அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூர் அருகே உள்ள செண்டோசா தீவில் ஒரு சொகுசு ஹோட்டலில் சந்தித்தனர். இந்தத் தீவின் சிறப்பம்சம் என்ன என்றால் மற்ற தீவுகளில் இருந்து ஒதுங்கியும், தனிமையாகவும் இருக்கிறது. செண்டோசா என்னும் இத்தீவுக்கு அமைதி என்று பொருள்படுகிறது. ஆனால், இந்தத் தீவு அரை நூற்றாண்டுக்கு முன்பு என்னவாக அழைக்கப்பட்டது தெரியுமா? 'புலாவ் பெலகங் மாடி' என்று அழைக்கப்பட்டது. அப்படியென்றால் மரணத்தீவாகும். பல நூற்றாண்டுகளாக இத்தீவு ஒரு மர்மமான ஒன்றாகவே இருந்து வந்தது. கொள்ளைக் கூட்டங்களுக்கு, உலகப் போருக்கு என எதிர்மறையாகவே இந்தத் தீவு பயன்பட்டுள்ளது. தற்போது இரு நாடுகளின் பலவருட பகையைத் தீர்க்கும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பயன்பட உள்ளது.
வருடம் தோறும் 20 மில்லியன் சுற்றுலாவாசிகள் வந்து செல்லும் இந்தத் தீவு ஒரு காலத்தில் யாருமே போகாத மர்மத்தீவாக இருந்திருக்கிறது. செண்டோசா தீவின் பழைய பெயருக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று கடற்கொள்ளை. 500 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்தத் தீவில் கடற்கொள்ளையர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். போரில் வீரமரணமடைந்த வீரர்களை மொத்தமாக இந்தத் தீவில் புதைத்ததும் இந்தத் தீவின் பழைய பெயருக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
கதைகளாக சொல்லப்பட்ட இந்த விஷயங்களைத் தாண்டி வேறு விஷயங்களும் இருக்கின்றன. 18ஆம் நூற்றாண்டில் இந்தத் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் முக்கால்வாசிப் பேர் மடிந்தனர். மர்மக் காய்ச்சல் ஒன்று தாக்கியதில் இந்தத் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமானது. செண்டோசா தீவின் மரண ஓலம் ஓயவில்லை, இரண்டாம் உலகப் போரிலும் சிக்கிக்கொண்டது. 1942ஆம் ஆண்டு சிங்கப்பூர் என்ற நாடு ஜப்பானிடம் சிக்கொண்டபோது, ஆஸ்திரேலிய மற்றும் ஆங்கிலேயே போர் கைதிகளை அடைத்துவைக்க ஒரு சிறைச்சாலையாக பயன்பட்டுள்ளது இத்தீவு. ஜப்பானுக்கு எதிராக செயல்பட்ட சிங்கப்பூர் சீனர்களை கொத்துக்கொத்தாக கொன்றுகுவிக்கும் இடமாகவும் இது இருந்துள்ளது.
செண்டோசாவில் அழகிய இடமாக இருப்பது சிலோசோ கோட்டை. அது இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரைத் தாக்க வருபவர்களை எதிர்கொண்டு ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் இடமாக இருந்தது. அதை நினைவுபடுத்தும் வகையில் போரில் உபயோகிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இது அனைத்தும் 1970ஆம் ஆண்டு மாற ஆரம்பித்தது. சிங்கப்பூர் அரசாங்கம் தங்களின் நாட்டை ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாக மாற்றிய போது இத்தீவையும் மாற்றி, செண்டோசா என்று அனைவரையும் கவர்வதுபோல் ஒரு பெயரை வைத்தனர். இப்பொழுது சுற்றுலாவுக்கு ஒரு இடமாக இருக்கிறது, சிங்கப்பூரின் கோடீஸ்வரர்கள் தங்குவதற்கும் விருப்பமான ஒரு இடமாக இருக்கிறது. இங்கு ஒரு வில்லாவின் விலை 37 மில்லியன் டாலர்களில் இருந்து தொடங்குகிறது. கொடூரமாகவும், இருள்சூழ்ந்த இடமாகவும் இருந்த தீவில் தற்போது 17 நட்சத்திர ஹோட்டல்களும், கோல்ப் மைதானங்களும், சிங்கப்பூரின் யுனிவர்சல் ஸ்டுடியோவும் இருக்கிறது.
இப்படி மர்மம் நிறைந்ததாக முன்பு இருந்த இந்தத் தீவில் உலகின் புரியாத புதிராக இருக்கும் இரண்டு தலைவர்கள் சந்தித்து இந்தத் தீவுக்கு இன்னொரு வரலாற்று சிறப்பைத் தந்திருக்கிறார்கள்.