தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாரம், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் பேர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படவிருக்கிறது.
தமிழக அரசின் இந்தச்செயல் மிகவும் அபாயமரமானது என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது தமிழகம். வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல்களை மனதில் வைத்தே, வாக்காளர்களைக் கவர்வதற்காக பொங்கல் நிதி என்ற பெயரில் ரூ.1000 வழங்கிய எடப்பாடி அரசு, இப்போது ரூ.2000 தரப்போகிறது என்று குற்றம் சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள்.
கடும் நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசு, ஏற்கனவே வாங்கிய கடனுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்திலிருந்து வட்டியாகக் கட்டிவரும் நிலையில், ஆளும் கட்சியினர், அரசாங்க கஜானாவிலிருந்து மக்களுக்கு வாரியிறைக்கின்றனர்.
தேர்தலின்போது மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்பதால், அரசு காட்டுகின்ற தாராளத்துக்கு எதிர்வினை என்னவென்றறிய மக்களைச் சந்தித்தோம்.
பட்டி தொட்டிகளிலும், நகரங்களிலும் வயல்வெளிகள், தெருக்கள், தாலுகா அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் கையில் படிவங்களுடன் மக்கள் கூடி நிற்பதைப் பார்க்க முடிந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா – கூனம்பட்டியில், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் கிராமத்துப் பெண்களிடம், ஊரக வேலை பணித்தள பொறுப்பாளர் காளீஸ்வரி படிவத்தைக் காட்டி ஏதோ விளக்கினார். அம்மக்கள் அவரிடம் “என்ன தாயீ.. நெசமாவா.. ரெண்டாயிரம் பணம் அப்படியே கிடைச்சிருமா?” என்று ஏக்கத்துடன் கேட்டார்கள்.
காளீஸ்வரியிடம் முத்தம்மாள் என்ற பாட்டி “கவர்மென்ட்ல வேலை பார்க்கிறவனும் பாரம் கொடுத்திருக்கான்னு பேசிக்கிட்டாங்க. மச்சி வீடு வச்சிருக்கவங்களும் எங்களுக்கும் வேணும்னு நம்மகூட சேர்ந்து வாங்கப் பார்க்கிறாங்க. வசதியா இருக்கிறவங்க பண்ணுற கூத்துல நம்மள மாதிரி இல்லாதவங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காம போயிருமோன்னு பயமா இருக்கு.” என்றார்.
சிவகாசி தாலுகா அலுவலக மரத்தடியில் படிவத்தை நிரப்புவதில் ஆர்வமாக இருந்தார்கள் மக்கள். சத்யா என்பவர் “எம்.ஜி.ஆரு.. ஜெயலலிதா அம்மா.. இவங்களைவிட ரொம்ப நல்லவரா இருக்காரு வாழப்பாடி..” என்று சொல்ல, “அய்ய.. அவரு வாழப்பாடி இல்ல.. எடப்பாடி.”என்று இடைமறித்த சந்தோஷக்கனி. “நாங்கள்லாம் எப்பவும் ரெட்ட இலைக்குத்தான் ஓட்டு போடுவோம். இந்தவாட்டி யாருக்குப் போடறதுன்னு தெரியாம இருந்தோம். இப்ப தெளிவாயிட்டோம்.” என்றார்.
இஸ்திரி போடுபவரான குமார் “அய்யா.. நானும் பாரம் கொடுத்திருக்கேன். மொதல்ல பணம் கணக்குல ஏறட்டும். யாரு கொடுத்தாலும் அது நம்ம பணம்தான். மக்களோட பணம் மக்கள்ட்ட வந்து சேருது. யாருக்கு ஓட்டுங்கிறது அந்த நேரத்துல மனசுல என்ன தோணுதோ அத வச்சித்தான். இல்லாதவனைக் காட்டிலும் இருக்கிறவன்தான் போட்டி போட்டு வாங்கப் பார்க்கிறான். இந்தமாதிரி நேரத்துலதான், எவ்வளவு பணம் இருந்தாலும், பிச்சைக்காரனைவிட கேவலமான நிலையில யார்யாரு இருக்கான்ங்கிறத தெரிஞ்சிக்க முடியுது.” என்றார்.
“எடப்பாடி படு விவரம்ங்க..” என்று சிரித்த விழுப்பனூர் லட்சுமி “பின்ன என்னங்க.. நம்ம மக்களைப் பத்தித்தான் தெரியும்ல. டிவில இருந்து மிக்ஸி கிரைண்டர் ஃபேன் வரைக்கும் எந்த ஆட்சில யாரு கொடுத்தாலும் வாங்கிக்கிருவாங்க. இப்ப எடப்பாடிக்கு காலம். அவரு காட்டுல மழை கொட்டுது. பார்க்கத்தானே போறோம். எடப்பாடி கொடுத்த ஆயிரம், ரெண்டாயிரமெல்லாம் ஓட்டாகுமா இல்லியாங்கிறத.” என்றார் அவரும் விவரமாக.
உலகமென்னும் நாடக மேடையில், அரசியல்வாதிகள் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரையிலும், குறிப்பாக தேர்தல் நேரத்தில், வெகு சிறப்பாகவே நடிக்கின்றனர்.