Skip to main content

நான் ஏன் ஜோசியம் சொல்லணும்? -துரைமுருகன் EXCLUSIVE பேட்டி! 

Published on 16/10/2020 | Edited on 16/10/2020
duraimurugan

 

 

தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் துரைமுருகன். தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவரின் கருத்துகள் நையாண்டிகளாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருக்கும். சர்ச்சைகளை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. நக்கீரனுக்கு பேட்டி என்றதும் உற்சாகமானார்.

 

அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்று செயல்படும்போது உங்களின் உணர்வுகள் எப்படிப்பட்டதாக இருக்கிறது?

 

அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதற்கு காரணம், அறிஞர் அண்ணாவும் நாவலரும் பேராசிரியரும் எங்கள் தலைவர்கள். அதுமட்டுமல்ல தி.மு.க. என்கிற இயக்கத்தை உருவாக்கியவர்கள். அவர்களிடம் நான் தொண்டனாக இருந்தவன். உருவாக்கியவர்களே இருந்த பதவியில் தொண்டனான நான் இருப்பது மலைப்பாக இருக்கிறது. உழைத்த உழைப்புக்கு கட்சி ஒரு அங்கீகாரம் தந்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியும் இருக்கிறது. ஆக, அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வு.

 

கலைஞர் தலைமையில் பணிபுரிந்துள்ளீர்கள்; அவரது மகன் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் பணிபுரிகிறீர்கள். இருவரின் தலைமையிலும் ஏதேனும் வேறுபாடுகள் அல்லது ஒற்றுமையை காண்கிறீர்களா?

பெரிய வேறுபாடுகள் எதுவும் தெரியவில்லை. வயதில் வேண்டுமானால் தலைவருக்கும், தளபதிக்கும் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், அணுகுமுறையில், கட்சி தொண்டர்களை அரவணைப்பதில், கட்சியில் முடிவுகளை எடுப்பதில், மூத்த தலைவர்களோடு உரையாடுவதில் கலைஞர் எப்படி இருந்தாரோ அப்படித்தான் ஸ்டாலினும் இருக்கிறார். பொருளாளராக நான் இருந்தபோதும், பொதுச்செயலாளராக இருக்கிறபோதும் கட்சியில் எந்த முடிவுகளாக இருந்தாலும் என்னிடம் கலந்து பேசிதான் எடுக்கிறார் ஸ்டாலின்.

 

தொண்டர்களின் வலிமையால் கட்டமைக்கப்பட்ட தி.மு.க. என்கிற அரசியல் இயக்கத்துக்கு ஆலோசனைகளை பெற ஐ-பேக் என்கிற தனியார் நிறுவனம் அவசியம்தானா?

அரசியலில் கடந்த காலத்திற்கும் இப்போதைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மோடி, எடப்பாடி என இப்போது எல்லா கட்சியினருமே அந்த நிலையைத்தான் பின்பற்றுகிறார்கள். ஆனால், ஏதோ ஐ-பேக் வகுத்துக் கொடுத்ததை, எழுதிக் கொடுத்ததை அப்படியே நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என நினைப்பது சரியல்ல. எங்களுக்கென்று பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. எங்களுக்கென்று அடிமட்ட தொண்டர்களின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அதன்மூலம் எங்களுக்கு கருத்தும், பொதுவெளியிலிருந்து கிடைக்கிற கருத்தும் ஒத்து இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறோம்.

 

தி.மு.க.விலுள்ள பதவிகளுக்கு சீனியர்கள் தவிர்க்கப்பட்டு இளைஞரணியின் சிபாரிசுகளில் பூர்த்தி செய்யப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு தொண்டர்களிடம் இருக்கிறதே?

எங்கள் தொண்டர்கள் அப்படி சொல்வதில்லை. எங்களை எதிர்ப்பவர்கள் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சீனியரான நான் பொதுச் செயலாளராக இருக்கிறேன்; டி.ஆர்.பாலு பொருளாளராக இருக்கிறார்; கே.என்.நேரு முதன்மைச் செயலாளராக இருக்கிறார்; ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலெட்சுமி ஆகியோர் துணை பொதுச்செயலாளராக இருக்கின்றனர். ஆக, சீனியர்களை எங்கே கை விட்டிருக்கிறோம்? ஆனால், இளைஞர்களும், மாணவர்களும் தான் வருங்காலத்தில் இந்த இயக்கத்தை தாங்குகிற தூண்கள். 1966-லேயே கள்ளக்குறிச்சி மாநாட்டில் கொடியேற்ற அண்ணா என்னை அனுமதித்தார். அன்றைக்கு எத்தனையோ சீனியர்கள் இருந்தார்களே! துரைமுருகனை போட்டுட்டாரே என யாரும் கேட்கலை. அந்த வாய்ப்புதான் கட்சியில் எனக்கு கிடைத்திருக்கும் வளர்ச்சி. அது போலதான் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகளை கொடுத்து உருவாக்க வேண்டும்.

 

ஆனால், கடந்த 15 ஆண்டு களில் தி.மு.க.வை நோக்கி மாணவர்கள், இளைஞர்களின் வருகை குறைந்து விட்டதே?

 

தி.மு.க. மாணவர் இயக்கத்தில் நீண்ட காலம் இருந்தவன் நான். மாணவர்களை வைத்து போராட்டங்களை நடத்தியவன். மாணவர்கள், நீறுபூத்த நெருப்பாக இருப்பவர்கள். ஒரு பிரச்சனை என வருகிறபோதுதான் கிளர்ந்து வருவார்கள். இளைஞரணியின் செயலாளராக உதயநிதி ஆனதற்கு பிறகு, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒவ்வொரு தொகுதியிலும் 10,000, 15,000 என லட்சக்கணக்கில் இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்து உறுப்பினர்களாகியிருக்கிறார்கள்.

 

தமிழகத்தில் திராவிட கட்சி களை வீழ்த்தி, காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் என்பது எந்த மாநில கட்சிகளை வீழ்த்த நினைக்கிறதோ, அந்த கட்சிகளுக்கு எதிராக வழக்குகள் தொடுப்பதும் ரெய்டுகள் நடத்துவதுமாக இருக்கிறதே?

 

இது ஒன்றும் புதுசு அல்ல! மத்திய சர்க்காரில் யார் இருந்தாலும், அவர்களை மிஞ்சிய சக்திகள் இருந்தால் அவர்கள்மீது வழக்கு போடுவார்கள். எங்களை மிசாவில் போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் சகஜம்.

 

2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலையாகி விட்ட சூழலில் அந்த வழக்கை மீண்டும் பா.ஜ.க. எடுத்திருப்பது தி.மு.க.வுக்கு சிக்கல் என கருதுகிறீர்களா?

சிக்கல் ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். அந்த வழக்கை மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் வாதாடுகிறார்கள். வழக்கு எப்படி போகுதுன்னு பார்ப்போம். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.

 

உங்கள் மகன் கதிர் ஆனந்த், தான் மிரட்டப்படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். அவரை மிரட்டுவது யார்? அதன் பின்னணி என்ன?

இதைப்பத்தி நானே அவரிடம் கேட்டேன். யாரோ ரெண்டு மூணு பேர் வந்திருக்காங்க. அதுல ஒருத்தர் தமிழ் பேசியிருக்கிறார். யார் நீங்க? கதவை தட்டாமல் கூட வந்திருக்கீங்களே என கேட்டிருக்கிறார். நாங்க சி.பி.ஐ. என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சி.பி.ஐ.ன்னா, இப்படித்தான் வருவீங்களா? வாரண்ட் இருக்கா காட்டுங்க? என கேட்க, இல்லை இல்லைனாங்க… அப்படி வரலை …ஃப்ரண்டா பார்க்க வந்திருக்கிறோம் என சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கதிர் ஆனந்த், நீங்க யாரும் எனக்கு ஃப்ரண்ட் கிடையாது; அப்புறம் எப்படி பார்க்க வந்தீங்க? என சொல்லியிருக்கிறார்.

 

அப்போது, நீங்க கூட்டணி யார் கூட சேரப் போறீங்கன்னு அவர்கள் கேட்க, அரசியலில் நான் இளம் மொட்டு; இதெல்லாம் எனக்கு தெரியாது என சொல்ல, உங்கப்பா பொதுச்செயலாளர்தானே, தெரியாதா என்று அவர்கள் கேட்க, அதை அவர்கிட்டே போய்க் கேளுங்க; எனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகு போய்விட்டார்கள். ஒரு எம்.பி.யின் அறைக்குள் அத்துமீறி நுழைகிறார்கள்; அது வன்முறையில் முடிந்திருந்தால் என்னாவது? அதான், சபாநாயகரிடம் புகார் கொடுத்தார். இதனை விசாரிக்க சபாநாயகர் உத்தரவிட்டார். டெல்லி கமிஷனர் விசாரித்து, வந்தவர்கள் தமிழ்நாட்டு போலீஸ்னு கண்டுபிடிச்சி ரிப்போர்ட் தந்திருக்கிறது. இதை வைத்து தமிழக அரசிடம் கேள்வி கேட்டிருக்கிறார் சபாநாயகர்.

 

அதி.மு.க.வில் நடந்த முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதி.மு.க.வின் நிலைப்பாடு, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

அது, அவங்க கட்சியின் நிலைப்பாடு. அதில் நான் தலையிட விரும்பவில்லை. கட்டுப்பாடு இல்லாத கட்சி அரசியலில் சில நேரங்களில் முதல்வர் மோதல் நடக்கும். ஏற்கனவே நடந்தது. இப்போ, ரெண்டாவது முறையா நடந்திருக்கிறது.

 

அரசியலுக்கு ரஜினி வருவார் என சொல்லப்படுகிறது. அவரது வருகை தி.மு.க.வை பாதிக்குமா? அதி.மு.க.வை பாதிக்குமா?

வருவார்னு சொல்றாங்க; வர மாட்டார்னும் சொல்றாங்க. வராத ஒரு விசயத்துக்கு நான் ஏன் ஜோசியம் சொல்லணும்? அவர் வரட்டும். அதுக்கு முன்பே மீசையை முறுக்குவது சண்டைக்கு இழுப்பது போலிருக்கும்.

 

சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும்? எத்தனை இடங்களில் தி.மு.க. வெற்றி பெறும் என கணித்திருக்கிறீர்கள்?

எங்கள் அரசியல் கணிப்பின்படி, முதலமைச்சராக தளபதி ஸ்டாலின் வருவதற்கு அனைத்து நல்வாய்ப்புகளும் இருக்கிறது. எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என தெரிந்தால்தான் எத்தனை இடங்களில் ஜெயிப்போம்னு சொல்ல முடியும்.

 

தி.மு.க. கூட்டணியில் மாற்றம் இருக்கும் என கருதுகிறீர்களா?

எங்கள் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்களோ அவர்கள் அப்படியே இருப்பார்கள் என்றுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்.

 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திப்பது அந்த கட்சிகளை காயப்படுத்துவதாக சொல்லப்படுகிறதே?

தங்களது வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட வைக்கலாம் என சில கட்சிகளே சொல்கின்றன. நாங்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை. அது நாகரீகமும் ஆகாது.