தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது சமுத்திரகனியை வைத்து ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர், இந்த ஆண்டுடன் இயக்குநராக தனது பணியை துவங்கி 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுதொடர்பாக நாம் அவரிடம் கேள்வியை எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் ஆச்சரியமான பதில்கள் வருமாறு,
உங்களின் முதல்படம் 1981ஆம் ஆண்டு வெளிவந்தது. இன்றைக்கு 2021 வருடம். இந்த 40 ஆண்டுகால பயணத்தில் எத்தனையோ இன்ப துன்பங்களைப் பார்த்திருப்பீர்கள். வெற்றி தோல்வி படங்களைக் கடந்து போயிருப்பீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள், பழைய வேகம் தற்போதும் இருக்கிறதா? இந்த 40 ஆண்டு காலத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? எப்போதும் இருக்கும் அந்த உற்சாகத்துக்கு என்ன காரணம் என்று நினைக்கிறார்கள்?
போன கரோனா நேரத்திலேயே இந்த கதையை ரெடி பண்ணிவிட்டேன். சமுத்திரக்கனியை வைத்து எடுத்தால் படம் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். என்னுடைய உதவியாளரை வைத்து அவரை அழைத்து வரச் சொன்னேன். அவரிடம் கதை சொல்ல முயன்றபோது, அவர் என்னிடம் "சார், நான் இவர்கள் படங்களில் எல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிலரின் பெயர்கள் என் மனதில் நீண்டகாலமாக இருக்கிறது. அதில் நீங்களும் ஒருவர், உங்கள் படத்தில் நடிக்க நான் பெருமைப்படுகிறேன்" என அவர் என்னிடம் தெரிவித்தார். அதையும் தாண்டி அவர் கதையைக் கூட கேட்கவில்லை. இருந்தாலும் படத்தில் நடிக்கப் போகிறவர் நீங்கள், எனவே கதையைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறினேன். உங்களுக்கு உடன்பாடு என்றால் அடுத்த கட்டத்துக்குப் போகலாம் என்று அவரிடம் தெரிவித்தேன்.
முதல்நாள் ஷூட்டிங். காட்சி எடுக்க நாங்கள் தயாரானோம், நான் அவரிடம் எப்படி வேலை வாங்கப் போகிறோம் என்ற யோசனையில் இருந்தேன். இவரிடம் எப்படி வேலை செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார். ஆனால் முதல்நாள் காட்சி எடுக்கப்பட்ட பிறகு எங்களுக்குள் இருந்த அனைத்து சந்தேகங்களும் ஓடிப்போய்விட்டன. அடுத்தடுத்து 45 நாட்கள் ஷூட் செய்தோம். அவர் கடைசி நாள் ஷூட்டுக்கு முதல்நாள் என்னிடம், “எப்படி சார் இந்த வயசிலும் இப்படி இருக்கிறீர்கள். ஓடுறீங்க, விழுந்தடித்து எழுகிறீர்கள், என்னால் நம்ப முடியவில்லை சார்” என்று தெரிவித்தார். அப்போதுதான் தெரிந்தது அவர் என்னை மனதிற்குள்ளேயே ரசித்துக்கொண்டிருந்தார் என்று. நான் அவரிடம் யோகாசனம் செய்வது என்னை இப்படி மாற்றியுள்ளது என்று கூறினேன்.
அந்த சம்பவமும் கூட ஒரு விசித்தரமான நிகழ்வுதான். கோவை அருகில் வெள்ளியங்கிரியில் ஒருவர் யோகா உள்ளிட்ட மூச்சுப் பயிற்சி வகுப்புக்களை எடுக்கிறார். நன்றாக இருக்கிறது என்று சில நண்பர்கள் என்னிடம் கூற, நான் அங்கு சென்றேன். அங்கு ஒரு சிறிய மூன்று குடில்களை அமைத்து சிலருக்கு யோகாவை அவர் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். அவரை குரு ஜீ என்று சிலர் அவரை அழைக்க முயன்றால், அப்படி அழைக்காதீர்கள், நான் உங்கள் நண்பன் என்று சொல்லி அவர்கள் அடுத்தமுறை அப்படி கூப்பிடாதவாறு தடுப்பார். இந்தக் கதைகள் அனைத்தும் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இப்போது இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. நான் அங்கு சென்றபோது அவருடன் நிறைய கேள்விகளைக் கேட்டுள்ளேன். இயற்கைக்கு மீறிய சக்தி இருப்பதாக கொண்டாலும், அதை கடவுள் என்று அழைக்கிறார்கள் பலரும். அந்தக் கடவுள் என்றால் யார் என்று கேட்டேன். அதற்கு நீதான் கடவுள் என்று அவர் கூறினார். எனக்கு அவரின் பதில் ஆச்சரியமாக இருந்தது.
மேலும் பேசிய அவர், நீ ராமனாக இருக்கும்வரையில் கடவுள். அவ்வாறு எப்போது இல்லாமல் மாறுபடுகிறாயோ அப்போது நீ ராவணன் என்று கூறினார். எனக்கு அதிலேயே நிறைய மாறுபாடு உண்டு. சீதையை தன் இடத்திற்கு கொண்டு சென்று பல நாட்கள் வைத்திருந்தாலும் தன்னால் அவளுக்கு எந்த தேசாரம் இல்லாமலும், தன்னால் அவளின் கற்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமலும் மிக உத்தமனாக இருந்துள்ளார். எனவே ராவணனை தீயவராக பார்ப்பது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் இப்படி கூறியதும், இல்லை, ராமர் கடவுள் என்று என்னிடம் பேச்சை மாற்றி பேச ஆரம்பித்தார். நான், அவரும் தாய் தந்தையருக்குப் பிறந்தவர்தான், மன்னுக்கு மகனாகப் பிறந்தவர், பின்னர் எப்படி கடவுள் என்று கூறுகிறீர்கள் என்று எதிர்க்கேள்வி கேட்டேன். அதற்கு அவரிடம் முறையான பதிலில்லை. எனவே எல்லாவற்றையும் தாண்டி மூச்சுப் பயிற்சி என்னை புதிய மனிதனாக மாற்றி சிந்தனையைப் புதுப்பித்து வருகிறது என்பதே உண்மை.