‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வுக்காக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி மதுரையில் பரப்புரை மேற்கொண்டார். பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அவரது வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஊடகத்தினரின் கேள்விகளை எதிர்கொள்வதிலும் தன் தந்தையைப் போல எளிமையாகவும் லாவகமாகவும் செயல்பட்டார்.
உங்கள் பரப்புரை சுற்றுப்பயணம் எப்படி இருக்கிறது?
அ.தி.மு.க. அரசின் மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. ஆகையால் அவர்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மதுரையில் பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசியபோது இதைத்தான் உணர முடிந்தது. கடந்த பத்தாண்டுகளாக எந்தவித நல்ல திட்டங்களையும் இவர்கள் கொண்டுவரவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ‘விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம்' என கடந்த ஜனவரி மாதம் முதலே ஸ்டாலின் கூறிவருகிறார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திட்டத்தை ஆதரித்துப் பேசிவிட்டு, இப்போது வேறு வழியின்றி அவசர அவசரமாக அறிவிக்கிறார்
‘தி.மு.க.வின் பி.டீம் சசிகலா' என்று முதல்வர் கூறுவது பற்றி..?
அ.தி.மு.க.வினர்தான் ‘சின்னம்மா', ‘அம்மா' என்றெல்லாம் பாராட்டிப் பேசினார்கள். இன்று ‘தி.மு.க. வின் பி டீம்' என்று கூறுவது நகைப்பாக உள்ளது. ‘பா.ஜ.க.வின் பி.டீம்தான் அ.தி.மு.க.' இது உலகம் அறிந்த விசயம். தி.மு.க. என்றும் நேரடி அரசியல்தான் செய்யும்.
இந்தத் தேர்தலில் எதை முன்வைத்து மக்களிடம் பேசுவீர்கள்?
இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் சொல்கின்ற அதே நேரத்தில், கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்களை நாங்கள் சொல்லியே மக்களைச் சந்திக்கிறோம். 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள், ஆனால் அதனை செயல்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தின் தென்மாவட்ட வளர்ச்சிக்கு உரிய தொழில் வாய்ப்புகளை நிச்சயம் உருவாக்கும்.
"ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பேன்” என ஸ்டாலின் சொல்வதற்கு சமூக வலைதளத்தின் தரப்பில் விமர்சனம் எழுகிறதே?
இதேபோன்று கலைஞர், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தருவேன் என்று கூறியபோது நிறையபேர் விமர்சனம் செய்தார்கள். நிறைவேற்றினாரா இல்லையா..? அதுபோல் தி.மு.க. தலைவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பார்
மகளிர் அணி சார்பில் களத்திற்கு வந்துள்ளீர்கள். பெண்களிடம் எதை முன்வைக்கப் போகிறீர்கள்?
பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த அநீதிகளுக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள், குறிப்பாக பெண்கள் பிரச்சினைகள் அ.தி.மு.க. அரசால் தீர்க்கப்படவில்லை. காவல்துறையில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்குப் பல்வேறு திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு வெளியாகும். எப்பவும் போல தேர்தல் அறிக்கையும் மு.க.ஸ்டாலினும்தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்
தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து உங்கள் பதில்?
தலைவர் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கை. இதுகுறித்து தலைவர் மு.க.ஸ்டாலின்தான் உரிய முடிவெடுப்பார்.
தற்போது நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில், தி.மு.க. மாநில அரசோடு மத்திய அரசையும் சேர்த்து விமர்சித்துப் பரப்புரை செய்கிறதே?
இந்த எடப்பாடி பழனிசாமி அரசு முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் ‘பி' டீமாகவே செயல்படுகிறது. மாநில நலனைவிட பதவி மோகமும் பணப்பித்தும் பிடித்து ஆட்டுகிறது. அதற்காக பா.ஜ.க.விடம் மண்டியிட்டு சேவகம் செய்கிறார்கள். பா.ஜ.க.வும், தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்கிறது. மோடி அரசு பதவியேற்றப் பின் பொது மக்கள், விவசாயிகள், ஊடகத் துறையினர், பத்திரிகைத் துறையினர் என அனைவரும் முடக்கப்படும் நிலையிலேயே உள்ளனர். மோடி அரசு பதவி ஏற்குமுன் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்தது; தற்போது ஜனநாயகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் மதுரையில் கலைஞருக்கு சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறாரே?
கலைஞர் இறப்பின்போது மெரினாவில் இடம் கொடுப்பதற்கு எத்தனை முட்டுக்கட்டைகள் தமிழக அரசு போட்டது? தி.மு.க.வும் எவ்வளவு சட்டப் போராட்டங்கள் நடத்தி வென்றது என்பதைத் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்; தி.மு.க.வும் மறக்காது.