Skip to main content

ஸ்டாலின் செய்வதெல்லாம் சரியா?

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடுகிறார். அவருடைய போராட்ட வழிமுறைகள் அனைத்தும் அவருக்கு எதிராகவே திரும்பிவிடுகின்றன என்ற விமர்சனம் இப்போது எழுகிறது.

எடப்பாடி அரசு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பிலிருந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வரை பல போராட்டங்களை நடுநிலையிலான கட்சிக்காரர்களே குறை சொல்கிறார்கள்.


 

STALIN

 

 

 

குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரத்தை ஸ்டாலின் கையாண்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் திமுகவைச் சேர்ந்த கீதா ஜீவனின் சகோதரர் பெரும்பாலான காண்ட்ராக்ட்டுகளை எடுத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது. இதற்கு ஆதாரம் எதுவுமில்லை என்று கீதாஜீவன் சொன்னாலும், குற்றம்சாட்டுகிறவர்கள் மீது வழக்குத் தொடுக்காமல் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

 

பொதுவாகவே எதற்கெடுத்தாலும் திமுக மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் பல வகையிலும் பரப்பப்படுகின்றன. அமைச்சர்களே இப்படியெல்லாம் திமுகவை தொடர்புபடுத்துகிறார்கள். அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடரவேண்டும் என்று திமுகவினர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், திமுக தலைமை இதில் கவனம் செலுத்த மறுப்பது ஏன் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்க உரிமை உண்டு என்று திமுக நினைக்கிறது என்றாலும்கூட எதற்கும் ஒரு அளவில்லையா என்பதே தொண்டர்களின் தொடர் கேள்வி.

 

மற்ற எந்தக் கட்சியைக் காட்டிலும் தலைமையின் முடிவுகளை விமர்சிக்கக்கூடிய அளவுக்கு திமுகவில்தான் தொண்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கலைஞர் காலத்திலிருந்தே இது தொடர்கிறது. கலைஞர் உடல்நலமின்றி ஓய்வெடுக்கும் நிலையில், ஸ்டாலின் எடுக்கும் பல முடிவுகள், அவருடைய நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் அதிகரிக்கின்றன. திமுகவில் குழு மனப்பான்மை அதிகமாகி வருகிறது.

 

 

 

கலைஞர் காலத்திலும் குழுக்கள் இருந்தன. ஆனால், அத்தனை குழுக்களும் கலைஞரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவை. எனவே, அவர்களுடைய போட்டிகள் கட்சிக்கு இழப்பை ஏற்படுத்துவதில்லை. இப்போது குழுக்கள் தமக்கென்று தனித்தனி பாதைகளை வகுத்து செயல்படத் தொடங்கியிருக்கின்றன.

 

ஸ்டாலின் எல்லாக் குழுக்களுக்கும் ஆன தலைவராக இல்லாமல், அவருக்கு நெருக்கமான ஒரு குழுவினருக்கு மட்டுமான தலைவராக செயல்படுகிறார் என்று பல தரப்பிலிருந்தும் விமர்சிக்கப்படுகிறார்.

 

திறமையான பலர் இருந்தாலும், அவர்களை முழுவீச்சில் பயன்படுத்த மறுக்கிறார். தன்னைச் சுற்றியே கட்சி இயங்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

 

 

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மக்கள் மனநிலையை அரசுக்கு  எதிராக திருப்பத் தவறிவிட்டார் என்றும் விமர்சிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை ஸ்டாலின் போய் சந்தித்தார். அன்றைய தினமே மருத்துவமனை அருகே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ஒருவர் பலியானார். அந்தச் சமயத்திலேயே ஸ்டாலின் தனது போராட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும். போலீஸ் அடக்குமுறை ஓயும்வரை தூத்துக்குடியை விட்டு வெளியேற மாட்டேன் என்று போராட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறுகிறார்கள். அங்கேய போராட்டத்தை தொடங்கி கைதாகி இருந்தால், திமுகவின் போராட்ட குணம் தூத்துக்குடியில் போலீஸ் அராஜகத்தை கட்டுப்படுத்தி இருக்கும் என்பதே பெரும்பகுதியினர் கருத்து.

 

ஆனால், ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தர்ணா தொடங்கி கைதானதும், அவருடைய கைதைக் கண்டித்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதும் தூத்துக்குடி விவகாரத்தை திசைதிருப்பி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

தூத்துக்குடி அராஜகத்துக்கு எதிரான போராட்டம் ஸ்டாலின் கைதுக்கு எதிரான போராட்டமாக மடைமாற்றப்பட்டது தவறு என்று சாதாரண மக்களே பேசும் நிலை உருவாகிவிட்டது.

 

ஸ்டாலின் போராட்டத்தை நாடகம் என்று முதல்வர் எடப்பாடியே விமர்சிக்கிறார். அதையே தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன. முதல்வரிடம் தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணம் யார் என்று கேட்டு பதில் பெற முடியாத ஊடகங்கள், அவர் திமுகவைப் பற்றி சொன்ன வார்த்தைகளை தொடர்ந்து ஒளிபரப்பும் நிலைதான் உள்ளது.

 

இதன்விளைவுதான் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பந்த் அறைகூவலுக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் போயிற்று என்கிறார்கள் திமுக முன்னணி பிரமுகர்கள்.

 

 

 

2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதை எதிர்கொள்வதற்கு திமுக தலைமை இப்போதிருந்தே தனது தொண்டர்களையும், அடுத்தக்கட்ட தலைவர்களையும் உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக மகளிர் அணியை விரிவுபடுத்தி, ஊராட்சி அளவுக்கு பலப்படுத்த வேண்டும் என்பதே திமுக தொண்டர்களின் விருப்பம்.