குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி நேற்று முன்தினம்(3.11.2022) அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. டெல்லியில் ஆட்சி செய்யும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாபில் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. குஜராத் தேர்தலிலும் அதே முனைப்பில் செயல்பட்டு வரும் ஆம் ஆத்மி, தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி குஜராத் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராகப் பத்திரிகையாளர் இசுதான் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த இசுதான் காத்வி?
1982 ஆம் ஆண்டு குஜராத்தில் துவாரகா மாவட்டத்தில் உள்ள பிப்லியா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இசுதான் காத்வி, கடந்த 2005 ஆம் ஆண்டு இதழியல் படிப்பில் பட்டம் பெற்றார். அதன்பிறகு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யோஜனா' என்ற நிகழ்ச்சியின் மூலம் பத்திரிகையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், அடுத்ததாக ‘ஈ டி.வி குஜராத்தி’ என்ற ஊடகத்தில் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்போது டாங் மற்றும் கப்ரதா பகுதிகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டதில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். இதன் வீரியத்தை உணர்ந்த குஜராத் அரசாங்கம் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டது.
மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளில், ஒரு பத்திரிகையாளராக நேர்மையான செய்திகளைக் கொடுத்து வந்த இசுதான் காத்வி, கடந்த 2015 ஆம் ஆண்டு விடிவி ஊடகத்தில் செய்தி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். அப்போது அந்தத் தொலைக்காட்சியில், மகாமந்தன் என்ற பெயரில் இவர் நடத்திய அரசியல் நிகழ்ச்சி குஜராத் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி, டி.ஆர்.பி அதிகமாக வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில், ஆளும் கட்சியான பாஜகவை தொடர்ந்து விமர்சித்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார். அத்துடன் ஆளும் கட்சியின் மூலம் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் மக்களின் குரலாக நின்று பேசியிருக்கிறார்.
விலகலும்.. இணைவும்..
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி விடிவி செய்தி ஊடகத்தின் பணியை ராஜினாமா செய்த இசுதான் காத்வி, அதே மாதம் 14 ஆம் தேதியே தன்னை அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்குத் தேசிய இணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மக்களின் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில்தான், இசுதான் காத்வி ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்றக் கட்சிகளைப் போல் இல்லாமல், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தித் தேர்ந்தெடுத்துள்ளனர். பொதுவாக, இந்தியாவில் இருக்கும் மற்றக் கட்சிகள் தங்களது முதல்வர் வேட்பாளராகக் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நபரோ அல்லது கட்சியின் தலைவரோ ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் இதற்கு நேர்மாறாக ஆம் ஆத்மி கட்சி தனது கட்சி முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை மக்களிடமே கொடுத்தது.
முதல்வர் வேட்பாளருக்கு விருப்பம் தெரிவித்தவர்களில் இருந்து குஜராத் மாநிலத்தின் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டுமென மக்கள் முடிவெடுக்க, பொதுவாக அக்கட்சி ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு மெயில், வாட்ஸ்ஆப் மற்றும் சமூகவலைதளங்கள் மூலம் நடத்தப்பட்டது. அப்படி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சியினர் மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுவானவர்களும் கலந்து கொள்ளலாம் என அக்கட்சி அறிவித்தது. அதன்படி நடத்தி முடிக்கப்பட்ட வாக்கெடுப்பில், இசுதான் காத்வி 75% வாக்குகள் பெற்றார். அதனைத் தொடர்ந்து, அவரை குஜராத் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி நேற்று அறிவித்தது. இதனை குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதால் குஜராத் தேர்தலில் கடுமையானப் போட்டியாளராக இருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
வேட்பாளரும்.. விமர்சனமும்..
ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம்வந்த பகவந்த் மானை அம்மாநில முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றது. அதேபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் மூலம், பிரபலமான இசுதான் காத்வியை குஜராத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சி தொலைக்காட்சி பிரபலங்களை முன்னிறுத்துவதாக மற்ற கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில், கதாநாயகன் பத்திரிகையாளராக இருந்து, பின்பு தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆவர். அதே பாணியில் பத்திரிகையாளராக இருந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இசுதான் காத்வி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.