Skip to main content

''ராகுல் காந்தியுடன் நான்...'' - ஒரு மாற்றுத்திறனாளியின் மறக்க முடியாத அனுபவம்!#1

Published on 07/03/2021 | Edited on 07/03/2021

 

கட்டுரையாளர் :அண்ணாமலை

 

With Rahul Gandhi I .. The Unforgettable Experience #1

 

கனவுகள் மெய்ப்படும்போது மகிழ்ச்சி. சில நேரங்களில் காணும் கனவை விட நிஜத்தில் அதிகமாக அடைந்துவிடும் போது ஏற்படும் உணர்வை விவரிக்க வார்த்தைகள் தேடுவது மிகக் கடினம். கோவையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான என்னுடைய பெயர் அண்ணாமலை. மாற்றுத்திறனாளியாகிய எனக்கு அப்படிப்பட்ட எண்ணமே வராத அளவுக்கு பலரின் அன்பால் சூழப்பட்டவன். பி.காம் படித்து, அதன்பிறகு எம்பிஏ படித்து, கல்லூரியில்வேலைக்கு சேர்ந்தது வரை அனைத்திலும் உள்ளது தாய் தந்தையின் பெரும்பங்கு. குடும்பத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாவிட்டாலும்இயற்கையாகவே அரசியலில் ஆர்வம்.

 

எந்தவிதமான அப்பாயிண்ட்மெண்ட்டும் இல்லாமல், யாருடைய பரிந்துரையும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச தலைவரான ராகுல் காந்தியை சந்திக்க ஒருவன் கோவையிலிருந்து கிளம்பி திருநெல்வேலி செல்லும் காட்சியைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படித்தான் நான் சென்றேன். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே நம்பிக்கையாக விளங்கிக் கொண்டிருக்கிற தலைவர் ராகுல் காந்தி மீதான என்னுடைய காதலுக்கு வயது ஐந்து. ஒருமுறை வெளிநாட்டில் ஒரு நேரடி விவாதத்தில் மக்கள் கேள்விக்கு ராகுல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் காங்கிரஸ் கட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு "உங்களுக்கும் பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்?" என்பது போன்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு எந்த சலனமும் இல்லாமல் ராகுல் சொன்னார் "நீங்கள் என் முன் அமர்ந்து இப்படி எங்களை விமர்சித்து நேரடியாகக் கேள்வி கேட்க முடிகிறது. நரேந்திர மோடியிடம் இதுபோல் உங்களால் கேட்க முடியாது. அதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம்" என்று. அந்த நிமிடம் முடிவு செய்தேன் இவர்தான் இந்தியாவுக்கான தலைவர் என்று.

 

ராகுல் அவர்களைப் பார்க்க வேண்டும் என்பது பல வருடக் கனவு. அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக அவர் எங்கு சென்றாலும், என்ன பேசினாலும் ஒன்றையும் விடாமல் பின்தொடரும் ரசிகனாகவே மாறிப்போனேன். இத்தனைக்கும் நான் காங்கிரஸ் கட்சியில் இல்லை. ஆனால் பாஜக முன்னெடுக்கும் வெறுப்பு அரசியலை அன்பினால் வீழ்த்தக் கூடிய ஒரே மனிதர் ராகுல் காந்தி தான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. தேர்தல் பரப்புரைக்காக அவர் தமிழகத்திற்கு அடிக்கடி வரத் தொடங்கியவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலும் அதிகமானது. நான் இருக்கும் கோவைப் பகுதிக்கு அவர் வந்தபோது அவரை சந்திக்க நான் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. 'இதெல்லாம் நடக்காத காரியம்' என்று மனம் ஒருபுறம் மட்டம் தட்டினாலும் 'முயற்சி செய்' என்று இன்னொரு புறம் ஒரு உந்துதல். போராடியே பழக்கப்பட்ட
வாழ்க்கை அல்லவா?

 

மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு அவர் வருகிறார் என்று தெரிந்தவுடன் எந்தவித குழப்பமும் இல்லாமல் நான் எடுத்த முடிவு "நாம் திருநெல்வேலி செல்வோம்" என்பது. ராகுல் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்து இறங்கியவுடன் அம்மாவை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி புறப்பட்டோம், அன்று இரவு அவர் திருநெல்வேலியில் தங்குகிறார் என்று தெரிந்ததால். ஏதோ பக்கத்து வீட்டு அண்ணனைப் பார்க்கச் செல்வது போல நேரடியாக அவர் தங்கவிருக்கும் ஓட்டலுக்குச் சென்று "ராகுல்ஜியைப் பார்க்க வேண்டும்" என்று போய் நின்றதை இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. ஓட்டலுக்கு உள்ளே செல்லக் கூட அனுமதியில்லை. "அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா? யாராவது சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார்களா?" என்று போலீசார் கேட்கிறார்கள். எங்களிடம் எதுவும் இல்லை. காரிலிருந்து இறங்கி வீல்சேரில் அமர்ந்து ஓட்டலுக்கு முன் சென்று நின்று கொண்டோம். இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் ராகுல் காந்தியின் உயரம் என்ன என்பதை உணர்ந்துகொண்ட தருணம் அது. எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்றுதெரிந்த பின்னும் அவர் என்னை ஒருமுறை பார்த்துவிட்டால் நிச்சயம் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை.

 

With Rahul Gandhi I .. The Unforgettable Experience #1

 

இரவு சுமார் எட்டரை மணி. திருநெல்வேலியில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு ராகுல் அவர்கள் ஓட்டலுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. காவல்துறையினர் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தத் தெருவில் எந்த வாகனமும், மனிதர்களும் நடமாட முடியாத நிலை. "கான்வாய் இங்கே வந்து விட்டது அங்கே வந்து விட்டது" என்று வாக்கி டாக்கி மூலம் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் வந்துகொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் எங்கள் மீது காவல்துறையினர் ஒரு கண் வைத்தபடி இருந்தனர். எந்தவித முன் அனுமதியும் இன்றி ராகுல் காந்தியைப் பார்க்க வேண்டும் என்று கோவையில் இருந்து ஒருவன் வந்து நின்றால் சந்தேகம் வராமல் இருக்குமா? சிஐடி முதல் அத்தனை பேரும் எங்களது முழுத் தகவல்களையும் விசாரித்தபடியே இருந்தனர். சுமார் 9 மணியளவில் ராகுல் அவர்களின் கார் மிகப்பெரிய படை சூழ ஓட்டலுக்குள் நுழைந்தது. முன் சீட்டில் சிரித்தபடியே அமர்ந்திருந்த அந்த நபரைப் பார்த்த பிறகு "இவரோடு ஒரு நிமிடமாவது உரையாடி விட மாட்டோமா" என்கிற ஏக்கம் மேலோங்கியது. நிச்சயமாக முடியும் என்கிற வைராக்கியமும் அதிகமானது.

 

அந்த நிமிடத்தில் இருந்து தொடங்கியது என்னுடைய சத்தியாகிரகம். ராகுல் காந்தியின் வாகனத்திற்குப் பின்னால் அடுத்தடுத்து பல தலைவர்கள் வந்து இறங்கினர். திருநாவுக்கரசர் தொடங்கி தனுஷ்கோடி ஆதித்தன் அவர்கள் வரை அந்த வழியாகச் சென்ற அனைவரிடமும் என்னுடைய முழு விவரத்தைக் கூறி ராகுல் அவர்கள் எனக்கு மிக விருப்பமான தலைவர் என்பதைக் கூறி அவரிடம் புகைப்படம் எடுக்க ஒரே ஒரு வாய்ப்பு வாங்கித் தருமாறு கேட்டேன். அனைவரும் உள்ளே சென்று சொல்லுவதாக சொல்லிவிட்டுச் சென்றனர். பகல் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு களைப்பாக இருக்கும் ராகுல் அவர்களை அப்போது சந்திப்பது இயலாத காரியம் என்பதே நிதர்சனம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர் தியாகச் செம்மல் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் சென்று என்னைப் பற்றியும் என்னுடைய நோக்கம் பற்றியும் எடுத்துக் கூறினேன். உடனடியாக அவர் தன்னுடன் வந்திருந்த திருநெல்வேலி செய்தியாளர் சுடலைகுமார் அவர்களிடம் என்னைப் பற்றியும், நான் ராகுல் அவர்களை சந்திப்பதற்காக 5 மணி நேரமாக ஓட்டலுக்கு வெளியே காத்திருப்பது பற்றியும் ராகுல் அவர்களை மென்ஷன் செய்து ட்விட்டரில் ஒரு ட்வீட் போடச் சொன்னார். அவரும் உடனடியாக என்னுடைய புகைப்படத்தோடு ட்வீட் செய்தார். பத்தாவது நிமிடம் ராகுல் அவர்களின் உதவியாளரிடமிருந்து அழைப்பு வந்தது. "நாளை காலை 8 மணிக்கு உங்களுக்கு அப்பாயின்ட்மெண்ட்" என்கிற செய்தியும் வந்தது.

 

மறுநாள் காலையில் 7.20-க்கெல்லாம் ஓட்டல் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று அதே போல் வெளியே நின்று கொண்டோம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. மகேந்திரன் அவர்களிடமிருந்து "உள்ளே அழைக்கிறார்கள்" என்கிற அழைப்பு வந்தது. திரு. மகேந்திரன் அவர்களிடம் அதற்கு முன்பே நான் ராகுல் அவர்களை சந்திப்பதற்கு உதவுமாறு கேட்டிருந்தேன். இந்த முறை அவர் எனக்கு உதவினார். உள்ளே சென்று ராகுல் அவர்களின் கார் நிற்கும் பகுதிக்கு அருகில் நின்றோம். அதற்குள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் ஓட்டலுக்குள் வரத் தொடங்கினர். தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த முகங்களை முதல் முறையாக நேரில் பார்த்தேன். என்னுடைய கனவுக்கான தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். அவரது அறையில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி நேராகக் காரில் ஏறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது வீல்சேரில் அமர்ந்திருந்த என்னைக் கண்டவுடன் நேராக என்னிடம் வந்துவிட்டார். ஒட்டுமொத்த கேமராக்களும் எங்களைப் படமெடுக்க ஆரம்பித்தன. என்னுடைய நலம் விசாரித்த அவரை நானும் நலம் விசாரித்துவிட்டு "உங்களைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய 5 வருடக் கனவு. நேற்று இந்த இடத்தில் உங்களை சந்திப்பதற்காக 5 மணி நேரம் காத்திருந்து விட்டு சந்திக்க முடியாமல் திரும்பினேன். உங்களிடம் பகிர்ந்துகொள்ள என்னிடம் நிறைய செய்திகள் இருக்கிறது. உங்களோடு நான் பயணம் செய்ய முடியுமா?" என்றேன். அதற்கு ராகுல் அவர்கள் "இவர் நம்மோடு பயணம் செய்ய விரும்புகிறார்" என்று அவர் அருகில் நின்ற அதிகாரியிடம் கூறினார். பின்பு அவரே "இப்போது நான் பரப்புரையின் இடையில் இருப்பதால் பயணம் செய்வது கடினம். ஆனால் நிச்சயமாக அதற்கு ஒரு ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறிவிட்டு, என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, கல்லூரி நிகழ்ச்சிக்கு நேரமாகி விட்டதால் கிளம்பினார்.  

 

With Rahul Gandhi I .. The Unforgettable Experience #1

 

இதற்கு நடுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்.பி ஜோதிமணி அவர்கள் என்னைப் பாராட்டி நீண்ட நேரம் என்னிடமும், என்னுடைய அம்மாவிடமும் பேசினார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், ஈகோவும் இல்லாமல் அவர் பழகிய விதம் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். எந்த முன் அனுமதியும் இன்றி கோவையில் இருந்து வந்து ராகுல் அவர்களுடன் புகைப்படம் எடுத்து விட்டோம், சில நிமிடங்கள் பேசிவிட்டோம் என்கிற மனநிறைவில் திருநெல்வேலியில் இருந்து கிளம்ப ஆயத்தமானோம். ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்பத் தயாராக இருந்தபோது திரு. மகேந்திரன் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. "நேராக ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுங்கள். இன்று மதியம் 1.30 மணிக்கு ராகுல் காந்தி அவர்கள் மதிய உணவுக்காக அங்கு வரும்போது உங்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்" என்றார். அந்த நிமிடத்தில் என்னுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். "உங்களோடு சில நிமிடங்கள் பேச வேண்டும்" என்று காலையில் நான் சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு என்னை மதியம் வரச் சொல்லியிருக்கிறார் என்றால் ராகுல்காந்தி எவ்வளவு பெரிய மனிதராக இருக்க வேண்டும்?

 

ராகுல் எதற்காக எங்களை அந்த கல்யாணமண்டபத்திற்கு வரச்சொன்னார், என்ன பேசினார் என அடுத்தப் பகுதியில் வாசியுங்கள்...

 

''நாளை முதல் நடக்கமுடியாது என்று சொன்னால்...'' மனம்விட்டு பேசிய ராகுல் #2