார்கள். அந்த காலகட்டத்தில், பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், முன்னாள் துணை முதல்வராகவும் இருந்த ஒரு தலைவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு  நடத்தினார்கள். அதுமட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தாலும், அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்றைக்கு மீண்டும் ரெய்டு நடத்துகிறார்கள். ஆகவே, இந்த அமலாக்கத்துறையினர், பா.ஜ.க.வுக்கு உதவுகின்ற ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டம் பேசுகின்ற நீதி பேசுகின்ற ஆட்கள் கூடாது என்ற அடிப்படையில் இவரை மத்திய அரசு கொண்டு வந்தார்கள்.

 

2022 ஆம்  ஆண்டு இவரைக் கொண்டு வந்தது சரியில்லை என்று முணுமுணுப்புகள் அதிகமாக வந்தது. நல்ல வேளையாகத் தற்போது உச்சநீதிமன்றம் ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த மாதம் 31 ஆம் தேதிக்குப் பிறகு அவர் பதவியில் நீட்டிக்கக் கூடாது. அதுமட்டுமல்லாமல், மூன்றாவது முறையாக இவர்கள் கொடுத்திருக்கும் நீட்டிப்பு என்பது சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

 

ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கியதால் அவருக்கு பின்னால் வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற  நிலைமையும் ஏற்படுகிறதா?

 

நிச்சயமாக ஏற்படும். வருவாய்த் துறையில் இருந்து இவரைக் கொண்டு வரக்கூடாது என்று பா.ஜ.க கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், பா.ஜ.க ஒட்டுமொத்தமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அந்த கட்சியில் எப்போதும் மரியாதை இருக்காது. அமித்ஷாவினுடைய ஆதரவு பெற்ற குழுக்களுக்கு மட்டும் தான் அங்கு செல்வாக்கு இருக்கும். 2014-2015 காலகட்டத்தில் அமித்ஷாவின் மகன் ஒரு நிறுவனத்தை தொடங்குகிறார். 2015-2016 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் வருவாய் கணக்கு அரசிற்கு சமர்ப்பிக்கிறார். அதில் 2845 மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது என்ற விவரம் வருகிறது.

 

எனவே, அமலாக்கத்துறையினர் நேர்மையான அதிகாரிகளாக இருந்தால், அவர்கள் முதல் முதலில் அமித்ஷாவினுடைய மகன் வீட்டிற்கு தான் சென்றிருக்க வேண்டும். ஆக அமித்ஷாவினுடைய வேலை ஆட்களாக செயல்படக் கூடிய அமலாக்கத்துறையின் அதிகாரியாக தான் இவர் செயல்பட்டார். கிராம மக்கள் உள்பட அனைத்து மக்களும் அமித்ஷாவின் மகனின் வளர்ச்சியை பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், அமலாக்கத்துறையின் கண்களுக்கு மட்டும் அவர் தெரியவில்லை. எனவே, தேர்வுக்கு எடுக்கப்படுகின்ற ஆள் பொருத்தமற்றவர் என்று யார் தீர்மானிக்கிறார்களோ அவரைத் தான் இவர்கள் தேர்வு செய்வார்கள்.