தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக தரப்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். பிரச்சார களத்தில் பேசும்போது திமுக தரப்பு தங்களைப் பழிவாங்கும் வகையில் பல்வேறு வழக்குகளை தங்கள் மீது போடுவதாகவும், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது திமுகவை பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகளைப் போட்டிருக்கலாம், ஆனால் அப்படியான எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று கூறியிருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறுவதைப் போன்று அவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்கே போடவில்லையா? என்பது குறித்து அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுகவை வெற்றி பெற வைக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். அதிமுகவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற வைப்போம் என்று அவர் தொடர்ந்து கூறிவருகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டதாக கூறினீர்கள். ரொம்ப மகிழ்ச்சியான செய்தி. ஆனால் அதிமுகவுக்கு இல்லை, திமுகவுக்குத்தான். ஏனென்றால் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அவர் பிரச்சாரம் செய்தபோது யாருக்கு அது சாதகமாக போனது என்று நமக்குத் தெரியும். குறிப்பாக திமுக, தாங்கள் எந்த அளவுக்கு வெற்றிபெறுவோம் என்ற சந்தேகத்துடன் இருந்திருப்பார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தவுடன் அவர்களும் தங்களின் வெற்றியை தற்போது உறுதி செய்துள்ளனர். அதிமுகவுக்கு ஒருபோதும் அவர் வெற்றியைப் பெற்றுத்தரப் போவதில்லை.
ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்குத் தொடர்ச்சியாக சென்றுவருகிறார். மறுபுறம் ஓபிஎஸ் அமைதியாக இருக்கிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அவர் பெரிய அளவில் பிரச்சாரத்துக்குப் போகவில்லை. தன்னுடைய தொகுதியில் மட்டும் தீவிர பிரச்சாரம் செய்தார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் ஏதற்கு சார் வரனும். சட்டமன்றத் தேர்தலில் அவர் தொகுதியில் உள்ளடி வேலை பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும், அவர் தனது தொகுயில் மட்டும் பிரச்சாரம் செய்தார். அவரையே தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளை அப்போது செய்தார்கள். அதையெல்லாம் மீறிதான் தற்போது அவர் வெற்றுபெற்றிருக்கிறார். எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அவர் வர வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் வந்து என்ன பிரயோஜனம், மணிகள்தான் வர வேண்டும். வேலுமணி, தங்கமணி, இவர்கள் இருவரிடத்திலும்தான் எல்லாம் இருக்கிறது. எனவே அவர் பிரச்சாரத்துக்குப் போனாலும், போகாவிட்டாலும் ரிசல்ட் நமக்குத்தான் முன் கூட்டியே தெரிந்துவிட்டதே! எனவே இவர்கள் பிரச்சாரத்துக்குப் போனாலும் போகாவிட்டாலும் அதனால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. அவர்கள் மீது ஒருபுறம் சசிகலா வழக்கு போட்டிருக்கிறார், மறுபுறம் நான் வழக்கு போட்டிருக்கிறேன். எனவே அதிமுக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
நீங்கள் வழக்கு என்று கூறியவுடன்தான் நினைவுக்கு வருகிறது. தற்போது திமுக ஆட்சியில் எங்கள் மீது தேவையில்லாத வகையில் பழிவாங்கும் வகையில் பல்வேறு வழக்குகளைப் போடுவதாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? அதிமுக ஆட்சியில் திமுக மீது வழக்கு போடவில்லையா?
எடப்பாடி பழனிசாமிக்கு வழக்குப் போட எல்லாம் தெரியாது. ஒரு கன்னத்தைக் காட்டு என்றால் எடப்பாடி பழனிசாமி மறு கன்னத்தையும் காட்டுவார். அப்புறம் எப்படி ஸ்டாலின் மீது 14 வழக்குகள் போட்டார். இவர்தானே வழக்கு போட்டது. பிறகு நாங்கள் எல்லாம் வழக்கே போடவில்லை என்று எதை அடிப்படையாக வைத்து கூறுகிறார். 100க்கும் அதிகமான வழக்குகளை எதிர்க்கட்சிகள் மீது மாறி மாறி போட்டாரே அது அவருக்கு மறந்துவிட்டதா? காலையில் எழுந்தவுடன் அவருக்கு வழக்கு போடுவதுதானே வழக்கம். இன்றைக்கு என்ன புதிதாக அவர் கரடி விடுகிறார் என்று தெரியவில்லை. சேலத்தில் நோட்டீஸ் கொடுத்ததினால் தேச துரோக வழக்கு வரை பதிவு செய்துள்ளார்கள். எனவே திமுக அரசைக் குற்றம் சொல்ல எந்த தகுதியும் இவருக்கு இல்லை.