நீண்ட வருடங்களாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வரிடம் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கியிருந்தார். கிட்டத்தட்ட சில நாட்களாகவே பரபரப்பைக் கிளப்பி வந்த அந்த அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்பட்டிருந்தால் அவர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் இறப்புக்கு சசிகலாவை குற்றம் சாட்டுவதைத் தவிர ஆணையத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில் இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு:
மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஆறுமுகசாமி அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா இறப்புக்கு சசிகலாவை குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என்று தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
சார், நான் எந்த அரசியில் கட்சியிலும் இல்லை. அதனால் இந்த விஷயத்தில் மனசாட்சியோடு தான் பேச விரும்புகிறேன். நேற்று கூட இந்த அறிக்கை தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்று கருத்து தெரிவித்து எடிட்டோரியல் பகுதியில் செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த கட்டுரையின் முடிவில் இது குப்பைத் தொட்டி அறிக்கை என்ற தொனியில் கருத்து தெரிவித்து, கடைசியாக இதை அங்கே தான் போட வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த நாளேடு கூறிய அந்த கருத்தோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன். இது அரசியலுக்கு வேண்டுமானால் அவரின் அறிக்கை பயன்படலாம். அதைத்தாண்டி அவரின் அறிக்கையில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாக நான் கருதவில்லை.
ஜெயலலிதாவுக்கு எப்போதிலிருந்தே உடல்நலப் பிரச்சனை இருப்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. நீண்ட நாட்களாக அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுதான் இருந்தார்கள். குறிப்பாக பெங்களூர் சிறையிலிருந்து அவர்கள் வந்த பிறகு அவர்கள் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர்களின் செயல்பாடுகளிலேயே அதனை நாம் அறிந்துகொள்ளும் வகையில் அவர்கள் உடல் நலிவுற்றுக் காணப்பட்டார்கள். நீழிரிவு, நுரையீரல், சுவாச பிரச்சனை எனப் பலவற்றோடு அவர்கள் தொடர்ந்து போராடி வந்தார்கள் என்பது உண்மை. இதை எதையும் பற்றி கவனத்தில் கொள்ளாமல் முடிவெடுக்கும் இடத்தில் சசிகலா இருந்தார்கள் என்பது எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றா? நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
வெளிநாட்டுச் சிகிச்சை, ஆஞ்சியோ சிகிச்சை பற்றியெல்லாம் அதில் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அதை ஏன் செய்யவில்லை என்று தற்போது பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது எல்லாம் அவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்குத் தெரியாதா என்ன? இல்லை வேண்டும் என்றே அவர்கள் செய்யவில்லை என இவர்கள் கூற வருகிறார்களா என்று தெரியவில்லை. ஜெயலலிதாவை பொறுத்தவரையில் அவர்கள் உடல்நிலை சமச்சீராக இல்லை. பிபி லெவல் என்பது கண்ணாபின்னா என்று இருந்துள்ளது. இந்த நிலையை வைத்துக்கொண்டு அவருக்கு ஆஞ்சியோ எப்படி மருத்துவர்கள் கொடுக்கவில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை.
நாம் நினைக்கும் சிகிச்சை எல்லாம் எல்லோருக்கும் அளித்துவிட இயலாது. பாதிக்கப்பட்டவரின் உடல் நலத்தை நாம் தீவிரமாக ஆராய வேண்டும். மேற்கொள்ளப்படும் சிகிச்சை அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற உத்தரவாதம் நமக்கு ஏற்படும் நிலையில்தான் மேல் சிகிச்சையை மருத்துவர்கள் அளிக்க முன்வருவார்கள். எனக்கே சொந்த அனுபவம் ஒன்று உண்டு. என் தாயாருக்கு இதேபோன்று உடல்நல பாதிப்பு வந்தபோது மிகச் சிறந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தோம். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முன்வரும்போது அவரின் உடல்நிலை சமச்சீரற்ற நிலைக்கு திடீரென சென்றுவிட்டது. உடனடியாக இந்த நிலையில் அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். நாங்களும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றினோம்.
ஜெயலலிதாவுக்கும் இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சிகிச்சை அளிக்காமல் தவிர்த்திருக்கலாம். அவர்களின் உடல்நிலை ஏற்கனவே சீராக இல்லாத நிலையில் இறப்பு நடந்திருக்கலாம் என்பதே என்னுடைய கணிப்பு. தனிப்பட்ட நபரை இந்த ஆணையம் குற்றம் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 2012ம் ஆண்டே சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் சண்டை. இணைந்தாலும் இருவருக்குள்ளும் வருத்தம் இருந்தது என்று இவர் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இதையும் தாண்டி இந்த அறிக்கை முழுவதுமே அடுத்தவர்களைக் குறை சொல்லுவதை மையமாகக் கொண்டே செயல்பட்டிருக்கிறது. ஐஏஎஸ் ஆபீசர் ராதாகிருஷ்ணனை இந்த அறிக்கையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் மிக திறமையான அதிகாரி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் ஒரு வெட்னரி டாக்டர் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இந்த மருத்துவர்கள் பற்றி ஏதோ கூறியதாகவும், அதற்கு இவர் கடுமையான வரிகளில் கண்டனம் தெரிவித்துள்ளதும் வியப்பாக உள்ளது. மருத்துவர் என்று அவரை அழைக்காமல் இருப்பதே சிறந்தது என்ற சொல் பதத்தை எல்லாம் ஆணைய அறிக்கையில் கூறாமல் விட்டிருக்கலாம். தவறான முன் உதாரணமாக இது உருவாகிவிடும்.