இந்திரா குடும்பத்தினருக்கு துணிச்சல் புதிதல்ல. இந்திராவையே ஜவஹர்லால் நேரு துணிச்சலாகத்தான் வளர்த்தார். தாயில்லாத இந்திராவை விட்டுவிட்டு நேரு சிறையில் வாடியிருக்கிறார்.
இந்திராவும்கூட சிறுவயதிலேயே தன் வயது பிள்ளைகளை சேர்த்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வானர சேனை என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உதவி செய்திருக்கிறார்.
தந்தையின் செயலாளராக உலகைச் சுற்றி வந்திருக்கிறார். அமைச்சராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு மூத்த தலைவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்திருக்கிறார். பிரதமரான சமயத்தில் மூத்த தலைவர்களின் பிற்போக்குத்தனத்தை எதிர்த்து நாட்டின் முன்னேற்றத்துக்காக வங்கிகளை நாட்டுடைமை ஆக்கி, பசுமைப்புரட்சித் திட்டங்களையும், தொழிற்சாலைகளையும் செயல்படுத்தி இருக்கிறார். இதற்காக சோவியத் யூனியனை துணைக்கு வைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவுக்கு மேற்கிலும் கிழக்கிலுமாக இருந்த இரண்டு பாகிஸ்தான்களால் ஏற்பட்ட தலைவலியை போக்க, கிழக்கு பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்து உலகையே வியக்க வைத்திருக்கிறார். பிற்போக்குவாத தலைவர்களும் வலதுசாரி மதவாத தலைவர்களும் தனக்கு எதிராக திரண்டபோது, நெருக்கடி நிலையை கொண்டுவந்து சில நல்ல முயற்சிகளை நடைமுறைப்படுத்தினார். ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றபோதும், சில நிர்வாக ஒழுங்குகள் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு மக்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திராவின் இரண்டு மகன்களில் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியலில் சில அதிரடிகளை நடத்தி வளர்ந்து வந்த நேரத்தில் விமானப் பயிற்சியில் சாகசம் செய்யும் போது பலியானார். விமான ஓட்டியாக இருந்த ராஜிவ் காந்தியும் அரசியலுக்கு வந்தபோது துணிச்சலாக நவீன இந்தியா என்ற முழக்கத்தோடு புதிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி இன்றைய இந்தியாவின் அனைத்து வளர்ச்சி்க்கும் காரணமாக இருந்தார். அவர் கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு என்ற பெயரில் அவருடைய இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும், மனைவியும் அனுபவித்த தொல்லைகள் சாமானியர்களான நமக்கு புரியாது. இயல்பாக வாழமுடியாத நிலையில் வாழ்ந்த அந்தக் குழந்தைகளின் மனிதேநேயத்தை பார்க்கும்போதெல்லாம் மனம் கலங்கத்தான் செய்கிறது.
மக்களுடன் நெருங்கிப் பழகும் அவர்களுடைய விருப்பத்தில் எந்த ஒளிவுமறைவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கேலியும் கிண்டலும் செய்யும் அளவுக்கு பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் தரம் தாழ்ந்துபோயுள்ளனர்.
சாதாரண மனிதனாக இருந்து முன்னேறியதாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் சாமான்ய மக்களுடன் நெருங்கிக் கலந்த நிகழ்வுகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்க்கவே முடியவில்லை. அம்பானி, அதானி, வேதாந்தா, மல்லையா, நிரவ்மோடி என்று பெரிய முதலாளிகளுடனும், பிரபலமான நடிகைகள், நடிகர்களுடன் மட்டுமே காட்சியளித்தவர் மோடி. போராடிய விவசாயிகளையோ, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாமான்ய மக்களையோ சந்தித்து ஆறுதல் தெரிவிக்கக்கூட மறுத்த பிரதமர் மோடிக்கு மக்களோடு கலந்து பழகும் பிரியங்காவையும், ராகுல் காந்தியையும் பார்த்து எரிச்சல் வரத்தானே செய்யும்?
அதிலும் பிரியங்காவின் எதார்த்தமான நெருக்கம் பாஜகவினரை மிக மோசமாக பாதித்திருக்கிறது. அதிலும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் பாம்பு பிடிக்கும் மக்களுடன் அவர் எதார்த்தமாக பேசி, பாம்புகளை கையில் லாவகமாக பிடித்து விளையாடிய காட்சி பாஜகவினரை ரொம்பவே பாதித்து இருக்கிறது. பிரியங்காவின் பயமற்ற அந்த தன்மை, அடித்தட்டு மக்களுடன் அவர் நெருக்கமாக அமர்ந்து பேசும் அந்த பாங்கு பாஜகவின் அடிவயிற்றை கலக்கியிருக்கிறது. அதனால்தான், நேரு குடும்பத்தினர் இந்தியாவின் வறுமையை காட்டியே அரசியல் செய்வதாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் பிரதமர் நேரு 1962 ஆம் ஆண்டு தன்னை சந்திக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்கு பாம்பாட்டி ஒருவரின் சாகசத்தை வேடிக்கை காட்டும் படத்தை வெளியிட்டுள்ளனர். பாம்பைப் பார்த்து பயப்படும் மக்கள் வாழும் உலகில் பாம்புகளை எவ்வித அச்சமும் இல்லாமல் கொடிய விஷப்பாம்புகளைக் கூட கைகளில் பிடித்து விளையாடும் மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது நமக்கு ஒருவகையில் பெருமைதான் என்பதை பாஜகவினர் மறைக்கப் பார்க்கிறார்கள். இத்தனைக்கும் ஜாக்குலின் கென்னடி விருப்பத்தின் பேரிலேயே பாம்பாட்டியை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார் நேரு. அதையே கேலி செய்யும் பாஜகவினர் சோனியாவும் ராஜிவும்கூட பாம்பு ஒன்றை தொட்டுப்பார்த்து ரசிக்கும் படத்தையும் வெளியிட்டு சந்தோஷப்பட்டிருக்கலாம்.
இன்னொரு விஷயமும் இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனது தாய் சோனியாவுக்கு ஆதரவாக ரேபரேலி தொகுதியில் பிரியங்கா பிரச்சாரம் செய்தபோதே படமெடுக்கும் பாம்பை அசால்டாக பிடித்து போஸ் கொடுத்தார். அப்போதே அந்தப் படம் பயங்கர வைரலாகியிருந்தது.
எனவே, பாம்பாட்டிகளுடன் பிரியங்கா நெருங்கிப் பழகியதில் உள்ள கள்ளம் கபடமற்ற மனிதநேயத்தை திசை திருப்புவதற்காக பாஜக எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் அது பலிக்காது என்பதே நிஜம்.
பாஜகவின் கேவலமான இந்த பிரச்சாரத்தைத் தாண்டி அவர்களுக்கு நாம் ஒரு கேள்வியை முன்வைப்போம்…
60 மாதங்கள் இந்தியாவை என்னிடம் கொடுங்கள்… இந்தியாவை உலகின் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றிக் காட்டுகிறேன் என்று பிரதமர் பொறுப்புக்கு வந்த மோடி, இந்த பாம்பாட்டிகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்திருந்தால் அதைச் சொல்லி பிரச்சாரம் செய்யலாமே…?