Skip to main content

வெனிசூலாவை தாக்கத் துடித்த ட்ரம்ப்! தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

அமெரிக்க அதிபராக இருக்க ஒரே ஒரு தகுதி இருந்தால் போதும். ஏதேனும் ஒரு நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் அல்லது ஒரு நாட்டில் சண்டையை மூட்டிவிட வேண்டும்.

 

அமெரிக்காவின் பொருளாதாரமே ராணுவ தளவாடங்கள் விற்பனையில்தான் இருக்கிறது. உலகம் அமைதியாக இருந்தால் எப்படி ஆயுதவியாபாரம் நடக்கும்? ஆயுத உற்பத்தியாளர்களின் கைக்கூலியாக செயல்படுபவர்கள்தான் அமெரிக்க அதிபராக இருக்க முடியும் என்பது வரலாற்று உண்மை.

 

trump

 

 

 

அந்த அடிப்படையில்தான் ட்ரம்ப்பும் செயல்பட முடியும். ஆனால், மற்ற அதிபர்களைக் காட்டிலும் ட்ரம்ப் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி என்பதை அவருடைய நடவடிக்கைகளில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

 

அவர் அதிபரானவுடன் தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் ஆளும் சோசலிஸ்ட் அரசுக்கு எதிரான கலவரத்தை தீவிரமாக தூண்டிவிட்டார். அதிபராக மதுரோ இருந்தாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், 112 உறுப்பினர்களைக் கொண்ட 13 கட்சிகள் கூட்டமைத்து அரசின் மக்கள் நலச் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தன.

 

அவர்களுடைய வன்முறைப் போராட்டத்தை அமெரிக்கா ஆதரித்தது. அந்த போராட்டத்தை அதிபர் மதுரோ ராணுவ உதவியுடன் அடக்கினார். புதிய அரசியல்சட்டத்தை இயற்ற மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். அந்தத் வாக்கெடுப்பையும் எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தை கண்டிக்காத ட்ரம்ப், அதிபர் மதுரோ அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தார். அவருடைய வங்கிக் கணக்குகளை முடக்குவதாக அறிவித்தார். எதைப்பற்றியும் கவலைப்படாத மதுரோ பொதுவாக்கெடுப்பை நடத்தி முடித்தார். அதில் அவருக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பளித்தனர்.

 

மதுரோ சர்வாதிகாரியாகிவிட்டார் என்ற ட்ரம்ப், வெனிசூலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  அவர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது, வெனிசூலா மீது போர் தொடுத்தால் என்ன என்று கேட்டு, அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.

 

trump

 

5 நிமிடமே நடந்த இந்த ஆலோசனையில் அனைத்து அதிகாரிகளும் ட்ரம்ப்பின் யோசனையை ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர். வெனிசூலா மீது போர்தொடுப்பது தென்னமெரிக்காவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கும். உலக அளவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பும். தென்னமெரிக்காவில் சோசலிஸ்ட்டுகளின் எழுச்சி அதிகரித்துள்ள நிலையில் தென்னமெரிக்க கூட்டமைப்பை வலுப்படுத்தும் என்று கூறினார்கள். அப்போதும் நிலைமையின் தீவிரம் அவருக்கு புரியவில்லை. பிறகு தனித்தனியாக அதிகாரிகளிடம் உறுதி கேட்டுக்கொண்டு ஆலோசனைக் கூட்டத்தை முடித்தார் என்று 2018 ஜூலை 7 ஆம் தேதி தகவல்கள் கசிந்தன.

 

வெனிசூலா விவகாரத்தில்தான் இப்படி என்றில்லை. வடகொரியாவுக்கு எதிராக ட்ரம்ப் பேசிய யுத்தவெறிப் பேச்சுக்களையும், ட்வீட்டுகளையும் மறந்துவிட முடியாது. 1953 ஆம் ஆண்டிலிருந்து வடகொரியாவை ரவுடி நாடு என்று முத்திரை குத்தி, தென் கொரியாவை தக்கவைத்து வந்தது. தனது ராணுவ தளத்தை அமைத்து, கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டிக்கொண்டிருந்தது. அமெரிக்காவின் அட்டூழியத்தை காலங்காலமாக அனுபவித்த வடகொரியா ட்ரம்ப் அதிபரானதும் ஒரு முடிவோடு அணு ஆயுதத்தயாரிப்பை தீவிரப்படுத்தியது. அணு ஏவுகணை சோதனைகளை அடுத்தடுத்து நடத்தியது. அணுகுண்டுகளை வெற்றிகரமாக வெடித்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும், குறிப்பாக அமெரிக்க நகரங்களை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை சோதித்து வெற்றிபெற்றது.

 

 

 

வடகொரியாவின் நிறுவனத் தலைவரான கிம் உல் சுங், கிம் ஜோங் இல், ஆகியோரைக் காட்டிலும் 34 வயது இளைஞரான கிம் ஜோங் உன் அமெரிக்காவை தொடர்ந்து விடாமல் மிரட்டினார். இதையடுத்து, வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா.பொருளாதார தடையை அமெரிக்கா கோரியது. வடகொரியாவை அழித்துவிடுவேன் என்றும், தரைமட்டமாக்கிவிடுவேன் என்றும் ட்ரம்ப் கொக்கரித்தார். அதுமட்டுமின்றி, கிம் ஜோங்கை குள்ளப் பன்றி என்று மோசமான வார்த்தைகளால் திட்டினார்.

 

எதைப்பற்றியும் கவலைப்படாத கிம், வடகொரியா மீது கைவைத்தால் அமெரிக்க நகரங்களை அழிப்போம் என்றும் ட்ரம்ப்புக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் கிம் ஜோங் எச்சரித்தார்.

 

இருநாடுகளின் போக்கு அமெரிக்காவிலும், கொரியா தீபகற்பத்திலும் பதற்றத்தை உருவாக்கியது. தென்கொரியா அதிபரும், சீனா அதிபரும் அமைதி முயற்சியில் ஈடுபட்டனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய செலவாக தென்கொரியா இருக்கிறது. அந்த நாட்டைக் காப்பாற்ற அமெரிக்காதான் செலவு செய்கிறது. ஆனால், அமெரிக்காவையே மிரட்டுகிற அளவுக்கு வடகொரியா ராணுவ பலத்துடன் இருக்கிறது. இது தென்கொரியா மக்களிடம் பாரம்பரிய வீர உணர்வை அதிகரிக்க உதவியது. இந்நிலையில்தான் தென்கொரியாவுடன் தீடீரென்று நட்புக்கரத்தை நீட்டினார் கிம். தேவைப்பட்டால் ட்ரம்ப்புடன் பேசவும் தயார் என்று கூறினார்.