பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. அதற்கு காரணமானவர் நிரவ் மோடி என்ற செய்தி கடந்த ஒரு வாரமாகவே வந்துகொண்டிருக்கிறது. இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி, தனது பெயரிலான வைரக் கடைகளை உலகளவில் பல இடங்களில் வைத்திருப்பவர் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், நமக்குத் தெரிந்த உலக லெவல் வியாபாரிகள் அம்பானியும் அதானியும் தான். இந்த வைரவியாபாரியின் பெயர் மோடி என்று இருப்பதாலும் இந்திய பிரதமர் மோடியுடன் ஒரு புகைப்படத்தில் இவர் இருப்பதாலும், நிரவ் மோடிக்கும் நரேந்திர மோடிக்கும் உறவு இருக்கலாம் என்று கணிப்புகள் உலவுகின்றன. யார் இந்த நிரவ் மோடி ?
நிரவ் மோடி, பெல்ஜியத்தில் இருந்து இந்தியாவுக்கு 1999 ஆம் ஆண்டு வந்தவர். நிரவ் இந்திய வம்சாவழியை சார்ந்தவர் தான். அவரது அப்பா வைரவியாபாரத்தில் ஒரு இடைத்தரகராக தன் தொழிலை வளர்க்க பெல்ஜியம் சென்றார். வைர வியாபாரம் சரியாகச் செல்லாமல், நிறுவனம் நிரவ் மோடியின் தலைமைக்கு வருகிறது. பின்னர் இந்தியாவுக்கே திரும்புகிறார் நிரவ் மோடி. இங்கு இருந்துதான் வைர வியாபாரத்தில் நிரவ் மோடியின் சாம்ராஜ்யம் தொடங்குகிறது. நிரவின் தாய் மாமாவான மெஹுல் சோக்சியுடன் இணைந்து 'ஃபயர் ஸ்டார்' என்ற வைர தரகு நிறுவனத்தைத் தொடங்கினார். மெஹுல் சோக்சி, கீதாஞ்சலி ஜெம்ஸ் என்ற பெரிய விலையுயர்ந்த அணிகலன்கள் நிறுவனத்தை வைத்திருப்பவர். கீதாஞ்சலி ஜெம்ஸ், இந்தியாவில் மட்டும் சுமார் 4000 கடைகளை கொண்டுள்ளது. இவரது பெயரும் அந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலில் இருக்கிறது. 'நிரவ் மோடிக்கு இந்த வைர தரகுமுறை வியாபாரம் தான் மூலதனம், அவர் எந்தவித பித்தலாட்டமும் இந்த தரகுமுறை நிறுவனத்தின் பெயரில் செய்யவில்லை' என்று சிபிஐ சொல்கிறது. இந்த நிறுவனத்தில் இருக்கும் கணக்குவழக்குகள் கூட சரியாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2.8 பில்லியன்.
வைர வியாபாரத்தில் வெறும் தரகு நிறுவனத்தை மட்டும் நடத்திவந்த நிரவ், 2008 ஆம் ஆண்டிலிருந்து தனது நண்பர்களுக்கு 'நிரவ் மோடி' என்ற பிராண்ட் பெயரில் வைர அணிகலன்களை உருவாக்கி கொடுத்துள்ளார். தரகுமுறையில் இருந்து வைரஅணிகலன்கள் வியாபாரம், அதுவும் தன் பெயரில் தொடங்கியது மோடிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. "எனக்கு கலையின் மீது அதிக ஆர்வம் உண்டு, ஒவ்வொரு வைரத்தையும் சரியாக, நுணுக்கமாக வெட்டி, அதை அழகுபடுத்துவது பிடித்துவிட்டது" என்று நிரவ் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் இந்தத் தொழிலிலேயே இருந்துவிடவேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறார். உலகம் முழுவதும் வைர வியாபாரத்தில் தன் முத்திரையை பதிக்க வேண்டும் என்று அடுத்த கட்ட நடவடிக்கையாக ஹாலிவுட் நடிகைகளை வைத்து பிரபலப்படுத்தினார்.
இவரது வாடிக்கையாளர்களாக நடிகை கேட் வின்ஸ்லேட், இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், நடிகை ஷரோன் ஸ்டோன், இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் இருக்கின்றனர். 2017 ஆஸ்கர் விருது விழாவில் ரெட்கார்பெட் நிகழ்வில் நிரவ்மோடியின் அணிகலன்களை ரோஸி ஹட்டிங்டன், கேட் வின்ஸ்லேட் போன்ற ஹீரோயின்கள் அணிந்து வந்தனர். இந்த நிறுவனத்திற்கு தூதுவராக இருப்பது ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராதான். 2015ல் நியூயார்க்கின் முதல் கிளையை டொனால்ட் டிரம்ப் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிரவ் மோடியின் வைரக்கடைகள் மூன்று கண்டங்களில் இருக்கிறது. உலகத்தரம் பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்த மோடி, நிறுவனத்திற்கு ஆலோசகராக இந்திய பேஸ்புக் நிறுவனத்தில் நிர்வாகியாக வேலைபார்த்த கீர்த்திகா ரெட்டியை நியமித்தார். அலுவலகத்தில் 100 மில்லியனுக்கு ஷெரில் ஜில் ஆயில் பெயின்டிங்கை வைத்தார், வின்டேஜ் மாடல் பென்ட்லீ காரையும் வைத்து அழகு கூட்டினார். இதுபோன்ற மும்முரமான விளம்பரங்களில் இறங்கி உலகளவில் இடம்பிடிக்க ஆசைப்பட்டார். இவரது கடைகள் லண்டன், நியூ யார்க், லாஸ் வேகாஸ், மக்காவ், ஹவாய், பீஜிங், ஹாங்காங் மற்றும் இந்தியாவில் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் இருக்கின்றன. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2016ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் வரிசையில் 86 வது இடத்தில் இருக்கிறார் நிரவ். இவரது மொத்த சொத்துமதிப்பு 1.74 பில்லியன். இவரது அணிகலன்கள் விலை சாதாரணமாக 5 லட்சத்தில் இருந்து 50 கோடி வரை விற்கப்படுகிறது. இவர்களால் உருவாக்கப்பட்ட சில வைர டிசைன்களுக்கு காப்புரிமையும் பெற்றிருக்கின்றனர். சிபிஐ விசாரணையில் தன் பெயர் அடிபடுவதை அறிந்துகொண்ட நிரவ் ஜனவரி 1ஆம் தேதியே சுவிச்சர்லாந்துக்கு சென்றுவிட்டார், பின் இந்தியா பக்கம் திரும்பவே இல்லையாம். அது எப்படி என்றுதான் புரியவில்லை, ஒரு சாதாரண குடிமகன் வாங்கும் கடன்களை சரியாக வசூல் செய்யும் வங்கிகள், கடன் வாங்கியவர்களால் சரியாக தவணைகளை கட்ட முடியவில்லை என்றால் கந்துவட்டிக்காரர்கள் போலவும் வசூல் செய்யும் வங்கிகள், கோடிக்கணக்கில் கடன் வாங்கும் இந்த பணக்காரர்களை மட்டும் அவர்கள் விமானம் ஏறும் வரை விட்டுவிடுகின்றன?