"வந்தாரை வாழவைக்கும் தமிழகம், யாதும் ஊரே யாவரும் கேளீர், விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை" என்றெல்லாம் கூறிவந்த சமூகம்தான் நாம். ஆனால் இன்று யார் தமிழர் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கும் சமூகமாகிவிட்டோம். முதலில் எல்லாம் தமிழர்களின் தொன்மை எது, திருவள்ளுவரின் காலம் எது, என்பது போன்றுதான் கேள்விகள் இருந்தன. ஆனால் இன்று யார்,யார் தமிழன் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழை உயிருக்கு நிகராக வைத்த ஒரு கவிஞன். அதற்குமுன் அப்படியிருந்ததா என்பது ஐயமே. அப்படிப்பட்டவர்தான் புரட்சிக்கவிஞர். பாரதிதாசன், இன்று அவரின் பிறந்த தினம். இந்த நாளில் அவரின் பாடல்களில் வரும் சில முக்கியமான வரிகளை பற்றி காண்போம்.
பாரதிதாசன் யார் தமிழன் என்று ஒரு பாடலில் கூறுகிறார்,
"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும், சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்."
இதற்கு பொருள் இன்றைய கட்சித் தலைவர் சொல்வதுபோல் பிறப்பின் அடிப்படையில் இல்லை. தமிழ் பற்றின் அடிப்படையில்... தமிழ் பற்று உள்ள ஒருவன் எங்கு இருந்தாலும் அவன் தமிழனே. பிறப்பால் தமிழராய் இருந்தாலும், வேற்று மொழிபித்துகொண்டு இருந்தால் அவர் தமிழரே இல்லை என்று கூறுகிறார்.
அதேபோல் தமிழர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்,
"நாம் தமிழர் நம் பொருளை நம் தமிழால் சொல்வோம்
நாம் தமிழர் எப்போதும் நம் தமிழை கற்போம்"
நாம் கூற விளையும் கருத்துக்களை தமிழிலேயே கூறுவோம், தமிழர்களாகிய அனைவரும் தமிழ் மொழியை கற்போம். என்றும் கூறுகிறார்.
மேலும் சில வரிகள்,
"தமிழ் என்னுயிர் என்பேன் கண்டீர்..."
"பயிலுறும் அண்ணன் தம்பி, -அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், -அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினால் உறைதல் கண்டீர்..."
"ஆசைத் தமிழ் பயின்றேன் - என்னருமை
அம்மா அருகில் வந்தார்"