இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. ஒன்று மக்களவை, மற்றொன்று மாநிலங்களவை. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். இதில் 12 நியமன உறுப்பினர்கள் ஆவர். தமிழகத்தில் இருந்து சுமார் 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆகும். அதில் ஒருவர் நியமன உறுப்பினர் ஆவர். தமிழகத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு சுமார் 34 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
தமிழகத்தில் மட்டும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் 24/07/2019 அன்றுடன் நிறைவடைகிறது. அவர்களின் விவரங்களை பார்போம்.
1. கனிமொழி (திமுக).
2. கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக).
3. டாக்டர். வி.மைத்ரேயன் (அதிமுக).
4. டி.ராஜா (சிபிஐ).
5. டாக்டர்.ஆர்.லட்சுமணன் (அதிமுக).
6. டி.ரத்தினவேல் (அதிமுக).
தமிழக சட்டப்பேரவையில் கட்சிகள் வாரியாக உறுப்பினர்கள் எண்ணிக்கை.
அதிமுக கூட்டணி - 113.
திமுக - 88.
காங்கிரஸ் -8.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்-1.
சுயேச்சை - 1
சபாநாயகர்-1
நியமன உறுப்பினர் - 1
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும் , அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் திமுக கூட்டணிக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆகவும், அதிமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 122 ஆகவும் உயர்ந்துள்ளது.
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் பதவி காலம்.
1. ஆர்.எஸ்.பாரதி (30/06/2016- 29/06/2022) .
2. டி.கே.எஸ்.இளங்கோவன் (30/06/2016- 29/06/2022).
3. திருச்சி.சிவா (03/04/2014- 02/04/2020).
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் பதவி காலம்.
1. எஸ். முத்துக்கருப்பன் - (03/04/2014 - 02/04/2020).
2. டாக்டர். சசிகலா புஷ்பா - (03/04/2014 - 02/04/2020).
3. டி.கே.ரங்கராஜன் (சிபிஐ) - (03/04/2014 - 02/04/2020).
4. ஏ.கே. செல்வராஜ் - (03/04/2014 - 02/04/2020).
5. விஜிலா சத்யானந்த் - (03/04/2014 - 02/04/2020).
6. எஸ். ஆர் பாலசுப்ரமணியன் - (30/06/2016 - 29/06/2022).
7. ஏ. நவநீதகிருஷ்ணன் - (30/06/2016- 29/06/2022).
8. ஆர். வைத்தியலிங்கம் - (30/06/2016- 29/06/2022).
9. ஏ.விஜயகுமார் - (30/06/2016 - 29/06/2022).
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் நிறைவடைவதை அடுத்து அதிமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும், திமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் அதிமுக கட்சி மக்களவை தேர்தலின் போது கூட்டணி அமைத்த பாமகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . அதன் படி தருமபுரி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக அதிக வாய்ப்பு. மீதமுள்ள இரு ராஜ்யசபா சீட்டுகள் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுக கட்சி வழங்கி வந்தது. இந்த முறையும் அந்த கட்சிக்கு சீட் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மீதமுள்ள ஒரு ராஜ்ய சபா பதவிக்கு அதிமுகவின் மூத்த தலைவர் மைத்ரேயனுக்கு வழங்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் 14/06/2019 அன்று நிறைவடைவதை அடுத்து அந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அஸ்ஸாம் மாநில ராஜ்ய சபா இடத்திற்கு தமிழகத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னணுக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினர் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தமிழகத்தை சேர்ந்த பாஜக கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் கூட்டணி கட்சியான மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள இரு ராஜ்ய சபா சீட்களில் திமுகவின் புது முகங்களுக்கு அக்கட்சி வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினரின் பதவி காலம் முடிவடையும் நிலையில் அவருக்காக திமுகவிடம் ஒரு ராஜ்ய சபா எம்பி சீட்டை காங்கிரஸ் கட்சி கேட்க கூடும் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் பல்வேறு மாநிலங்களில் பாஜக கட்சி ஆட்சியை பிடித்துள்ளதால் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் இனி மசோதாவை எளிதாக நிறைவேற்ற முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.