Published on 22/08/2018 | Edited on 22/08/2018
சென்னை டி.நகரில் எந்நேரமும் பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும் உஸ்மான் சாலை யார் பெயரால் அழைக்கப்படுகிறது தெரியுமா? பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சென்னை மாகாணம் அல்லது மெட்ராஸ் பிரசிடென்ஸியில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைச்சராகவும், பின்னர் மாகாணத்தின் தற்காலிக கவர்னராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
1884 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த முகமது யாகூப் சாகிப் பகதூர் என்பவரின் மகனாக பிறந்தவர் கான் பகதூர் சர் முகமது உஸ்மான். இவர்களுடைய பூர்வீகம் தஞ்சாவூர் என்று தெரியவருகிறது. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.
சென்னை மாகாணத்தை பொப்பிலி ராஜா என்று அழைக்கப்படும் சர் ராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி செய்த போது அந்த அமைச்சரவையில் உஸ்மான் இடம்பெற்றிருந்தார். 1934ம் ஆண்டு மே 16ம் தேதி சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
சென்னை மாகாண மாஜிஸ்திரேட் ஆகவும், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், சென்னை நகர செரீப்பாகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 1925 முதல் 1934 வரை சென்னை மாகாண நிர்வாகக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகவும், 1942 முதல் 1946 வரை பிரிட்டிஷ் வைசிராயின் நிர்வாகக்குழுவில் உறுப்பினராக மத்திய அரசிலும் பணியாற்றினார்.
1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி மரணமடையும்வரை மெட்ராஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். 1925 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கல்வி அமைப்பு உருவாகக் காரணமான அரசுக் குழுவுக்கு இவர் தலைவராக இருந்தார். அரசுக்கு இவர் அளித்த அறிக்கை உஸ்மான் அறிக்கை என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்ட மிக முக்கியமான முதல் சுகாதார அறிக்கை அதுதான். உஸ்மானை யுனானி மருத்துவர் என்றே மரியாதையாக அழைப்பார்கள். இத்தனைக்கும் அவர் மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டதில்லை. அவருடைய மனைவி வழி மற்றும் பெற்றோர் வழி தாத்தாக்கள் யுனானி வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர்கள்.
உஸ்மானின் மிகப்பிரமாண்டமான பங்களா தேனாம்பேட்டையில் அமைந்திருந்தது. அதில்தான் அவருடைய கூட்டுக் குடும்பம் வசித்தது. அரண்மனை போன்ற அந்த பங்களா 8000 சதுர அடி பரப்பில் அமைந்திருந்தது. தோட்டத்துடன் அமைந்த அந்த பங்களாவில் வேலைக்காரர்களுக்கான குடியிருப்புகளும் அமைந்திருந்தன.
1993ம் ஆண்டு அந்த பங்களா இடிக்கப்பட்டு அபார்ட்மெண்டுகள் கட்டப்பட்டன. உஸ்மான் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அவர் தனது தம்பியின் மகனையும் மகளையும் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தத்துப் பிள்ளையை திருமணம் செய்த பாத்திமா யாகூப்பிற்கு இப்போது 76 வயது ஆகிறது. 1953ல் பாத்திமாவுக்கு திருமணம் நடைபெற்றபோது அவருடைய வயது 10. 1960 ஆம் ஆண்டு பாம்பு கடித்ததால் உடல்நலிவுற்று உஸ்மான் இறந்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த பிறகு அவருடைய சொத்து தொடர்பான வழக்குகளுக்காக முதன்முறையாக அரசு பஸ்களில் பயணிக்க நேர்ந்ததாக சொல்கிறார் அவருடைய மனைவி பாத்திமா.
தனது கணவரின் பெயர் மறக்கப்பட்டுவிட்டதைக்கூட பாத்திமா பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. தனி நபருக்காக புகழ் கிடைக்கக்கூடாது. அவருடைய பணிகளைத்தான் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று உஸ்மான் சொல்வாராம்.
நன்றி - The Hindu