Skip to main content

நெல்லையில் வாக்கு சிதறுவதால் வெற்றி யாருக்கு ?

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

நெல்லை மக்களவைத் தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை,  அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குனேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 15,26,647 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் இந்து நாடார், கிறிஸ்தவ நாடார், தாழ்த்தப்பட்டோர், தேவர், யாதவர், பிள்ளை, முஸ்லிம் என்று பல்வேறு சாதியினர் கலந்திருக்கிறார்கள். வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற இடத்தில் இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

 

nellai



26 பேர் களத்தில் இருந்தாலும், தி.மு.க.வின் ஞானதிரவியம், அ.தி.மு.க.வின் மனோஜ்பாண்டியன், அ.ம.மு.க.வின் மைக்கேல் ராயப்பன் என மும்முனைப் போட்டியே நிலவுகிறது. சிறுபான்மையினர் வாக்கு அதிகம் இருப்பதால்தான் பயந்துபோய் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்தை கேட்டு வாங்கியதாக கூறுகிறார்கள்.

 

nellai



தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் கிறிஸ்தவ நாடார். அ.தி.மு.க.வும் தனது பங்கிற்கு கிறிஸ்தவ நாடாரான மனோஜ்பாண்டியனை அறிவித்தது. அ.ம.மு.க.வோ முதலில் ஞானஅருள்மணியை அறிவித்துவிட்டு பின்னர் மைக்கேல்ராயப்பனை வேட்பாளராக்கியது. மும்முனைப் போட்டியின் வெப்பம் தாளமாட்டாத மனோஜ்பாண்டியன் வேட்புமனு பரிசீலனையின்போது அ.ம.மு.க. வேட்பாளர் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டால் நேருக்கு நேர் போட்டியாகிவிடும், சமாளிக்கலாம் என்று நினைத்து எதிர்ப்புத் தெரிவித்தும் பலிக்கவில்லை. 

 

nellai



தனது தந்தை காலத்திலிருந்தே தொகுதியில் அறிமுகமானவர், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது சில நல்ல காரியங்களை நிறைவேற்றியவர், பெரிய குற்றச்சாட்டு இல்லாதவர் என்றாலும், மனோஜ்பாண்டியனின் பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லை. கட்சியினர் மத்தியில் சுணக்கம் இருக்கிறது. ஆர்.சி. கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த மனோஜ்.. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. அமைத்த கூட்டணியால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் ஆதரவை சுத்தமாக இழப்பார் என்கிறார்கள். அ.ம.மு.க.வின் மைக்கேல் ராயப்பனும் கிறிஸ்தவர் என்பதால் அ.தி.மு.க. வாக்குகளைப் பெரியஅளவில் பிரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இரட்டை இலை கைகொடுக்கும் என்று மனோஜ் நம்புகிறார். இருந்தாலும் அது எவ்வளவுதூரம் பலனளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், மனோஜ், தனது பிரச்சாரத்தில் மோடியின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்து வாக்குக் கேட்கிறார். இது பா.ஜ.க.வினரை கடுப்பேற்றுகிறது. 

தேவரான மைக்கேல் ராயப்பன், மனோஜுக்கு முழுஎதிரியாக கருதப்படுபவர். அ.தி.மு.க.வில் இருந்த தேவர் மற்றும் சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே, பெரிய அளவில் வாக்குகள் சிதற வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். கடந்த தேர்தல்களில் சொந்தப் பணத்தைச் செலவழித்த ராயப்பன், இப்போது செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறார். 

மனோஜ்பாண்டியனுக்கு எதிரான சிறுபான்மையினர் மனநிலை, அ.தி.மு.க. வாக்குகளை பிரிக்கும் அ.ம.மு.க. வேட்பாளர் என்று... தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்துக்கு சாதகமான அம்சங்கள் பல இருக்கின்றன. தொகுதி வாக்காளர்களில் அதிக சதவீதம் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவரான ஞானதிரவியம், ஆரம்பகால தி.மு.க. புள்ளி ஆவார். ஆவரைக்குளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிசினஸ் பிரமுகரான இவர் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். தொகுதியின் பல்வேறு மட்டத்திலிருக்கும் தி.மு.க.வின் வாக்கு வங்கிகள், கௌரவமான காங்கிரஸ் வாக்குகள், வி.சி.க., இஸ்லாமிய அமைப்புகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் என மதச்சார்பற்ற கூட்டணியின் ஒருங்கிணைப்பு வாக்குகளை மொத்தமாக கொண்டு சேர்க்கும். இருந்தாலும் போட்டியிட வாய்ப்புக்கிடைக்காத காங்கிரஸின் இரண்டு எக்ஸ் எம்.பி.க்களின் அதிருப்தி மனப்பான்மை குறித்து தலைமைக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்கள். 

கலைஞர் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நம்பியாறு, கருமேனியாறு, பச்சையாறு நதிகள் இணைப்பு மற்றும் வெள்ளநீர் கால்வாய் வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டது. தி.மு.க. வேட்பாளரான ஞானதிரவியம், "இந்தத் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்' என்று தனது பரப்புரையில் டார்கெட் செய்கிறார். அது வாக்காளர்களை ஈர்த்திருக்கிறது. இப்போதைய நிலையில் மும்முனைப் போட்டியில் முந்துகிறார் தி.மு.க.வின் ஞானதிரவியம்.