நீண்ட வருடங்களாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வரிடம் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கியிருந்தார். கிட்டத்தட்ட சில நாட்களாகவே பரபரப்பைக் கிளப்பி வந்த அந்த அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்பட்டிருந்தால் அவர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் இறப்புக்கு சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர ஆணையத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. பலரும் இதுதொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்துள்ள நீங்கள் இந்த அறிக்கை குப்பையில் தூக்கிப்போட வேண்டிய ஒன்று என்று காட்டமாகக் கருத்து தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் இவ்வாறு கூற என்ன காரணம்?
நான் என்னுடைய மற்றொரு பேட்டியில் இந்த அறிக்கை குப்பையில் போடக் கூட தகுதியில்லாத அறிக்கை என்று சொல்லியிருப்பேன். இந்த நேரத்தில் அதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு அந்த ஆணையத்தின் மீதோ, தனிப்பட்ட அவர் மீதோ எந்த விருப்பு, வெறுப்பும் கிடையாது. பிரபல ஆங்கில நாளேடு கூட இந்த அறிக்கையை Dustbin-ல் (குப்பைத்தொட்டி) போட வேண்டிய ஒன்று என்று கருத்து தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையை சட்டம் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடமாக வைக்க வேண்டும். ஏனென்றால் ஒரு ஆணையம் எப்படிச் செயல்படக் கூடாது என்பதற்கு இந்த ஆணையம் மிகச் சிறந்த உதாரணம்.
ஜெயலலிதா வீட்டில் நினைவிழந்த நிலையிலிருந்து மருத்துவமனைக்கு 25 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டார் என்றும், அவர் மயங்கி விழ சசிகலா உள்ளிட்ட யாரும் காரணமில்லை என்றும், ஜெயலலிதாவுக்கு அதற்கு முன்பு இருந்த உடல் நலப் பாதிப்பு காரணமாகவே அவர் மயங்கினார். அதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதை முதல் பாராவிலேயே அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா மருத்துவர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டார். ஆனால் இந்த ஆணையம் மருத்துவமனையில் ஜெயலலிதாவைக் கட்டுப்படுத்தியது போல் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இறப்பு தேதியை மாற்றிக் கூறியிருக்கிறார். இதற்கு காரணமாக ஜெயலலிதா உறவினரான தீபக்கின் திதி சாட்சியத்தை எடுத்துக் காட்டியுள்ளார். ஜெயலலிதா இறந்தபோது தீபக் எங்கிருந்தார். மேலும் எக்மோ கருவி வைத்த பிறகு ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளுமே தங்களின் சதித்திட்டத்தை காலம் கடத்துவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு என்று கூறுகிறார். 24 மணி நேரம் காலம் தாழ்த்தி இவர் கூறுவதைப் போல் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்தார்கள் என்று வைத்துக்கொண்டாலுமே அதனால் என்ன மாற்றம் நடைபெற்றது. அதே நடைமுறைதானே நடந்திருக்கும், பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்று இருப்பார். 4ம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால் ஆறுமுகசாமி முதல்வராக ஆகியிருப்பாரா இல்லை வேறு யாராவது ஆகியிருக்கப் போகிறார்களா?
4ம் தேதி திதி கொடுத்தார்கள் என்று சொல்லும் ஆறுமுகசாமி அதற்காக தீபக் திதி கொடுத்த புகைப்படத்தை ஆணைய அறிக்கையில் ஜெராக்ஸ் போட்டு வைத்துள்ளார். ஜெயலலிதா 2016ம் ஆண்டு இறந்தார், திதி எப்போது கொடுப்பார்கள் 2017ல். ஒரு ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஆதாரமாக இவர் கொடுத்துள்ளதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? மேலும் 5ம் தேதி காலை ஜெயலலிதா இறந்த அன்று, நரம்பியல் நிபுணர் தான் ஜெயலலிதா கண்ணை காலையில் சோதித்தேன். அசைவு இருந்தது என்று ஆணையத்திடமே தெரிவித்திருந்தார். இதை ஆறுமுகசாமி கவனத்தில் ஏன் கொள்ளவில்லை. 4ம் தேதி இறந்திருந்தால் கண் மட்டும் 5 தேதி அசையுமா? என்பதை ஆறுமுகசாமி ஆணையம்தான் விளக்க வேண்டும்.