சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
13 வயது சிறுமி ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சென்னை ஹவுஸ் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி அந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய உடன் பட்டினம்பாக்கம் பகுதியில் நின்று கொண்டிருந்த பொழுது போலீஸ் வாகனம் ஒன்று அங்கு நின்று கொண்டிருந்தது. அங்கு சென்று உதவி கேட்ட பொழுது காவல் வாகனத்தில் இருந்த காவலர் தன்னை பட்டினம்பாக்கம் காவல் நிலையம் அருகே இருக்கக்கூடிய போக்குவரத்து போலீஸ் பூத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பின்னர் மந்தைவெளி வரை காவல் வாகனத்தில் வைத்து அழைத்துச் சென்ற பொழுதும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சிறுமி தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமி கொடுத்த தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பாலியல் தொல்லை கொடுத்தது மயிலாப்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் காவலர் ராமர் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதியான நிலையில் காவலர் ராமன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையை சேர்ந்த நபரே 13 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.