விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் பிரபலங்கள், கவிஞர்கள், பிரபலமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பத்திரிக்கையாளர் பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசும்போது, " பெரியார் திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்குதான் ஆசிரியர் அவர்களிடம் ஒரு பேட்டி எடுத்து அது பெரிய சர்ச்சையாக்கப்பட்டது. எனக்கும் அண்ணன் திருமாவளவனுக்கும் பெரிய நட்பு உண்டு. அவரை தொலைக்காட்சிக்காக பலமுறை பேட்டி எடுத்துள்ளேன். ஒருமுறை கூட அழைப்பை நிராகரித்தது இல்லை. நேரத்தை சொல்வதில் மட்டுமே சிக்கல் இருக்குமே அன்றி, அவர் நேரங்காலம் பார்க்க மாட்டார். நான் தந்தி தொலைக்காட்சியில் இருந்து வெளியே வந்து ஒரு சமூக வளைதல ஊடகத்தை தொடங்கி, அதன் முதல் சிறப்பு விருந்தினராக திருமாவளவனை தான் அழைத்தேன்.

அவர் அன்றுதான் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினம். நிகழ்ச்சி 6 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 5.50 மணி வாக்கில் எனக்கு அவர் போன் செய்து நாளைக்கு வரலாமா? என்று கேட்டார். நீங்கள் இப்போது வர வேண்டும் என்று சொல்லுமிடத்தில் நான் இல்லை. ஆகையால் நீங்கள் எப்போது வந்தாலும், நீங்கள் வந்தால்தான் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று அவரிடம் கூறினேன். திருமாவளவன் மதச்சார்பற்றவர். எல்லா மதங்களையும் ஒன்றாக பார்ப்பவர். திமுக தலைவர் கலைஞர் மதசார்பின்மையை பற்றி ஒரு கருத்தை சொல்லியுள்ளார். மதசார்பின்மை என்ற ஒன்று இல்லை, மதநல்லிணக்கம் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். அவர் கூறியது நூறு சதவீதம் உண்மை. இந்து, கிருஸ்துவம், முஸ்லிம் மதங்கள் காலகாலத்திற்கும் அப்படியே தான் இருக்கும். ஆனால், மதசார்பின்மையை நாம்தான் பேண வேண்டும். அண்ணன் திருமாவளவன் நோன்பு இருப்பவர். ரம்ஜான் பண்டிகைக்கு மட்டும் இருக்காமல், இந்து பண்டிகைகளுக்கும் விரதம் இருக்க வேண்டும். எல்லா விரதங்களும் உடலை வலம் பெற செய்வதற்குத்தானே" என்றார்.