Skip to main content

ஒற்றைத் தலைமைதான்... அதுவும் சசிகலாதான்... அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

 

அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று அதிமுக எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராஜேந்திரனும் கூறியிருந்தனர். இதையடுத்து ஜீன் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.

 

அதன்படி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த 3 எம்எல்ஏக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 
 

இந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திடம் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.


 

 

sasikala


 

ஆலோசனை கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நினைக்கிறீர்கள்? 
 

நியாயத்தை பேசுவோம் என்பதால் அந்தக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பவில்லை. நேற்று வரை இரண்டு எம்எல்ஏக்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இன்று ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அதைப்பற்றி யாரும் எதுவும் பேசாமல் செல்கிறார்கள். இந்தக் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வருவதை அவர்கள் விரும்பவில்லை.
 

ஒற்றைத் தலைமை வருவதை யார் விரும்பவில்லை?
 

ஒற்றைத் தலைமை வருவதை தலைமை நிர்வாகிகள்தான் விரும்பவில்லை. உண்மையான தொண்டர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புகிறார்கள். ஒற்றைத் தலைமை இல்லாததால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. தன் மகனை வெற்றி பெற வைக்க பாடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராக முறையாக செயல்பட்டு மற்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற ஏன் பாடுபடவில்லை. மகனை அழைத்துக்கொண்டு மத்திய அரசில் உள்ள எல்லோரையும் பார்க்கும் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கான நலத்திட்டங்களை ஏன் பெறவில்லை. 
 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா இந்த கட்சியை வழி நடத்த வேண்டும் என்றும், அவரை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று கெஞ்சியது, காலில் விழுந்தது இப்போதுள்ள முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்பட அனைவரும்தான். இன்று சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை வேடம் போடுகிறார்கள். இந்த ஆட்சியே இருக்கக்கூடாது என்று வாக்களித்தவர் ஒருங்கிணைப்பாளர், ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் இணை ஒருங்கிணைப்பாளர். இவர்கள் இந்த கட்சியை எப்படி வழிநடத்துவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவர்களது செயல்பாடுகளை பார்த்தால் ஜெயலலிதாவின் எண்ணங்களை குழித்தோண்டி புதைத்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. 
 

ஒற்றைத் தலைமைதான் வேண்டும். அதுவும் சசிகலாதான். ஏனென்றால் ஜெயலலிதாவுடன் இருந்து செயல்பட்டவர். ஜெயலலிதா எப்படி ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி கூப்பிட்டார்களோ, அதைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கட்சியினரையும் தெரிந்தவர் சசிகலா. மேலும் தமிழகத்தில் எங்கு கட்சி பலவீனமாக இருக்கிறது. பலமாக இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதிமுக மீது உண்மையான அக்கறை கொண்டவர் சசிகலா மட்டுமே. 
 

ஒற்றைத் தலைமை தேவையில்லை. இரண்டை தலைமையே நன்றாக செயல்படுகிறது என்று கூட்டத்திற்கு பிறகு சொல்கிறார்களே?
 

நன்றாக செயல்பட்டிருந்தால் ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்கள்.
 

சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்களே...
 

எதற்கு அந்த கட்டுப்பாடுகள். எதற்கு செய்தியாளர்களை சந்திக்க கூடாது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சொல்லக்கூடாது. அவர்கள் பற்றிய குறைபாடுகளை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக, தங்களைப் பற்றிய உண்மை வெளியே வந்துகொண்டிருப்பதால் என்பதற்காக செய்தியாளர்களை சந்திக்க கூடாது என்று சொல்லுகிறார்கள். பா.ஜ.க.வால்தான் அதிமுக தோற்றது என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மை. சிவி சண்முகம் சொன்ன கருத்தை நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்கிறேன். 


 

 

kallakurichi mla prabhu


 

சபாநாயகர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அது எந்த நிலைமையில் இருக்கிறது...
 

நாங்கள் இந்த ஆட்சிக்கு எதிராக போகக்கூடியவர்கள் கிடையாது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றோ, திமுகவுடன் கைக்கோர்க்க வேண்டும் என்றோ எங்களுக்கு எண்ணம் கிடையாது. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் கொடுத்திருக்கிறார்களே தவிர, இந்த கட்சிக்கோ, ஆட்சிக்கோ எந்தவித அவப்பெயரும் ஏற்படுத்தும் விதத்தில் நான் செயல்படவிலலை. 
 

டிடிவி தினகரனை சந்தித்துப் பேசியதாக...
 

இப்போது ஆட்சியில் இருப்பவர்கள்தான் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று சசிகலா காலில் விழுந்து அவரை பொதுச்செயலாளராக பதவியேற்க சொன்னார்கள். இந்த வீடியோவை உலகமே பார்த்தது. நாங்கள் என்ன தப்பு செய்தோம். திமுகவுடன் சென்றோமா? வேறு கட்சிக்கு சென்றோமா? நான் இன்று வரை அதிமுகவில்தான் இருக்கிறேன்.