Skip to main content

கொள்ளையன் முருகனை பாதுகாத்த அதிகாரி யார்? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

இந்தியா முழுவதிலும் கொள்ளையடித்து வந்த பிரபல நகைக்கொள் ளையன் முருகன் மீது பல மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் அவன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், முருகனின் சொந்த ஊரான திருவாரூரில் மட்டும் அவன் மீது ஒரு வழக்குகூட பதிவாகவில்லை. அதுமட்டுமல்ல, அவனைப் பற்றிய தகவல் எதுவும் வெளியே கசியாமல் இத்தனை ஆண்டுகளும் திருவாரூரில் பாதுகாப்பாக இருந்தது எப்படி? தமிழகம், ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா என எங்கு கொள்ளை அடித்தாலும், பெங்களூருவில் மட்டும் முருகன் சரண்டர் ஆகும் மர்மம் என்ன?

 

incident



முருகனை பற்றி நன்குதெரிந்த வழக்கறிஞர் ஒருவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, "முருகனுக்கு பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் உள்ள சுபாஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற க்ரைம் பிரான்ச் போலீஸ்தான் முருகனின் மூளை என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறார்.

கொள்ளையடித்த நகைகளை விற்றுக் கொடுப்பது, வழக்குகளில் இருந்து தப்பிக்க வழக்கறிஞர்களை நியமிப்பது, போக்குவரத்துக்கு வாகனம், தங்கியிருக்க வீடு என முருகனுக்கு சகலமுமாக சுபாஷ் இருக்கிறார். முருகனை எந்த மாநில போலீசார் தேடிவந்தாலும், அவனை அவர்களிடம் சிக்காமல், பெங்களூருவில் உள்ள ஏதேனும் ஒரு வழக்கை தூசுதட்டி பெங்களூரு சிறையில் தள்ளி முருகனை தன் வசம் வைத்துக்கொள்வதே இவரது வழக்கம். திருச்சி லலிதா ஜுவல்லரி வழக்கிலும் முருகன் தமிழக போலீசிடம் ஆஜராகாமல் பெங்களூருவில் சரணடைந்ததும் இந்த யுக்தி தான்'' என்கிறார்.

 

incident



அவர் மேலும், "முருகன் மூலம் ஆதாயம் அடைந்து வந்த சுபாஷும், பெங்களூரு போலீசாரும் அடிக்கடி அவனைத்தேடி திருவாரூருக்கே வருவதுண்டு. அப்படித்தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவனை ஆம்புலன்ஸ் மூலம் கூட்டிச்சென்று மறைமுகமாக தனியார் மருத்துவமனையில் காஸ்ட்லியான சிகிச்சை அளித்து புதுவாழ்க்கை கொடுத்தனர் பெங்களூரு போலீசார். அந்த சமயத்தில் பல்லெல்லாம் கொட்டி கிழவனைப் போல எலும்பும் தோலுமாக இருந்தவனை, நல்ல தோற்றத்துடன் மாற்றியதும் பெங்களூரு காக்கிகள்தான்.

பெங்களூரு க்ரைம் பிரான்ச் போலீஸார் திருவாரூருக்கு வந்து சென்ற சமயத்தில்தான், அப்போது திருவாரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீஸார் ஒருவரோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் மூலமே முருகனும் திருவாரூர் தனிப்பிரிவு காக்கியும் நட்பாகியுள்ளனர். எய்ட்ஸ் நோயால் பாதிக் கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது முருகனுக்கு அந்த காக்கி மறைமுக உதவியாக இருந்ததும் திருவாரூர் காவல்துறை வட்டாரத்திற்கே தெரிந்த கதைதான்' என்கிறார் விவரமாக.

இதுகுறித்து திருவாரூர் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "திருவாரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இடையில் ஆறுமாதங்களை தவிர பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தனிப்பிரிவு எஸ்.ஐ. ஆக இருந்தவர்தான் மாதவன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி.யாக யார் வந்தாலும் அவரை மாதவன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார். எடுபுடியாக இருந்துதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். க்ரைம்மீட்டிங் நடந்தால் பகவதி மெஸ்ஸில் இருந்து எல்லாவகையான உணவுகளையும் ஏற்பாடு செய்துகொடுப்பதே அவர்தான். முருகன் நட்பு கிடைத்த பின்னர் இவர் திருவாரூர் அருகில் உள்ள அவரது ஊரில் ஐம்பது லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டியிருக்கிறார். சென்னையில் பெருங்களத்தூருக்கு பக்கத்தில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். இரண்டு வேன் ஸ்கூல் சவாரிக்கு விட்டுள்ளார். குவாலிட்டியான கார்களை வைத்திருக்கிறார். நிறைய இடங்களில் பிளாட் வாங்கி குவித்துவைத்திருக்கிறார்.


முருகன் திருவாரூருக்கு வந்துவிட்டாலே மாதவன்தான் சகலமும். அப்போது எஸ்.பி.யாக இருந்த மயில்வாகனனும் இதைக் கண்டுகொள்ளவில்லை, புதிய எஸ்.பி. ஜெயச்சந்திரன் திருவாரூருக்கு வந்தபிறகு, முருகனோடு மாதவனுக்கு தொடர்பு இருப்பதை தெரிந்து கண்டித்தார். ஆனாலும் நட்பு தொடர்ந்ததால், மாதவனை நன்னிலத்திற்கு தூக்கி எறிந்தார்.

ஜெயச்சந்திரன் மாற்றலாகி எஸ்.பி. மயில்வாகனன் வரும்வரை திருவாரூர் பக்கத்தில் தலை காட்டவில்லை மாதவன். மயில்வாகனன் வந்தபிறகு அவருக்கு சகலமுமாக இருந்தார். அவர் வீட்டுக்கு காய்கறி, மீன், வாட்டர்கேன் வரை வாங்கிக்கொடுத்தவர் மாதவன்தான். முருகன் விவகாரம் டி.ஐ.ஜி.வரை செல்ல மாதவனை திருச்சி உணவு ஊழல் தடுப்புப் பிரிவுக்கும், எஸ்.எஸ்.ஐ. தியாகராஜன், கண்ணதாசன் ஆகிய இருவரையும் நாகைக்கும் மாற்றினார். ஆனால் அவர்கள் மூன்று பேரும், மூன்றுமாதத்தில் திருவாரூருக்கே வந்துவிட்டார்கள். மாதவன் வேறு துறைக்கு மாறிவிட்டார்.


ஒரு தனிப்பிரிவு போலீஸாரின் வேலை என்ன? அவர் சார்ந்திருக்கும் காவல்நிலைய பகுதிகளில் என்ன நடக்க உள்ளது என்பதை முன்கூட்டியே கூறுவதும், குற்றவாளிகளின் நடமாட்டம், அவர்களின் பின்புலம் குறித்து அனைத்தையும் சேகரித்து பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் முருகன் திருவாரூர் மாவட்டத்தில் கொள்ளையடிக்கவில்லை என காரணம் கூறியே இருந்துவிட்டனர். திருடியவன் குற்றவாளி என்றால் அவனை காட்டிக்கொடுக்காமல் பாதுகாப்பு கொடுத் தவர்களும் குற்றவாளிகள்தான்'' என்கிறார் விவரமாக.

திருச்சி தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவரோ, "முருகனுக்கும் மாதவனுக்கும் உள்ள உறவு விவகாரம் தெரியவந்துள்ளது. லலிதா ஜுவல்லரி, பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கில் எல்லா விசாரணையும் முடிந்ததும் கடைசியாகத்தான் அவரை தொடுவோம்'' என்கிறார்கள். திருவாரூர் நகர காவல் நிலையத்தில் தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. ஆக இருந்தவர்களில் ஒருவரான கண்ணனிடம் இதுகுறித்து கேட்க, அவரை தொடர்புகொண்டோம். அவர் பலமுறை போனை ஆன்செய்து காதில் வைத்துக்கொண்டு பேசத் தயங்குகிறார்.