Skip to main content

எங்கு ஆரம்பித்து எங்கு முடிந்தது.. புதிய வேளாண் சட்டங்கள்! 

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

Where it started and where it ended .. New agricultural laws!

 

ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி புதிய மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்தது. அதன்பிறகு அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பிரதமர் மோடி, அந்த மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என அறிவித்திருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த நேரத்தில் அந்த சட்டங்களை அறிமுகப்படுத்தியது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டம், அதனைத் தொடர்ந்து மோடியின் திரும்பப் பெறும் அறிவிப்பு வரை ஒரு மீள் பார்வையிடுவோம். 

 

ஜூன் 5. 2020: மத்திய அரசு மூன்று புதிய வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்தது.


செப்.14. 2020: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்


செப். 17. 2020: மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


செப் 20. 2020: மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.


செப். 24. 2020: மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் மூன்று நாட்கள் ரயில் மறியலை அறிவித்தனர்.


செப். 25. 2020: அகில இந்திய கிஸான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பின் பெயரில் இந்தியா முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


செப். 26. 2020: பாஜக கூட்டணியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது.


செப் 27. 2020: மூன்று புதிய வேளாண் சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மேலும், புதிய வேளாண் சட்டம் அமலுக்கு வந்தது என அரசிதழில் தெரிவிக்கப்பட்டது.


நவ. 25. 2020: பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் சங்கத்தினர் ‘டெல்லி சலோ’ எனும் டெல்லி நோக்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், கரோனா தொற்றின் காரணமாக டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது.


நவ. 26. 2020: டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகள் ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைக்க முயன்றனர்.


நவ. 28. 2020: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயிகள் டெல்லியின் எல்லைகளை விட்டு வெளியேறி, புராரியில் போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றவுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்தார். ஆனால், விவசாயிகள் அதனை நிராகரித்தனர்.


டிச. 3. 2020: மத்திய அரசு, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தியது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.


டிச. 5. 2020: இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது.


டிச. 8. 2020: டெல்லியில் போராடிவந்த விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைத்தனர். இதற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.


டிச. 9. 2020: புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்ததை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நிராகரித்தனர்.


டிச. 11. 2020: பாரதிய கிஸான் சங்கம் இந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியது.


டிச. 13. 2020: மத்திய அமைச்சர் ரவி சங்கர், விவசாயிகள் போராட்டத்தில் சில சமூகவிரோதிகளின் குழு இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.


டிச. 30. 2020: ஆறாம் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. அதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.


ஜன. 4. 2021: ஏழாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் தீர்க்கமாக தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசு தரப்பில் அது முடியாது எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.


ஜன. 7. 2021: புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான மனுக்களை ஜனவரி 11ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.


ஜன. 11. 2021: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.


ஜன. 12. 2021: உச்ச நீதிமன்றம் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு இடைகால தடை விதித்தது. மேலும், சட்டத்தை ஆராயவும் திருத்தங்களை மேற்கொள்ளவும் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது.


ஜன. 26. 2021: குடியரசுத் தினத்தன்று, விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில், விவசாயிகள் செங்ககோட்டையினுள் நுழைந்தனர். மேலும், சிலர் செங்கோட்டையின் மீது விவசாயிகள் சங்கக் கொடியையும் ஏற்றினர். இதில், விவசாயிகளுக்கும் போலீஸாருக்குமிடையே மோதல் நடந்தது. இதில், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.


ஜன. 29. 2021: புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், வேளாண் சட்டம் குறித்து ஆராய்ந்து திருத்தங்களை மேற்கொள்ள குழு அமைப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அதனை விவசாயிகள் ஏற்கொள்ளவில்லை.


பிப். 2. 2021: பாப் பாடகி ரிஹானா, காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டம் தொடர்பான டூல் கிட் என்ற ஆவணம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.


பிப். 5. 2021: டூல் கிட் விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்க போராட்டத்தில் டெல்லி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


பிப். 6. 2021: விவசாயிகள், பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை நாடு தழுவிய மூன்று மணிநேர சாலை மறியலில் ஈடுபட்டனர்.


பிப். 14. 2021: டூல் கிட விவகாரத்தில் காலநிலை ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார்.


பிப். 23. 2021: திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.


மார்ச். 6. 2021: டெல்லி எல்லையில் விவசாயிகள் தங்கள் போராட்டாத்தின் 100வது நாளை நிறைவு செய்தனர்.


மார்ச். 8. 2021: விவசாயிகள் போராட்டத்தின் சிங்கு எல்லை பகுதியில் துப்பாகி சூடு நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


ஏப்ரல். 15. 2021: விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதினார்.


மே. 27. 2021: போராட்டத்தின் 6 மாதங்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் விவசாயிகள் 'கறுப்பு தினமாக' அனுசரித்தனர்.


ஜூன். 5. 2021: புதிய வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்து ஒரு வருடமானதை எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜூன். 26. 2021: புதிய வேளாண் சட்டங்கள் எதிர்த்து போராட்டத்தின் ஏழாம் மாதம் அடைந்ததை அடுத்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தினர்.


ஜூலை. 22. 2021: போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் இணைந்து பாராளுமன்ற கட்டடத்திற்கு அருகில் கிஸான் சன்சாத் என "மழைக்கால கூட்டத்தொடரை" தொடங்கினர்.


ஆகஸ்ட். 7. 2021: 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள கிசான் சன்சாத் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தனர்.


செப். 5. 2021: உத்தரப் பிரதேச தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சவால் விடும் வகையில், முசாபர்நகரில் விவசாயத் தலைவர்கள் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


அக். 3. 2021: லக்கிம்பூரில் விவசாயிகள் மீது மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதிய சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலால் எட்டு பேர் உயிரிழந்தனர்.



அக். 22. 2021: விவசாயிகள் போராட்டம் சட்டத்திற்கு எதிரானது இல்லை எனத் தெரிவித்தது நீதிமன்றம். மேலும், விவசாயிகள் போராட்டம் மக்களை பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்தது.


அக். 29. 2021: விவசாயிகள் போராடி வந்த இடமான காசியாபூரில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி போலீஸார் அப்புறப்படுத்தினர்.


நவ. 19. 2021: பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.