தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.மணிகண்டன்(45) கர்நாடக மாநிலம் நாகரகோலி வன புலிகள் பாதுகாப்பு சரகத்தின் முதன்மை பாதுகாவலராக மற்றும் கள இயக்குனராகவும் இருந்த இவர் கடந்த சனிக்கிழமை (3 மார்ச் 2018) காட்டுயானை தாக்கி பரிதமாக உயிழந்தார். 2001-ஆம் ஆண்டு பணிப்பொறுப்பை ஏற்ற இவர் அந்த வனப்பகுதிவாழ் மக்களுக்கும் வனத்துறைக்கும் ஒரு பாலமாக தன் பணியில் நேர்மையுடனும், சிரத்தையுடனும் இருந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளனர் அப்பகுதி மக்கள். தேனி மாவட்டம் கம்பம் பகுதி கொண்டித்தொழு தெருவைச் சேர்ந்த இவரது மனைவி சங்கீதா. இவருக்கு கவிலேஷ் என்ற மகனும் மிதுலா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இவர் தலைமையில் கபிணி ஆற்றை ஒட்டிய வனப்பகுதியில் ஏற்பட்ட சிறிய காட்டுத்தீயை அணைத்து பாதிப்பு நிலவரங்களை பார்வையிட வன அதிகாரி உட்பட 15 பேர் சேர்ந்த குழுவுடன் நள்ளிரவு சுமார் 1.30 மணிக்கு சென்றபோது இந்த காட்டுயானை தாக்குதல் நடைபெற்றது. இதைப்பற்றி வன அதிகாரி சுப்ரமணியம் கூறுகையில், ''எங்கள் குழு காட்டுத்தீயினால் ஏற்பட்ட பாதிப்புகளை தனித்தனியாக பிரிந்து பார்வையிட்டு கொண்டிருந்தோம். பிறகு தீயின் பாதிப்புகள் பற்றிய GST ரீடிங் எடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது காட்டுப்புதரில் மறைந்திருந்த காட்டுயானை எக்காளமிட்டு, சத்தத்துடன் திடீரென எங்களை நோக்கி விரட்டியது. நான் மற்றும் குழுவிலுள்ளோர் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு தெறித்து ஓடமுற்பட்டோம். அப்போது தடுமாறி கீழே விழுந்த மணிகண்டனை யானை தாக்கியது. நான் சிறு காயங்களுடன் தப்பினேன். மேலும் காட்டுயானையை துரத்த உடனே மிக அதிக சத்தத்துடனான அலாரத்தை எழுப்பினோம். அவரைத் தாக்கிய காட்டுயானை அந்த சத்தத்தினால் காட்டிற்குள் ஓடி மறைந்தது. இந்த நிகழ்வு வெறும் 25 நொடிகளிலேயே நடந்தேறியது. பிறகு குழுவில் உள்ள அனைவரும் தாக்கப்பட்ட அதிகாரியை மீட்டு மைசூர்-மணடவடி சாலையில் காத்திருந்த ஜீப்பில் ஏற்றிக்கொண்டு H.D கோட் மருத்துவமனைக்கு விரைந்தோம். ஆனால் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
காட்டுயானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த மணிகண்டனை அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் 'பீல்ட் மேன்' (FIELD MAN) என அன்பாக அழைத்து வந்தனர். அந்த அளவிற்கு நேர்மையும், கடுமையாக பணியாற்றும் திறமையும் இவரிடத்தில் இருந்துள்ளது. மேலும் நாகரகோலி வனச்சரகத்தில் காட்டுயானைகளின் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் கொண்டு முன்னிற்பவர் இவர். இவர் தொடக்கத்தில் பெங்களூரு, BRT சரணாலயம், பல்லாரி, ரய்ச்சூர் போன்ற இடங்களில் பணியாற்றி கடந்த ஆண்டுதான் பதவிஉயர்வு பெற்று இங்கு மாறுதலானார். தேனியில் கம்பம் பகுதியில் கிராமத்து வனப்பகுதி சூழலில் வாழ்ந்து வந்ததால் காட்டுவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வும், வனவிலங்குகள் பாதுகாப்பு பற்றிய எண்ணங்களும் இவருக்கு அதிகம் என்று ஊர் மக்கள் இவரை புகழின் உச்சியில் வைத்து அலங்கரிக்கின்றனர். தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தில் விவசாய அறிவியல் படித்து பூச்சியியல் (ENTOMOLOGY) படிப்பில் ஆராய்ச்சி முடித்துள்ளார் இவர்.
இவருடன் முன்பு பணியாற்றிய, வனப்பாதுகாப்பு அதிகாரி உள்ள தீபிகா பாஜ்பாய் கூறுகையில், ''கடந்த 2015 முதல் இவருடன் பணியாற்றிவந்தேன். முதலில் இவருடன் பணியாற்றுவது மிகவும் சிரமாக இருந்தது. அந்த அளவிற்கு ரொம்ப கண்டிப்பான நேர்மையான அதிகாரி அவர்'' என்று கூறியுள்ளார். அதேபோல் இவருடன் பணியாற்றி ஓய்வு பெற்ற வன அதிகாரி மல்லப்பா புட்டண்ணா இவரை பற்றி கூறும்போதும் அதையே குறிப்பிட்டார்.
HD கோட் மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்ட அவரது உடல் தேசிய கோடி போத்தி ஆர்யா பவன், அசோக்புரத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தபட்டது. நேர்மையான ஒரு வனத்துறை அதிகாரியின் இந்த திடீர் இழப்பு அவரது குடும்பத்தாரையும் ஊர் பகுதி மக்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிகண்டன் உடலுக்கு தேனி மாவட்ட கலக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டுயானை தாக்கி உயிரிழந்த எஸ்.மணிகண்டன் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் '' கர்நாடக நாகரகோலி புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுயானை தாக்கி எஸ்.மணிகண்டன் உயிரிழந்த செய்தி பெரும் வருத்தத்தைத் தருகிறது. அவருடைய இந்த உயிர் தியாகமானது நாடே அவர்க்கு வீரவணக்கம் செலுத்த உரித்தானது,வீர வணக்கம் செலுத்துவோம்'' என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் 2014 ஏப்ரல் மாதத்திலிருந்து 2017 மே, இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் 1,144 பேர் வனவிலங்குகளால் உயிரிழந்துள்ளனர் என இந்திய சுற்றுசூழல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அதில் 27 உயிரிழப்பு புலிகளால் தாக்கியதில் இறந்துள்ளனர்.மேலும் 259 உயிரிழப்பு காட்டுயானைகளாலேயே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.