நண்பர் ஒருவரின் குடும்பம், தங்கள் மகனுக்கு வரக்கூடிய மனைவி வெகு அழகானவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடியபடியே இருக்கிறது. ‘அது என்ன அழகு?’ என்று கேட்டோம். “பார்க்கிறதுக்கு மூக்கும் முழியுமா செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கணும்..” என்றார்கள். அவர்களிடம் நாலடியாரைக் கொஞ்சம் எடுத்துவிட்டோம்.
‘குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு’
முழுமையாக அர்த்தம் புரிந்ததோ இல்லையோ, சிரித்துவிட்டு “நாங்கள் தேடுவதும் படித்த அழகான பெண்தான்.” என்று அழகு குறித்த அவர்களின் கொள்கையில் உறுதியாக இருந்தனர்.
பெண்ணின் அழகு குறித்து ஓவியர் ஒருவர் இப்படிச் சொல்கிறார் -
“ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமென்று முன்னோர்கள் வகுத்தே வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயவங்களும் அமைந்துவிடுவதில்லை. உச்சி முதல் பாதம் வரை ஒரு இளம் பெண் எப்படியிருக்க வேண்டுமென்று முன்னோர்கள் வகுத்தே வைத்துவிட்டனர். அதுதான் சாமுத்திரிகா லட்சணம். பெண்களின் கண்கள் எப்படியிருக்க வேண்டுமென்று சாமுத்திரிகா லட்சணம் சொல்கிறது தெரியுமா? ‘சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று மாவடுபோல் இருக்க வேண்டும். பாலில் விழுந்த வண்டுபோல் கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். புருவம் வில்லைப்போன்று வளைந்திருக்க வேண்டும்.’ என, கண்கள் குறித்து மட்டுமல்ல.. மூக்கு, நெற்றி, காது, கழுத்து, இடை, தொடை என காலின் கட்டை விரல் வரைக்கும் விலாவாரியாக விவரித்துள்ளது.’ என்றார்.
கணிதத்திலும்கூட ‘பொன் விகிதம்’ உண்டு. இது, கவின்கலை, ஓவியம், கட்டிடக்கலை, புத்தக வடிவமைப்பு, இயற்கை, இசை, நிதிச்சந்தை என பல்வேறு துறைகளிலும் பரந்து காணப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டிலிருந்து, ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள் பலரும் தமது படைப்புகளில் பொன் விகிதத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். பொன் விகிதமானது அழகியல் அடிப்படையில் மனதுக்கு உகந்தது என நம்பப்படுகிறது.
உலகப் பிரசித்திபெற்ற மோனாலிசா ஓவியம் தங்க விகிதத்தின்படியே (1:0.618) லியொனார்டோ டா வின்சி-யால் வரையப்பட்டுள்ளது. இத்தங்க விகிதமானது மனித உடல் முழுவதும் காணப்படுகிறது. ஒரு தங்க செவ்வகம் என்பது தங்க விகிதத்தைப் பிரதிபலிக்கும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு செவ்வகமாகும். மோனாலிசா ஓவியம் முழுவதுமே பல தங்க செவ்வகங்களைக் கொண்டுள்ளது. த லாஸ்ட் சப்பர், ஓல்ட் மேன் மற்றும் தி விட்ருவியன் மேன் போன்ற ஓவியங்களின் சில பகுதிகளும் தங்க விகிதத்தின்படி டாவின்சியால் வரையப்பட்டவையே.
அட, ‘நிரந்தர உலக அழகி’ என இன்றுவரையிலும் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ஆர்.பச்சனும் இந்தப் பொன் விகிதக் கணக்கில்தான் வருகிறார். எப்படி தெரியுமா? ஒருவரின் முகத்திலுள்ள மூக்கின் நீளம், கண்களின் இருப்பிடம் மற்றும் தாடையின் நீளம் ஆகியவை தங்க விகித நியமனப்படி அமைந்தால் அவர் அழகாக இருப்பார். ஐஸ்வர்யா ஆர்.பச்சனின் முகமானது தங்க விகித அமைப்புகொண்ட முகமூடியுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதனால், அவரது அழகும் கணிதத்தன்மை வாய்ந்ததே!
அழகு ரசனைக்குரியதே! ஆனாலும், ‘புற அழகைக் காட்டிலும் அக அழகே உயர்ந்தது’ என பாடம் நடத்தினால், புரிதலுடன் நம்மில் எத்தனைபேர் முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள்?