கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசிற்கும், மத்திய அரசிற்கும் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிய கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இன்னும் பல கிராமங்கள் மீளமுடியாத நிலையில் பெரும் துயரை சந்தித்து வருகிறது. கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளால் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கஜா புயல் பாதிப்பால் 46 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரண பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
குறிப்பாக நாகை மற்றும் வேதாரண்யத்தில் அதன் பாதிப்பும் அதிகமாக உள்ளதால் அதிகமாக சேதமடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு நிவாரண நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவெடுத்து பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று புயல் சேத பகுதிகளை நேரில் பார்வையிட சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மற்றும் பட்டுக்கோட்டை போன்ற பாதிப்பு பகுதிகளுக்கு செல்லாமல் பாதியிலேயே பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்நிலையில் கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி அழகுமணி என்பவரால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு இதுவரை செய்த உதவிகள் என்னென்ன? கஜா புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிய உதவிகள் என்னென்ன? அப்படி தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தால் அந்த கோரிக்கைகளின் மீதான மத்திய அரசின் நடவடிக்கை என்னென்ன? என சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. புயல் பாதிப்புகளை சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி. இந்த கேள்விகளுக்கு வரும் 22-ஆம் தேதி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.