ஒவ்வொரு காலகட்ட இளைஞர்களுக்கும் ஏற்றாற்போல நாம் பயன்படுத்தும் சமூகவலைதளங்கள் மேம்பட்டுக்கொண்டே செல்கின்றன. இமெயில் (e-mail), பிளாக் (blog), ஃபேஸ்புக் (facebook), வாட்சப் (whatsapp), இன்ஸ்ட்டா (instagram) என்று அந்ததந்த சமயத்தில் பிரபலமான சமூக வலைதளங்கள் மாறிக்கொண்டே வந்து தற்போது மியூசிக்கலியில் வந்து நிற்கிறது. தமிழகத்தில் பலர் காலையில் விழித்தவுடன் பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறியிருக்கிறது மியூசிக்கலி. அப்படி அந்த செயலியை பயன்படுத்தவில்லை என்றாலும், வேறொரு சமூக தளத்தில் நாம் உலா வந்துகொண்டிருக்கும்போது நம் கண்ணில் மாட்டிவிடும் ஒரு விஷயமாக இருக்கிறது. விதவிதமான பாடல்கள் அல்லது வசனம் பின்னே ஓட, அதற்கு ஏற்றாற்போல் முகபாவனை கொடுப்பது, அல்லது நடனமாடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது... இதுதான் அந்த செயலியின் செயல்பாடு. தற்போது வாட்ஸப்பிற்கு அடுத்தபடியாக அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட செயலி என்ற நிலையில் இருக்கிறது மியூசிக்கலி. இந்த செயலி முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காகவே உருவாக்கப்பட்டது. நம்முடைய முகபாவனை பார்ப்பவர்களை கவரும்படி இருந்தால் அந்த வீடியோ நாம் எதிர்பார்க்காத அளவிற்கு வைரலாகிறது.
இந்த கணினிமயமான உலகில் பல சமூகவலைதளங்கள் மனிதர்களை ஆட்சி செய்துகொண்டு இருக்கின்றன. அப்படி ஆட்சி செய்யும் சமூகவலைதள நிறுவனங்கள் பல அமெரிக்காவைச் சேர்ந்தவையே. 'இந்த உலகில் பலரால் பயன்படுத்தப்படும் எந்த ஒரு பொருள், செயலி, சமூகவலைதளம் என்று எதுவாக இருந்தாலும் பெரும்பாலும் அது அமெரிக்காவைச் சேர்ந்ததாகவே இருக்கிறது. ஏன் நம் நாட்டை சேர்ந்த ஒன்றாக இல்லை?' என்று சீனாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜு தனக்குள் கேள்வி எழுப்பியிருக்கிறார். முதலில் இவர் பொழுதுபோக்குக்காக செயலியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. உலகில் இருக்கும் பல மாணவர்களுக்குக் கல்வி அறிவை வளர்க்கும் வகையில் ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்றே நினைத்துள்ளார். அலெக்ஸ் ஜுவும் அவருடைய நண்பரான லுயூ யாங்ஆகிய இருவரும் சேர்ந்து நண்பர்களிடம் பணம்பெற்று இந்த வேலையைத் தொடங்கி ஒரு கல்வி தொடர்பான செயலியை உருவாக்கினார்கள். முதலில் ஐஓஎஸ்ஸில் வெளியிடப்பட்ட இந்த செயலி உப்புமா படமாக தோல்வியை சந்தித்தது.
ஒன்றும் புரியாமல் அமெரிக்காவில் லோக்கல் டிரெயினிலில் சென்றுகொண்டிருக்கும்போது மீண்டும் ஒரு ஐடியா அலெக்சிற்கு பிறக்கிறது. இக்கால இளைஞர்கள்தான் நம்முடைய பயன்பாட்டாளர்கள், குறிப்பாக அமெரிக்க இளைஞர்கள்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தார். அமெரிக்காவில் ஒன்று பிரபலமாகிறது என்றால் அது உலகம் முழுவதும் பிரபலம்தான். அதனால், தன்னிடம் இருக்கும் குறைவான பணத்தைக்கொண்டு மீண்டும் அவருடைய நண்பருடன் சேர்ந்து ஒரு செயலியை உருவாக்குகிறார்கள். இளைஞர்களுக்கு வீடியோ வெளியிடுவதும், இசை கேட்பதும்தான் முக்கிய தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டவர், அதே ஐடியாவில் உருவாக்கி 2014ஆம் ஆண்டு வெளியிட்டதுதான் இந்த மியூசிக்கலி செயலி. இளைஞர்களுக்கு நல்ல கல்வி அறிவை வளர்க்க வேண்டும் என்று வெளியிடப்பட்ட முந்தைய செயலியைப்போல் அல்லாமல் தடாலடியாக இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. அதிக டவுன்லோட் செய்ததில் வாட்ஸப்பிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் இது 2017 ஆம் ஆண்டில் சுமார் 200 மில்லியன் பயன்பாட்டாளர்களை வைத்திருக்கிறது. இந்த ஆண்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
உலகிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும் செயலிகள் வரிசையில் தன் நாட்டைச் சேர்ந்த செயலிதான் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று நினைத்த அலெக்ஸ், "நான் நினைத்ததுபோன்று உலகை ஆள வேண்டும் என்றால் அதற்கு என்னுடைய பயன்பாட்டாளர்கள் 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த ஸ்மார்ட் குழந்தைகளாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் பிறந்ததில் இருந்து ஸ்மார்ட் போனுடனே பழகிவருகிறார்கள். அதனால்தான் மியூசிக்கலியை அப்படி வடிவமைத்தேன். என்னுடைய ஆடியன்ஸும் அவர்கள்தான்" என்று கூறியுள்ளார்.