தொகுதி ஒதுக்கீட்டுக்குப் பிறகு, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள். அடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்? அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைச் சந்திப்பவர்கள் யார்? என்ற கேள்விகள் எழும். தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமோ? என்ற கவலை, சம்பந்தப்பட்ட கட்சிகளைப் போலவே, வேட்பாளர்களையும் ஆட்டிப்படைக்கும். இதற்கான தீர்வு, வாக்காளர்களின் விரல்களில் இருந்தாலும், முடிவுகள் தெரியும் வரை வேட்பாளர்களின் மனம் இருப்பு கொள்ளாது. ஆறுதலான வார்த்தைகளுக்காக, நம்பிக்கையான ஜோதிடர்களிடம் சென்று, பரிகாரம் தேடி, நற்பலனை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சில ஜோதிடர்கள் அந்த வேட்பாளர்களிடம் “நீங்க நிச்சயம் ஜெயிப்பீங்க.. இத நான் சொல்லல.. உங்க கட்டம் சொல்லுது..” என்று நம்பிக்கை வார்த்தைகளை அள்ளித்தெளித்து, அந்த நேரத்தில் ‘கூல்’ செய்துவிடுவர்.
‘ஜோதிடம் என்பது ஒரு கணிதமே! இது அறிவியல்பூர்வமானது என்பதைவிட, விஞ்ஞானபூர்வமானது என்பதே சரி!’ என்று ஒரு தரப்பு கூறி வந்தாலும், ‘ஜோதிடம் முற்றிலும் வணிகமயமாகிவிட்டது. அறிவியல்பூர்வமானதல்ல! வானத்தில் உள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் எந்த விதத்திலும் மனிதர்களைக் கட்டுப்படுத்தாது..’ என்ற எதிர் கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
‘நம் முன்னோர்கள் சூரியக் குடும்பத்தின் அடிப்படையில் வகுத்த சில கணித முறைகளைப் பின்பற்றியே, இந்நாளில் ஜோதிடம் பார்க்கப்படுகிறது. இது ஒரு கணிப்பு! அவ்வளவே! கணிப்புகள் சில சமயங்களில் தவறாகலாம். ஆனாலும், ஜோதிடத்தைக் கற்றுத் தேர்ந்து ஓரளவுக்குத் துல்லியமாகக் கணிப்பவர்களும் உண்டு.’ என்ற பொதுவான கருத்தே ஆன்மிக நம்பிக்கையாளர்களிடம் பரவலாக வெளிப்படுகிறது.
சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண் கல்வி போன்ற முற்போக்கான கொள்கைகளை வலியுறுத்தும் புரட்சிகரமான சிந்தனையுடனே, திராவிடக் கட்சியான திமுக-வின் ஆட்சி 1967-இல் தமிழகத்தில் மலர்ந்தது. 1977-இல், பகுத்தறிவுக் கொள்கையில் பெரிதாக ஈடுபாடு காட்டாத அதிமுக ஆட்சி அரியணை ஏறியது. 1991-இல் அதே அதிமுக ஆட்சியின் முதலமைச்சரானார் ஜெயலலிதா. அழுத்தமான ஆன்மிக நம்பிக்கையுள்ள அவர், பின்னாளில் ஜாதகத்தைப் பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை மேற்கொண்டதும் நடந்தது. அவர் ஆரம்பித்து வைத்ததுதான்! அரசியலும் ஜோதிடமும் தற்போது பிரிக்க முடியாததாகிவிட்டது. சசிகலா, தற்போது அரசியலைவிட்டு ஒதுங்கியிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஜோதிட கணிப்பே பிரதானமாக உள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கில், 1996-இல் கைதானார் ஜெயலலிதா. 1997-இல் தோழி சசிகலா உள்ளிட்ட, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் மீதான 47 ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு மூன்று சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது அன்றைய திமுக அரசு. நிலக்கரி இறக்குமதி ஒப்பந்த வழக்கு, ப்ளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, டான்சி நில ஒப்பந்த வழக்கு என வழக்குகள் துரத்தினாலும், 2001-இல் இரண்டாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. டான்சி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட, முதல்வர் பதவியை இழந்தார். பிறகு, இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, 2002-இல் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் முதல்வரானார். ஆனாலும், 2003-இல் திமுகவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
மாறி மாறி சோதனைகளை ஜெயலலிதா சந்தித்துவந்த நிலையில், 2006-இல் சட்டமன்றத்துக்கான தேர்தல் வந்தது. அரசியல் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்கும், வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், தெய்வ வழிபாடுகளும் யாகபூஜைகளும் போதாதென்று, ஜோதிடத்தை முழுமூச்சாக நம்பினார். ‘இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்குமா? நான் மீண்டும் முதலமைச்சராக முடியுமா?’ எனத் தன்னைத் துளைத்தெடுத்த சந்தேகத்தை ஜோதிடர்களிடம் முன்வைப்பதற்கு ஆயத்தமானார். தனக்கு வலதுபக்கம் சசிகலாவையும், இடதுபக்கம் மகாதேவனையும் வைத்துக்கொண்டு, எதிரே மூன்று மூன்றாக 9 இருக்கைகளில் ஜோதிடர்களை அமரச் செய்து, கேள்வியை வீசினார். ‘அம்மா.. உங்க ஜாதகப்படி நீங்கதான் அடுத்த முதல்வர்..’ என்று ஜோதிடர்கள் கோரஸாகக் கூற, அவர்களில் வயதான குருக்கள் ஒருவர் ‘ஜெயலலிதா என்னும் நான் என்று பதவியேற்பீர்கள். இதைப் பகவானே சொல்லிட்டார்..’ என்று சிலிர்க்க, பூரித்துப்போனார் ஜெயலலிதா.
அவர்களில் ஒரு ஜோதிடர் மட்டும் ‘இந்தத் தேர்தலின் மூலம் அதிமுகவால் ஆட்சியமைக்க முடியாது. 60-லிருந்து 65 சீட்கள்தான் கிடைக்கும். நீங்கள் முதலமைச்சராக முடியாது..’ என்று குரலில் அழுத்தம் தந்து பேச, அந்த நொடியே ‘கெட்-அவுட்’ என்று ஜெயலலிதா சீற, போயஸ் கார்டனே அதிர்ந்தது. மகாதேவனால் அழைத்துவரப்பட்ட அந்த ஜோதிடர் உடனே வெளியேறினார்.
யார் அந்த ஜோதிடர்..?
தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா ‘என்னென்ன’ செய்தார்? - தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்! #2