மணிப்பூர் கலவரத்துக்குப் பிறகு இந்தியா குறித்த உலக நாடுகளின் பார்வை குறித்து ஷான் சங்கரன் நம்முடன் சில கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அவை பின்வருமாறு....
“அமெரிக்காவில் அனைவரும் சுதந்திரமாகப் பேச முடியும். தங்களுடைய அரசாங்கத்தையே விமர்சிக்க முடியும். இப்போது இங்கு மணிப்பூர் சம்பவத்துக்காக மோடியை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்களுடைய போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். மணிப்பூர் விவகாரம் குறித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் நடைபெறுகிறது. மணிப்பூர் விவகாரம் என்பது நம் அனைவருக்கும் ஒரு அபாய எச்சரிக்கை தான். மனிதாபிமானமே இல்லாத ஒரு சமூகமாக நாம் மாறி வருகிறோம் என்பதற்கான எச்சரிக்கை தான் மணிப்பூர் சம்பவம்.
தமிழ்நாட்டு மக்களே இந்தப் பிரச்சனை குறித்து நீண்ட காலம் பேசவில்லை. எங்கெல்லாம் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ, அங்கெல்லாம் இப்படிப்பட்ட கலவரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான எனக்கு மணிப்பூர் கலவரம் குறித்த வீடியோ வெளிவந்த பிறகு தூக்கம் வரவில்லை. இங்கு காங்கிரஸ் கட்சியோடு இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். ராகுல் காந்தி அமெரிக்கா வந்தபோது அவருக்கான நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைத்தேன்.
மோடி என்பவர் பாசிசத்தின் குரலாக இருக்கிறார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. அதற்காகவும் சேர்த்தே நாங்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம். இந்துத்துவ அமைப்புகள் அமெரிக்காவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசியல்வாதிகள் பலருக்கு அவர்கள் நிதியுதவி செய்கின்றனர். பலரிடம் கெஞ்சிக் கூத்தாடி தான் மோடிக்கு இங்கு மரியாதை இருப்பது போல் அவர்கள் காட்டுகின்றனர். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற பிரதமர்கள் அமெரிக்கா வந்தபோது அவர்களுக்கு இங்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்தது.
ராகுல் காந்தியின் அமெரிக்க வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை மறைப்பதற்காகத் தான் மோடியின் வருகையை இவர்கள் பெரிதுபடுத்தினர். ராகுல் காந்தி இங்கு வந்து பேசிவிட்டுச் சென்ற பிறகு அவர் மீது மக்களுக்கு நிறைய அன்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் மோடியைக் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பாஜகவினர் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கினர். ஆனால் ராகுல் காந்தி மக்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். மோடி தனக்கு அனைத்துமே தெரியும் என்பது போல் நடந்துகொள்வார். ஆனால் ராகுல் காந்தி எது பற்றியாவது தனக்குத் தெரியவில்லை என்றால் அதை ஒப்புக்கொள்வார்.
ராகுல் காந்தி அமெரிக்கா வந்தபோது அவருக்கு எவ்வளவு வரவேற்பு இருந்தது என்பதற்கு அப்போது வெளிவந்த வீடியோக்களே சாட்சி. அவருடைய கருத்துக்கள் வெளிவராமல் தடுப்பதற்கு பாஜக அரசு எவ்வளவோ முயற்சி செய்தது. அதையும் மீறி இவ்வளவு பேருக்கு அது ரீச் ஆனது. மக்களிடம் அவருக்கு இருக்கும் மதிப்பு என்பது இயற்கையாக உருவானது. மோடிக்கு இருக்கும் மதிப்பு என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று. அதற்காக அவர்கள் நிறைய பணம் செலவு செய்கின்றனர். அவர்கள் கட்டமைத்த பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது சரிந்து வருகிறது.
மணிப்பூரில் போராட்டங்கள் எப்போதும் நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால் இதுபோன்ற படுகொலைகள் இப்போதுதான் நடக்கின்றன. அதானி போன்றவர்களுக்கு அங்கு இருக்கும் கனிம வளங்களின் மீது ஆசை வந்திருக்கிறது. அதற்காகவும் தான் இந்த இன அழிப்பு என்பது அங்கு நடத்தப்படுகிறது. இவ்வளவு நடந்தாலும் மோடி எதைப்பற்றியும் கருத்து சொல்லவில்லை. அவருக்கு அதானி தான் முக்கியம். 2024-ல் தான் வெளியே செல்வதற்கு முன் அதானியிடம் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் போல் தான் கலவரம் நடக்கட்டும் என்று மோடி வேடிக்கை பார்க்கிறார்”.