நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இன்று காலை ஒரு வீட்டின் இரும்புக் கதவில் கரடிக்குட்டி ஒன்று மாட்டிக்கொண்டது. அதைக் காப்பாற்ற வழி தெரியாமல் தாய்க்கரடி தவித்த சம்பவம் அதைக் கண்டவர்களின் மனதை நெகிழ வைத்தது. இந்த சம்பவம் குறித்து கரடி மாட்டிக்கொண்ட அந்த வீட்டின் உரிமையாளர் தீபன் பகிர்ந்தது...
"காலை சுமார் ஏழரை மணிபோல எங்க வீட்டு நாய் சத்தமா குரைச்சுக்கிட்டே இருந்தது. ரொம்ப நேரமா குரைக்கவும் என்னவென்று பார்க்கப் போனோம். பார்த்தா எங்க வீட்டு கேட் பக்கத்துல மூணு கரடிகள் இருந்துச்சு. எனக்கு அப்படியே அதிர்ச்சியாச்சு. சுதாரிச்சுக்கிட்டு, வீட்ல மத்தவங்கள கூப்பிட்டேன். ஆள் நடமாட்டம் தெரியவும் பெரிய கரடியும் ஒரு குட்டிக் கரடியும் கேட்டைத் தாண்டி குதிச்சு வீட்டுக்கு வெளியே போயிருச்சு. ஒரு குட்டிக் கரடி மட்டும் கேட்டில் இருந்த ஓட்டை வழியே போக முயற்சி பண்ணுச்சு. ஓட்டை சின்னதா இருந்ததால் மாட்டிக்குச்சு. மாட்டிகிட்டு வலியில் துடிக்க ஆரம்பிச்சுருச்சு. ஒரே சத்தம். அது மாட்டிக்கிட்டதைப் பார்த்து வெளியே தாய்க் கரடி தவிக்குது. எப்படியாவது காப்பாத்த முடியாதான்னு கேட்கிட்ட போய் முட்டுது. எங்களுக்கு இதைப் பார்த்து மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அதே நேரம், பக்கத்துல போகவும் பயம். கரடி தாக்கிருச்சுன்னா என்ன பண்றது?
தவிக்கும் பெரிய கரடி
விடுவிக்கப்பட்ட கரடிக்குட்டி
வனத்துறைக்கு முன்னாடியே தகவல் கொடுத்துட்டோம். ஜீப்ல வந்தாங்க, வந்தவுடன் 'பெரிய கரடியை விரட்டினாத்தான் இதைக் காப்பாத்த முடியும், இல்லைன்னா குட்டியை நாம தாக்குறோம்னு நினைச்சு அது ஏதாவது பண்ணும்' என்பதால் தீப்பந்தம் கொளுத்தி பெரிய கரடியையும் அந்த இன்னொரு குட்டியையும் விரட்டினாங்க. முதல்ல போகாம அங்கேயே இருந்த கரடிகள் தீப்பந்தத்தைப் பார்த்து பயந்து காட்டுக்குள் போச்சு. வனத்துறை உடனே ஒரு கம்பியைப் பயன்படுத்தி குட்டிக் கரடி அதுவா கழுத்தை பின்னாடி இழுக்குமான்னு பாத்தாங்க. அதால வெளியே வரமுடில. அப்புறம் கேட்டில் இருந்த கம்பியை அறுத்து கரடியை விடுவிச்சாங்க. விட்டவுடன் துள்ளிக்குதிச்சு பின்பக்கம் ஓடுச்சு கரடிக்குட்டி. பின்னர் கரடிக்குட்டியை வனத்துறையே பிடிச்சுட்டுப் போய் காட்டில் விட்டுட்டாங்க. நாங்க எல்லோரும் அவரவர் வேலையைப் பாக்கப் போய்ட்டோம்.
அதுக்கப்புறம் நடந்ததுதான் ரொம்ப கஷ்டம். ரெண்டு, மூணு மணிநேரம் கழிச்சு குட்டிக் கரடியைத் தேடி பெரிய கரடி வந்தது, கொஞ்ச நேரம் எங்க தெருவில் சுற்றிவிட்டு சோகமா போச்சு. அது குட்டியைப் பாக்காம இந்த ஏரியாவை விட்டு போகுமான்னு தெரியல. நாங்க இதுவரைக்கும் கரடி இப்படி தெருவுக்குள் வந்து பாத்ததேயில்லை. இன்னைக்கு இப்படி ஒரு சம்பவம் ஆயிடுச்சு. குட்டியைப் பார்த்துருச்சுன்னா பரவாயில்ல. இல்லைனா கரடிக்கும் சோகம், எங்களுக்கும் சோகம்" என்று கவலையாகக் கூறினார்.