Skip to main content

ஆன்மிக அரசியல்…

Published on 08/01/2018 | Edited on 08/01/2018

தெறிக்க விடுகிறார்கள் "ஆன்லைன்' போராளிகள். "ஆன்மிக அரசியல்' என்னும் வார்த்தை தாறுமாறாகி மீம்ஸ்களில் வைரலாகிறது. கலாய்க்கிறார்கள் என்பதுகூட புரியாமல், இனி திராவிட அரசியல் அவ்வளவுதான் என சம்மன் இன்றி ஆஜராகின்றன பா.ஜ.க.வும் அதன் பரிவாரங்களும்.

ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல. அது திராவிட இயக்கத்திற்கு எதிரானதும் அல்ல. ஆன்மிகத்தை எப்படி கையாளவேண்டும் என்பதை அரசியல் களத்தில் ஆயுதமாக ஏந்திய வரலாறு அதற்கு உண்டு. சரியாக சொல்லவேண்டும் என்றால், திராவிடத்தின் முதல் அரசியல் இயக்கமான நீதிக்கட்சி தோன்றியதே ஆன்மிக உரிமையினால்தான்.



100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பவுன் தங்கம் 10 ரூபாய்க்கும் குறைவாக விற்ற காலத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருப்பணிக்கு 10ஆயிரம் ரூபாய் நிதியளித்தார் சென்னை மாநகராட்சித் தலைவராக (முதல்  மேயர்) இருந்த பிட்டி.தியாகராயர். குடமுழுக்கு நாளில் பிராமணர்கள் பலர் கோபுரத்தின் மீது நின்றனர். ஆனால், 10ஆயிரம் கொடுத்த தியாகராயர் பிராமணரல்லர். ஒரு சூத்திரர் என்பதால் அவரை கோவில் கோபுரத்தின் மீது ஏற விடவில்லை. பிறப்பின் காரணமாக அவருக்கு அந்த உரிமையில்லை என்று தடுத்தவர், சென்னை (மா)நகராட்சியில் அவரிடம் வேலை பார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு குமாஸ்தா. அந்த குமாஸ்தா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.

திருப்பணிக்கு பணம் வாங்கும்போது பிறப்பில் பேதம் தெரியாத நிலையில், கோபுரத்தில் ஏறவும், கருவறையில் நுழையவும் பிறப்பின் அடிப்படையில் பேதம் காட்டப்படுவதால் விரக்தியும் கோபமும் அடைந்த தியாகராயர் அங்கிருந்து வெளியேறி, டி.எம்.நாயரையும் நடேசனாரையும் சந்தித்ததன் விளைவுதான், மூவரும் இணைந்து 1916-ல் உருவாக்கிய நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். ஆன்மிக உரிமையின் காரணமாக தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் கல்வி-வேலை வாய்ப்பு என அனைத்து நிலையிலும் சமூக நீதியை நிலைநாட்டி, இந்தியாவுக்கே வழிகாட்டியானது.

1920ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் நடைபெற்ற சென்னை மாகாணத்திற்கான தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சமூக நீதி அடிப்படையிலான அதன் செயல்பாடுகளில் ஆன்மிக உரிமையும் அடங்கியிருந்தது. அதன் விளைவுதான் 1925-ல் பனகல் அரசர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலைய பாதுகாப்பு மசோதா. இதனைக் கொண்டு வருவதற்கு முன்பாக சங்கராச்சாரியார் உள்ளிட்ட "இந்துமத மேலோர்'களிடமும் "நூலோர்'களிடமும் ஆலோசனை பெற்று அதன் பின்னரே, 1925-ல் சட்டமாக நிறைவேற்றினார் பனகல் அரசர் ராமராய நிங்கர். அதுபோலவே, குறிப்பிட்ட சமூகத்து பெண்களை கோவில் பணி என்னும் பெயரில் இழிவாக நடத்தும் தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டமும் நீதிக்கட்சி ஆட்சியில் 1929-ல் நிறைவேற்றப்பட்டது.

அதனைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் சட்டமன்றத்திலேயே, ""தாசிகள் கோவில் பணிகளுக்கெனப் படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்பந்தமானது. அதை ஒழிப்பதென்பது கடவுள் கட்டளையை மீறும் அடாத செயலாகும்'' என்றார். அதற்கு பதிலளித்த தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ""இது கடவுள் தொண்டு என்றால் அந்த தொண்டினை ஒரு குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்யவேண்டுமா? உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது?''’என்று சத்தியமூர்த்தியைப் பார்த்துக்கேட்டு "ஷட் அப்' செய்தார்.

நாத்திகரான பெரியாரின் பங்கேற்புக்குப் பிறகு நீதிக்கட்சி வேகம் பெற்று, திராவிட இயக்கத்தின் அரசியல் புதிய பரிணாமத்தை அடைந்தபோதும், ஆன்மிக உரிமைகளில் சமூக நீதி என்பது மேலும் தீவிரமான போராட்டமாக மாறியது. பெரியாருடன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் உள்ளிட்ட சமய அறிஞர்கள் ஆரியத்திடமிருந்து தமிழை மீட்பதில் இணைந்திருந்தனர். தமிழகத்திலும் மலேயாவிலும் (மலேசியா-சிங்கப்பூர்) சுயமரியாதை பிரச்சாரத்தை பெரியார் மேற்கொண்டபோது, அவருக்கு போட்டியாக ஆன்மிக பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர்தான் குன்றக்குடி அடிகளார். பின்னர் இருவரும் சந்தித்தபோது, ஆரியத்தின் பிடியிலிருந்து ஆன்மிகத்தை விடுவித்து, சமூக நீதியை நிலைநாட்டுவதில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டார் குன்றக்குடி அடிகளார்.

ஆன்மிகத்திலும் "சமூகநீதி' என்கிற அரசியல் ஆயுதத்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உறுதியாகக் கையாண்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் நாடார் சமூகத்தினர் உள்ளிட்ட பலரை அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து 1926-ல் கோவில் நுழைவுக் கிளர்ச்சி நடந்தது. 1927-ல் "திராவிடன்' இதழ் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர் திருவண்ணாமலை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததற்காக அவர்களை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய கொடுமையும் நடந்தது. இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டு பின்னர் விடுதலையடைந்தனர்.



1927-ல் திருச்சி- மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சென்ற சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த இராமநாதனை தடுத்துத் தாக்கிய அடியாட்கள், கோவிலில் நுழைய முயன்றவர்களைப் படிக்கட்டுகளில் உருட்டிவிட்டார்கள். அதே ஆண்டில், மயிலாடுதுறை மயூரநாதசாமி கோவிலுக்குள் அனைத்துச் சாதியினரையும் அழைத்துச் செல்லும் போராட்டம் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் தலைமையில் நடந்தது.

1929-ல் ஈரோடு -கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஆதி திராவிடர் சமூகத்தினரை அழைத்துக் கொண்டு பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும் குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் போன்றோரும் நுழைந்தனர். அவர்களை உள்ளே வைத்துப் பூட்டிய கும்பல், இரண்டு நாட்களுக்கு கதவைத் திறக்கவில்லை. திராவிட இயக்கம் மேற்கொண்ட இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, 1939ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருடன் ஆலயப் பிரவேசம் செய்தார் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாத அய்யர். அந்தப் போராட்டத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உறுதுணையாக இருந்தார்.

கோவிலுக்குச் சென்று வழிபடுகிற உரிமை மட்டுமல்ல, கருவறையில் வழிபாட்டை நடத்துகின்ற உரிமையும் அனைத்து சமூகத்தினருக்கும் வழங்கவேண்டும் என்பதற்கான போராட்டக் களத்திற்குப் பெரியார் தயாரானார். இதனையடுத்து, 1970-ல் தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் சட்டத்தை கலைஞர் அரசு கொண்டு வந்தது. அதற்கு நீதிமன்றம் மூலம் நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தியபோது, அந்த உரிமைப் பறிப்பை, "தன் நெஞ்சில் தைத்த முள்' என்று பெரியார் குறிப்பிட்டார். 2006-ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆகமப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற பல சமூகத்து அர்ச்சக மாணவர்களும் தங்கள் உரிமைக்கான சட்டப் போராட்டத்தை ஆரியச் சதியை எதிர்த்து இன்றளவும் நடத்தி வருகிறார்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழகத்தின் தனிப்பட்ட ஆன்மிக முறையை ஆரியம் அழிக்க முற்படுவதும் அதனை எதிர்த்து தமிழகம் போராடி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும்  வள்ளுவர் காலத்திலிருந்து வள்ளலார் காலம்வரை தொடர்ந்து, தற்போதும் நீடிக்கிறது. இந்து மதத்தை அமெரிக்காவரை பரப்பி புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தரிடமே, ""நாங்கள் இந்துக்களல்ல, திராவிடர்கள். எங்கள் சமய நெறிமுறை மாறுபட்டது''’என்று விளக்கம் சொன்ன மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்ற திராவிட அரசியல் இயக்கத்துக்கு முற்பட்டவர்களும் உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பலத்தில் தமிழ் மந்திரமான தேவாரம் ஒலிப்பதற்கு தடை போட்ட ஆரியத்தை எதிர்த்து முழங்கிய ஓதுவார் ஆறுமுகசாமி பக்கம் நின்று போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற திராவிட இயக்க அரசியலுக்குப் பின்னர் தோன்றிய முற்போக்கு அமைப்புகளும் உண்டு.

தமிழ்ப் பண்பாட்டின் மீதான படையெடுப்பை ஆரியம் நேரடியாகவும் மேற்கொள்ளும், தனது கைக்கூலிகள் வழியாகவும் கையாளும். தமிழையே ஆயுதமாக ஏந்தி ஆரியத்தின் பிடியிலிருந்து இம்மண்ணில் ஆன்மிகத்தைக் காத்த அரசர்களும் புலவர்களும் உண்டு.  அதற்காக உயிர்நீத்தவர்களும் உண்டு. கொலை செய்யப்பட்டவர்கள் உண்டு. கழுவில் ஏற்றப்பட்டவர்கள் ஏராளம்.      

வருணாசிரமக் கோட்பாட்டின் அடிப்படையில் பகவத்கீதையில் சொல்லப்படும் நான்கு வருணங்களைக் கொண்டு பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம்.

வள்ளுவர் வகுத்த ‘"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம். இதனைத்தான் தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்கள், சமூகநீதி சக்திகள், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அமைப்புகள் உள்ளிட்டவையும் முன்னிறுத்துகின்றன.

ஆன்மிக அரசியலை ஆதரிப்பவர்கள் சமஸ்கிருத பகவத் கீதை வழியைக் கையாளப் போகிறார்களா? தமிழ்மறையான திருக்குறள் பாதையில் நடக்கப் போகிறார்களா?  தேர்ந்தெடுக்கும் முறையில் அடங்கியிருக்கிறது ஆன்மிக அரசியலின் உண்மை முகம்.

-மாவலி




சார்ந்த செய்திகள்