குரூப்-4 தேர்வில் குறிப்பிட்ட சில மையங்களை தேர்ந்தெடுத்து எழுதியவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்தது சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், "குறிப்பிட்ட மையங்களில் செல்போனைக் கொடுத்து பிட் அடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். இந்த பிரச்சனையில், நீதிமன்றம் தலையிடவேண்டும்' என போர்க்கொடி தூக்கியுள்ளனர் சமீபத்தில் எஸ்.ஐ. தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான போலீசார்.
தாலுகா உதவி ஆய்வாளர்கள் ஆண்கள் 462, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 198 என மொத்தம் 660 பணியிடங்களும், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்களில் ஆண்கள் 193, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 83 என மொத்தம் 276 பணியிடங்களும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உதவி ஆய்வாளர்களில் 33 ஆண்களுக்கான பணியிடங்கள், மேலும் பல பணியிடங்களை உள்ளடக்கிய 969 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை எழுத விரும்புகிறவர்கள், மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கடந்தாண்டில் அறிவித்தது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம். இதிலும், மொத்தமுள்ள பொது ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் துறைசார் ஒதுக்கீட்டில் காவல்துறையினர் 20 சதவிகிதமுள்ள காலிப் பணியிடங்களுக்காகப் போட்டியிடலாம் எனவும் அறிவித்தது.
"ஜனவரி 11-ஆம் தேதி காவல்துறைக்கான ஒதுக்கீட்டிற்கான எழுத்துத் தேர்வு எனவும், பொது ஒதுக்கீடு எழுத்துத் தேர்வு ஜனவரி 12-ஆம் தேதி யிலும் தனித்தனியாக நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறைக்கான ஒதுக்கீட்டு தேதியினை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தலைக் காரணம் காட்டி 13-ஆம் தேதி என ஒத்தி வைத்தது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்.
சென்னையைப் பொறுத்தவரை அண்ணா பல்கலையில் ஆண்களும், மதுரவாயல் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பெண்களும் எழுதுவதாகவும் அறிவித்திருந்தார்கள். தேதி மாறியதைப் போல் அத்தனைபேர்களையும் மதுரவாயல் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் எழுத வைத்தார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு பிட் பேப்பர், செல்போன் என அங்கு தடை செய்யப்பட்ட அனைத்தும் தாராளமாக புழங்கிய நிலையில் தேர்வும் முடிந்தது.
எங்களது வாட்ஸ்அப் குரூப்பில் இதைப் பற்றி ஆதங்கமாய் விசாரிக்கையில் சென்னை, திருப்பூர், திருநெல்வேலி, திருச்சி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மையங்களில் இந்த கூத்து நடந்திருக்கின்றது என்று தெரியவந்தது. 12-ஆம் தேதி எஸ்.ஐ. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கைக்கடிகாரம், கைபேசி சம்பந்தப்பட்ட எந்தப் பொருட்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால் 13-ஆம் தேதி எழுதிய காவலர்கள் தேர்வில் அனைத்துச் சலுகைகளும் இருந்துள்ளன.
பொதுப்பிரிவினருக்கான எழுத்துத் தேர்வு கடினமாக அமைந்திருந்த வேளையில், துறைசார் ஒதுக்கீட்டில் காவல்துறையினர் எழுதிய எழுத்துத் தேர்வு குறிப்பிட்ட சில மையங்களில் எழுதியவர்கள் தேர்வில் கேட்கப்பட்ட 170 கேள்விகளையும் எழுதி மொத்தமாக 85 மதிப்பெண்ணை பெற்று முதலிடத்திற்கு வந்துவிடுவார்கள். மற்றைய மையங்களில் தேர்வு எழுதியவர்களின் நிலை என்னாவது..? அதனால்தான் இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்'' என்கிறார் சென்னையில் தேர்வெழுதிய பெண் போலீஸ் ஒருவர்.
இது இப்படியிருக்க, தென்காசியில் இயங்கிவரும் போட்டித் தேர்விற்கான பயிற்சி மையத்தின் இயக்குநர் ஒருவர், "நம்மஆளுக அத்தனை பேரும் 85 மார்க் எடுத்துட்டாங்க. தூத்துக்குடியைச் சேர்ந்த சிலரை சென்னை மையத்திற்கு மாற்றி தேர்வெழுத வைத்ததே அதற்காகத்தான்'' என போலீசார் உரையாடிய ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகி, துறைசார் ஒதுக்கீட்டு இடங்களுக்கு எழுதிய பலரின் எதிர்காலக் கனவுகள் கேள்விக்குறியாகிவுள்ளன. அதேவேளையில், குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான விடையையும் மாற்றித் தயாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்குடியைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரோ, "எங்களது துறைசார் ஒதுக்கீட்டிற்கான தேர்வு மையத்தின் ஒரு ஹாலுக்கு ஒரு ஏட்டையா, இரண்டு ஹாலுக்கு ஒரு எஸ்.ஐ. என்ற விகிதத்தில் கண்காணிப்பாளராக வருவது அங்குள்ள காவல்நிலைய எஸ்.ஐ.க்களும், ஏட்டுக்களுமே. ஒரே ஸ்டேஷனில் பணியாற்றுவதால் கண்டிப்பாக விடைகளைப் பரிமாற உதவுவதும், கேட்டுப் பார்த்து எழுதவும் அனுமதிக்கின்றார்கள். மீறி கண்டிப்பாக நடந்து கொண்டால் ஒரே ஸ்டேஷனில் பணியாற்றுவது பின்னாளில் சிரமம் தருமே. பணத்தை வாங்கிக் கொண்டும் விடைசொல்லிக் கொடுத்தவர்களும் உண்டு.
எங்களது மையத்தில் தேர்வெழுதிய அத்தனை பேருமே 85 மதிப்பெண் பெற்றுள்ளதாக சமீபத்தில் வெளியான ஆன்ஸர் கீ கூறுகிறது. படித்த நானும் பாஸ், படிக்காமல் பிட் எழுதிய அவனும் ஒரே மதிப்பெண் என்றால் தேர்வு எதற்கு?'' என்கிறார்.
இது தொடர்பாக தேர்வு ஆணையம் டி.ஜி.பி. கரன்சிங்காவிடம் கேட்டபோது, "இது போன்ற தவறுகள் நிச்சயம் நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அப்படியும் தவறுகள் நடந்திருந்தால் அந்த நிர்வாகிகள் மீதும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்''’என்கிறார்.
-நாகேந்திரன், அருண்பாண்டியன்