தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிக அளவில் எழுந்து வருகிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்தார். பொதுப் பட்டியல், மாநில பட்டியல் என்றால் என்ன என்ற குழப்பமும் சிலருக்கு வரலாம். அதற்கான சிறிய விளக்கமும், இன்றைக்குக் கல்வியை ஏகபோக உரிமையாக மத்திய அரசு தன் கையில் வைத்திருப்பதற்கு எது காரணமாக அமைந்தது என்பது குறித்து இங்குப் பார்க்கலாம்.
இந்திய அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டான அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகளுக்கான பொதுவான அதிகாரங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். அதன்படி மத்திய பட்டியலில் 100 அதிகாரங்களும், மாநில பட்டியலில் 66 அதிகாரங்களும், பொதுப்பட்டியலில் 52 அதிகாரங்களும் இருப்பதாக அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் மத்திய பட்டியலில் உள்ளவற்றைப் போலவே பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு மாநில அரசுகளிடம் இருந்து பறித்து கபளீகரம் செய்து வருகிறது.
குறிப்பாக பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்கள் என்பது ஒத்திசைவு தன்மை அதிகாரங்களைக் கொண்டது. மத்திய அரசு அதில் உள்ள பிரிவுகளில் சட்டங்களை இயற்றும்போது மாநில அரசின் அனுமதியைக் கேட்க வேண்டும். அவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால் பொதுப்பட்டியலில் கல்வி உள்ளிட்ட சில துறைகள் உள்ளதால் மத்திய அரசை ஆள்பவர்கள் எவ்வித கேள்விகளையும் மாநில அரசிடம் கேட்காமல் நீட் போன்ற தேர்வை தங்கள் விருப்பத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.
இதனால் பொதுப் பட்டியலில் இருந்தாலும் தங்களால் எதுவும் செய்ய முடியாமல் மாநிலங்களை ஆள்பவர்கள் கையை பிசைந்து வருகிறார்கள். அதையும் தாண்டி கல்வி என்பது 1975ம் ஆண்டு வரை மாநில பட்டியில்தான் இருந்து வந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரகடனத்தின்போது கல்வியை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு அவர் மாற்றினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தத்தின் மூலம் இதை இந்திரா காந்தி சாத்தியப்படுத்தினார்.
அதன்பிறகு இந்த 47 ஆண்டுகளில் எத்தனையோ அரசுகள் டெல்லியில் கோலோச்சினாலும் அவசர நிலையின்போது பறிபோன இந்த உரிமையை மாநிலத்திடம் கொடுக்க எந்த அரசுக்கும் மனமில்லை. குறிப்பாக இந்தியாவில் எது நடந்தாலும் நேரு, இந்திராவே காரணம் என்று கூறும் பாஜக கூட இந்திராவின் இந்தச் சட்டத்தை நீக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைக்கு உயர்சாதி ஏழைகள் விவகாரத்தில் எப்படி இருவரும் ஒருவர் மாறி ஒருவர் ஆதரவு தெரிவிக்கிறார்களோ, அதைப்போலவே இந்த விஷயத்திலும் பாஜக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கைகளைக் காதில் விழாதது போலவே இருந்து வருகிறது. மாநிலத்துக்கு அதிகாரத்தைக் கொடுக்க ஆள்பவர்கள் விரும்புவார்களா என்ன?