ரஜினி பேச்சால் அமைச்சர் பதவியை இழந்தவர்...
அரசியல் பயணத்தில் கோ-பைலட்டாக இருப்பாரா?

இந்த முறையும் போர் வராது என்று பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்க யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த டிசம்பர் 31 அன்று தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் ஆரம்பித்து 234 தொகுதியிலும் போட்டியிடப் போவதாகவும் சொன்னார் நடிகர் ரஜினிகாந்த். சொன்னதில் இருந்தே பல அரசியல் தலைவர்களும் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் நேற்று இரவு கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை சந்தித்து, அவரின் உடல்நலனை விசாரித்து பின்பு கட்சி ஆரம்பிக்கப் போவது பற்றி அவரிடம் கூறி ஆசி பெற்றார். இன்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர் எம் வீரப்பனை சந்தித்து அரசியல் பிரவேசம் பற்றி ஆலோசனை கேட்டுள்ளார்.

ஆர்.எம்.வீரப்பனுக்கும் ரஜினிக்குமான நட்பு நீண்டது. ஆர் எம் வீரப்பன், எம் ஜி ஆருடன் ஆரம்ப கால கட்டங்களில் இருந்து இருக்கிறார். எம் ஜி ஆரின் சத்யா மூவிஸை தலைமை பொறுப்பேற்று நடத்தியவரும் இவர்தான். எம் ஜி ஆர் ரசிகர் மன்றம், கட்சி என்று எல்லாவற்றிலும் பொறுப்பில் வகித்தும் உள்ளார். எம் ஜி ஆர் இறந்த பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பு இவர் கையில் வந்து முதலமைச்சராக ஆட்சியை பிடிப்பார் என்று பார்க்கையில், காற்று இவர் பக்கம் வீசாமல் எம்ஜிஆரின் துணைவி ஜானகி பக்கமும், ஜெயலலிதா பக்கமும் வீசியது. இருந்தாலும் ஜெயலலிதாவை எதிர்த்து ஜானகி பக்கமே இருந்தார். பிறகு கட்சி ஒன்றுபட்டாலும் இவர்களின் மனம் ஒன்றுபடாமலேயே இருந்தது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பொறுப்பேற்ற போது, இவர் பக்கம் பல அமைச்சர்கள் இருந்தனர். அதனால் இவரிடம் தன் இரும்புமனுஷி இமேஜை அதிகம் காட்டாமல் இருந்தார் ஜெயலலிதா.
ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை. தற்போது ஆர் எம் வீரப்பனிடம் ஆலோசனை கேட்கச் சென்ற ரஜினி அன்று, 1995ஆம் ஆண்டில் ஆர்எம்வீ தயாரித்த 'பாட்ஷா' பட வெற்றி விழாவில், அமைச்சராக இருந்த ஆர் எம் வீரப்பனை வைத்துக்கொண்டே ஜெயலலிதா ஆட்சி நடத்திய அந்த காலகட்டத்தில் 'சட்டம் ஒழுங்கு சரியில்லை, முதல்வர் வீடு இருக்கும் போயஸ் கார்டன் பகுதியிலேயே வெடிகுண்டு போடப்படும் அளவுக்குதான் இருக்கிறது' என்றார். அதற்கு சில நாட்களுக்கு முன் போயஸ் கார்டன் பகுதியில் ஜெயலலிதா வருகைக்காக வாகனங்கள் நெடுநேரம் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் அதில் ரஜினியும் காத்திருந்ததாகவும் செய்தி வந்தது.

அமைச்சரான ஆர்.எம்.வீரப்பன் அந்த மேடையில் ரஜினி பேசுவதை கேட்டு அதே மேடையில் விமர்சிக்கவோ, ஆட்சியில் சட்ட ஒழுங்கு நன்றாகத் தான் இருக்கிறது என்று கூறவோ இல்லை என்று மற்ற அமைச்சர்கள் கடுமையாக ஆர் எம் வீரப்பனை சாட ஆரம்பித்தனர். பின்னர், அமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். அதிமுக வில் இருந்து வெளியே வந்து எம்ஜிஆர் கழகத்தை உருவாக்கினார். ரஜினிக்கு அன்றில் இருந்து இன்றுவரை நல்ல ஆலோசகராகவே இருக்கிறார். எம்.ஜி.ஆர் மறைந்த பொழுதும், அதற்கு பின்னரும் சில தருணங்களில் ஆர்.எம்.வீரப்பன் முதல்வராவார் என்று பலரும் கூறியபோது , சோ "அவர் ஒரு நல்ல கோ பைலட் மட்டுமே" என்றார். ஒருவேளை ரஜினிகாந்திற்கு ஒரு நல்ல கோ பைலட்டாக செயல்படுவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
சந்தோஷ் குமார்