அதிமுகவில் மாநிலங்களவை பதவிக்காக ஒரு பெரிய மோதல் நடந்து வருகிறது. ஏற்கனவே எம்பியாக இருந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன், அன்வன்ராஜா, விஜிலா சத்தியானந்த், மனோஜ்பாண்டியன் என ஏகப்பட்ட பேர் மோதுகிறார்கள். இதுதவிர கூட்டணி கட்சிகளிமிருந்து ஏ.சி.சண்முகம், தேமுதிகவின் சுதீஷ், த.மா.கா. ஜி.கே.வாசன் ஆகியோரும் தங்களுக்கு ராஜ்யசபா பதவி வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள்.
சுதீஷ் நேரடியாக எடப்பாடி பழனிசாமியிடமே பேசியிருக்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பாசிட்டிவான பதில் எதுவும் தரவில்லை. சுதீஷ் சந்திக்கும் முன்பாகவே பாமக தரப்பு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேமுதிகவுக்கு நீங்கள் சீட் கொடுக்க வேண்டுமா என்பது பற்றி நன்றாக ஆலோசனை பண்ணிக்கொள்ளுங்கள் என்று ஸ்பீடு பிரேக் போட்டுள்ளது.
ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டியிருப்பதால் அதில் வடமாவட்டங்களில் வாக்கு வங்கி உள்ள பாமக, தேமுதிக இரண்டையும் பேலன்ஸ் செய்து போக வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. அதோடு ஜி.கே.வாசனுக்காக பாஜகவும் சிபாரிசு செய்துள்ளது. அதனால் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பதில் தாமதம் நிலவுகிறது.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை தேமுதிகவின் சுதீஷீக்கு சீட்டு இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார். அதனால்தான் எடப்பாடியின் வாய்சாக ராஜ்யசபா சீட் பற்றி தேமுதிகவுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் போடப்படவில்லை என தெரிவித்துவிட்டார். அதிமுகவில் யாருக்கு சீட் என்பதில் ஒரு பெரிய குழப்பமே நிலவுகிறது. யாருக்கு சீட் கொடுத்தாலும் அதில் அதிருப்தியாளர்களாக மாறுபவர்கள் எதிர் முகாம்களுக்கு போய்விடக்கூடும் என யோசிக்கிறார். மொத்தத்தில் ராஜ்யசபா சீட் என்பது அதிமுகவில் ஒரு பெரிய வெடிகுண்டை வெடிக்க வைக்கும் என அதிமுக தொண்டர்கள் சஸ்பென்ஸ்ஸோடு காத்திருக்கிறார்கள்.