மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றிரவே தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தினகரன், கபில் சிரோத்கர், சுப்புலட்சுமி ஆகியோர் அத்துமீறியதைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்தே பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்த, கமிஷனரும் கூடுதல் கமிஷனரும் முயற்சியை மேற்கொண்டனர். அது பலனளிக்கவில்லை. இதற்கிடையில் 19-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முடிவுசெய்தனர். போராட்டம் நடப்பது முடிவானதும் அதற்கான செயல்பாடுகள் வேகமாக நடக்கத் தொடங்கின.
இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கும் ஒவ்வொரு தெருவிலும், சந்திலும் தகவல்தொடர்பு கண்ணிமைக்கும் வேகத்தில் நடைபெற்றது. தமிழக அரசுக்கு தங்களின் முழுமையான எதிர்ப்பை வெளிக்காட்டவேண்டுமென்ற வேகமே இதற்கான உந்துசக்தியாக அமைந்தது.
தமிழ்நாடு முழுக்க சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடிக்குமென உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி முன்கூட்டியே சொல்லியிருந்தார். அதனால், பிப்ரவரி 14-க்கு முன்பிருந்தே வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டங்களையும், மக்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தி வந்த காவல்துறை, முற்றுகைப் போராட்டத்தை முடிந்தளவுக்கு கட்டுப்படுத்தவும், முடிந்தால் தடுத்துநிறுத்தவும் இன்னொரு பக்கம் செயல்பட்டு வந்தது. போராட்டக்காரர்களின் செல்போன், தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட் டன. இதை முன்கூட்டியே எதிர்பார்த்த போராட்டக்காரர்கள் அதையும் தாண்டி பெரிய அளவுக்கு திட்டமிட்டுச் செயல்பட்டனர்.
சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க ஆறு பேர், ரயில்வே பாதை உள்ளிட்ட மற்ற விஷயங்களைப் பாதுகாக்க ஆறுபேர் நியமிக்கப்பட்டனர். சென்னை நகரத்தை மட்டும் சென்னை போலீஸ் கமிஷனரான ஏ.கே. விஸ்வநாதன் கட்டுப்பாட்டில் விடுவதென முடிவுசெய்யப்பட்டது. மற்ற இடங்களில் நடக்கிற போராட்டங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை டிஜி.பி.யான ஜே.கே. திரிபாதியும் இன்டலிஜன்ஸ் ஐ.ஜி. சத்தியமூர்த்தியும் எடுத்துக்கொண்டனர்.
தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்துக்கு மாநகர காவல்துறை அனுமதியளிக்கவில்லை. அதேசமயம் இந்தப் போராட்டத்துக்கு அனுமதியளிக்கக்கூடாதென உயர்நீதிமன்றத்திலும் வாராகி என்பவர் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு போராட்டத்துக்குத் தடைவிதித்தது. இருந்தபோதிலும் தடையை மீறி போராடுவதென போராட்டக் குழு முடிவுசெய்தது.
போராட்டத்துக்கு 23 இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவளிக்க முன்வந்தன. போராட்டத்தன்று சென்னையில் திரண்ட மக்கள் கூட்டம் காவல் துறையே எதிர்பார்க்காத அளவுக்கு இருந்தது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் என பெருமளவில் திரண்டுவந்து கலந்துகொண்டது காவல்துறையை மட்டுமின்றி போராட்டத்துக்கு ஆதரவு தந்த கட்சிகளையும் ஆச்சரியப்பட வைத்தது.
எனினும், வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் சர்ச்சைக்கு ஆளான தினகரன், கபில் சிரோத்கர், சுப்புலட்சுமியை போராட்டக்காரர்கள் காணநேர்ந்தால் உணர்ச்சிவசப்படக் கூடுமன்பதால் புத்திசாலித்தனமாக அவர்களைத் தவிர்த்திருந்தனர் காவல்துறை உயரதிகாரிகள்.
ஊர்வலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்தால் அதை எதிர்கொள்ள வஜ்ரா வாகனம், தண்ணீர் பாய்ச்சும் வாகனம், ஆயிரக்கணக்கான போலீசார் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருந்தது. காலை பத்து மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து தொடங்கி சேப்பாக்கம் நோக்கி பேரணி நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் போராட்டக்காரர்கள் கட்டுப்பாடாக நடந்துகொண்டனர்.
போராட்டக்காரர்கள் பேரணியில் முழுமையான ஒழுங்கைக் கடைப்பிடித்தனர். தேசியக் கொடியைத் தவிர வேறந்த கட்சிக் கொடியையும் ஊர்வலத்தில் கொண்டுவரவில்லை. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு, பேரணியில் நடந்து வருபவர்களுக்கு நீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்து, போராட்டத்தின்போது போடப்பட்ட குப்பைகளை அவர்களே பொறுக்கி ஒரு முன்னுதாரணமாக நடந்துகொண்டனர். பேரணியின் நிறைவாக நடந்த உரையிலும் யாரும் எதிர்மறையாக, சர்ச்சையாகப் பேசாதவண்ணம் பார்த்துக்கொண்டனர். தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டமென அறிவிக்கப்பட்டாலும், நீதிமன்றம் தடைவிதித்ததால் பேரணியோடு முடித்துக்கொண்டனர் போராட்டக் குழுவினர். முடிவில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்தனர். தமிழகத்தின் பல நகரங்களிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்தனர் தமிழக முஸ்லிம்கள்.
அருண்பாண்டியன்
படங்கள்: ஸ்டாலின், அசோக் & குமரேஷ்