உதயநிதி தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று நீண்ட நாட்களாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றதைப் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சருக்குக் கொடுக்கப்பட்டுள்ள துறை குறித்தும், உதயநிதி மீதான விமர்சனம் குறித்தும் திமுகவைச் சேர்ந்த விஷ்ணு பிரபுவிடம் கேட்டபோது, " உதயநிதி அவர்களுக்கு நல்ல துடிப்பாக இயங்கக்கூடிய துறை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது வைக்கப்படுகின்ற அனைத்து விதமான விமர்சனங்களையும் அவர் உடைத்தெறிந்துவிட்டு அவர் மேலே வருவார்.
அவரை விமர்சனம் செய்யும் அனைவரும் மிகக் குறுகிய காலத்தில் அதை உணர்வார்கள். அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களில் குறை இருந்தால் சொல்லுங்கள். அதில் நிர்வாக குளறுபடிகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அதை விட்டுவிட்டு அவரைச் சீண்ட வேண்டும் என்ற நோக்கில் பதவிக்கு வரக்கூடாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரண்டிலும் உதயநிதி அவர்களின் உழைப்பு இல்லை என்று இவர்களால் சொல்ல முடியுமா? திமுக ஆட்சிக்கு வருவதற்கு அவரால் முடிந்த அனைத்து முயற்சிகளைக் கடுமையாக எடுத்தார்.
தான் சார்ந்த கட்சிக்காக உழைப்பவர்களுக்குக் கட்சி எவ்வித அங்கீகாரமும் வழங்கக்கூடாது, அப்படி வழங்கினால் அதை வாரிசு என்று பேசுவது எல்லாம் வெறுப்பு பேச்சுக்களாக இருக்குமே தவிர அதில் எந்த நல்ல நோக்கமும் இருக்காது. பாஜக அண்ணாமலையைப் போல் உதயநிதி மணிக்கணக்கில் பேசமாட்டார். ஆனால் உதயநிதியின் செயல் பேசும். நடந்து முடிந்த இரண்டு தேர்தலிலும் திமுக வெற்றிக்கு அவரின் பிரச்சாரம் மிக முக்கியக் காரணமாக இருந்தது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இப்போது இவர் மீது வாரிசு என்று வைக்கப்படுகின்ற அனைத்து விமர்சனங்களுக்கும் அவர் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் தக்க பதிலடி தருவார்" என்றார்.