Skip to main content

ஆத்தாடி அடுத்த விளம்பரம் ரெடியாகிக்கிட்டு இருக்குமே!!!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

ஸ்டெர்லைட் போராட்ட வெற்றி - 102 நாட்கள் போராட்டத்தாலும், 13 உயிரிழப்புகளாலும் (அவர்கள் கணக்குப்படி), பலரின் இரத்தத்தாலும் கிடைத்த வெற்றி. மக்களுக்கு முற்றிலும் எதிராகதான் இந்த அரசு.  உண்மையை சொன்னால் அரசு நெருக்கடி நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இவர்கள் இன்றைக்கு அவர்கள்தான் எல்லாமே செய்ததுபோல செய்திகளையும், விளம்பரங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல மாண்புமிகு, இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லரசு ஸ்டெர்லைட் பிரச்சனையை சிறப்பாக கையாண்டு, மக்களின் நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடியது என்றோ, அந்தக் கடவுள்தான் நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐயா ரூபத்துல வந்து காப்பாற்றி இருக்காங்க என்றோ ஒரு அரசு விளம்பரத்தையும்கூட இயக்க தொடங்கியிருப்பார்கள்.

 

eps

 

 

 

இதற்குமுன் நடந்த பல பிரச்சனைகள், போராட்டத்தின்போதும்கூட அரசு மக்களுக்கு எதிராகவே இருந்தது. ஆனால் அதைப்பற்றிவந்த அரசு விளம்பரங்களிலெல்லாம் உண்மையை மறைத்து பொய்யாலும், புரட்டுகளாலான ஒரு விளம்பரத்தை தயாரித்து வெளியிட்டனர். ஒகி புயலின்போது இந்த அரசு மேற்கொண்ட பராமரிப்பு பணிகளை பற்றியும் ஊர் அறியும். ஆனால் இவர்கள் தாங்கள்தான் ஒகி புயலில் இருந்து மக்களை காப்பாற்றியதுபோல் விளம்பரத்தை வெளியிட்டனர். இது பார்க்கும் அனைவரையும் கோபமடைய வைத்தது. அங்கு அத்தனை உயிர்கள் பலியானது, இன்றும் கூட பலரின் நிலை என்ன என்று தெரியாமல் இருக்கிறது. ஆனால் இவர்கள் இந்த அரசு விளம்பரத்தின்மூலம் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

 


ஜல்லிக்கட்டு போராட்டம் மக்கள் எழுச்சியாக நடைபெற்ற ஒன்று. 15 நாட்கள் யார், எவரென்று தெரியாதவர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு குரலாய் ஒலித்த போராட்டம். ஒரு போராட்டம் எப்படி ஒழுக்கமாய், சுயகட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நின்ற போராட்டம். ஆனால் கடைசி நாளில் அதை கலவரம் என்று அடித்து விரட்டினர். ஆனால் அதைப்பற்றி வந்த அரசு விளம்பரத்தில் இவர்கள்தான் ஜல்லிக்கட்டு உரிமையை போராடி தந்ததுபோல் விளம்பரம் போட்டுக்கொண்டார்கள். 

 

 


மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது(!!!) ‘நம்ம ஐயா எடப்பாடி பழனிசாமிதான்’ என்ற விளம்பரம். அந்த விளம்பரம் வெந்த  புண்ணில் கடப்பாறையை விட்டு ஆட்டுவது போல இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளுக்கு சென்றவர்களுக்கு அந்த விளம்பரம் நவரசத்தையும் தூண்டியது, சிலர் முடியலடா சாமி என்ற நிலைக்கு வந்தனர். அந்த விளம்பரத்திற்கு வந்த எதிர்ப்பைக் கண்டு அவர்களே அதை நிறுத்திக்கொண்டார்கள். குறுக்குவழியில் ஐஸ் வைத்து, ஐஸ் வைத்து தான் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் ஆட்கள் இருக்கும்வரை இந்தமாதிரியான விளம்பரங்கள் வரத்தான் செய்யும். அதைவிடுங்க நேற்று ரஜினி காலா ட்ரைலருக்கு முன்பு ஸ்டெர்லைட் பூட்டப்பட்டதற்கு வெளியிட்ட மாதிரி, காலா படத்துக்கு முன்னாடி தீவிரவாதிகளின் கையில் இருந்து தூத்துக்குடி மக்களை காத்த எடப்பாடி அப்படினு விளம்பரம் வந்தாலும் வரும் பாத்து பத்தரமா போங்க....