மாமன்னன் திரைப்படம் குறித்த பல்வேறு கருத்துக்களை நம்மோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாலின் பகிர்ந்துகொள்கிறார்.
மாமன்னன் திரைப்படம் ஒரு பட்டியலின சட்டமன்ற உறுப்பினரின் இன்னல்களையும் துன்பங்களையும் பதிவு செய்திருக்கிறது. இதற்கு முன்பு யாரும் பேசாத விஷயங்களை இந்தப் படம் பேசியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைப் பேசியதில் மாமன்னன் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. கிணற்றில் குளித்ததற்காக சிறுவர்களைக் கல்லெறிந்து கொல்வதாக இந்தப் படத்தில் காட்டியிருக்கும் காட்சி உண்மையிலேயே நடந்த ஒன்றுதான். படத்தின் ஒவ்வொரு காட்சியும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைக் காட்டுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேசி வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியலை இந்தப் படத்தின் மூலம் மக்களின் முன் எடுத்து வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிறந்த ஒரு படத்தை எடுத்த மாரி செல்வராஜை விமர்சிப்பவர்கள் தான் இங்கு அதிகமாக இருக்கிறார்கள். மாமன்னன் படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ள அண்ணன் வடிவேலு அவர்களுக்கு நிச்சயமாக விருது கிடைக்கும். இந்த சாதி அமைப்பை உடைப்பதற்காகத் தான் இத்தனை ஆண்டு காலமாகப் போராடி வருகிறோம்.
அதிகாரத்தின் மூலம் தான் சமூக விடுதலையை அடைய முடியும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியுள்ளார். அதையே தான் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்களும் கூறுகிறார். இந்த நீண்ட போராட்டத்தில் எங்களுடைய இலக்கை நாங்கள் கண்டிப்பாக அடைவோம். மாமன்னன் படத்தில் வடிவேலு தேர்தலில் நிற்கும்போது சந்திக்கும் பிரச்சனைகளை நிஜத்தில் தலைவர் திருமாவளவன் அவர்களும் சந்தித்துள்ளார். உயர்சாதி அதிகார மையங்களை உடைப்பதற்கான பிரச்சாரத்தை எளிய மக்களிடம் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வந்த நிகழ்வு இங்கு நடந்திருக்கிறது. எனவே ஒருநாள் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெரிய கட்சிகள் எங்களை ஒடுக்க நினைத்தாலும் நாங்கள் யாரிடமும் விலைபோகவில்லை. நாங்கள் வலிமையாக நிற்கிறோம். வேங்கைவயல் பிரச்சனையை இன்றுவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும் தான் பேசி வருகிறது. வேறு எந்தக் கட்சியும் பேசவில்லை.