Skip to main content

ரஜினி வாய்ஸ் தர மூன்று ப்ளான்கள்! பாஜகவின் ஒரே இலக்கு..!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

புதுக்கட்சி- மாநாடு- தேர்தலில் போட்டி என ரஜினியை மையமாக வைத்து சுழலும் அரசியல் செய்திகள் அதிகரித்தபடியே உள்ளன. ரஜினி தேர்தலில் நிற்கப்போவதாக சொல்லப்படும் தொகுதிகள் வடமாவட்டங்களில் இருப்பதால் அதுபற்றி வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "தலைவர் தேர்தலில் நிற்கிறார் என்றால் சந்தோஷமாக இப்போதே களப்பணியை தொடங்கினால்தான் சரியாக இருக்கும். 60 சதவிதம் பூத் கமிட்டிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டது. தலைவர் கட்சி தொடங்கினால் புதியதாக மாற்று கட்சிகளில் இருந்து பல தலைகள் வரும், அவர்களுடன் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள், அவர்களை பூத் கமிட்டியில் நியமனம் செய்ய 40 சதவித இடங்களை நிரப்புவோம்'' என்றவர்கள், "ஆனால், கட்சிப்பணி-தேர்தல் பணி குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை'' என்றார்கள்.

 

 

rr


இதுபற்றி மாநில உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். "தேர்தல் கள நிலவரம் குறித்தும், ரஜினியை மையமாக வைத்தும் பாஜகவுக்காக ஒரு ஏஜென்ஸியும், மத்திய உளவுத்துறையான ஐ.பி.யும் சர்வேக்கள் எடுத்தன. அந்த சர்வேக்களில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்கிற தகவல் கிடைத்தது. எங்கள் ரிப்போர்ட்டும் அதுதான். நாங்கள் முதல்வருக்கு தெரியப்படுத்தினோம். அதேநேரத்தில் பா.ஜ.க.வை விட்டு அ.தி.மு.க. வந்தால் ஓரளவு வெற்றி கிடைக்கும். இல்லையேல் 1996 தேர்தல் போன்ற ரிசல்ட்தான் கிடைக்கும் என தகவல் தந்தோம். இந்த நிலையில்தான் பாஜக - ஐ.பி. நடத்திய தமிழக தேர்தல் சர்வேக்கு பின்பே ரஜினி குறித்த செய்திகள் அதிகம் வெளிவருகின்றன'' என்றார்கள்.

 

இதுகுறித்து டெல்லியோடு தொடர்பில் உள்ள பாஜக நிர்வாகியும், தேர்தல் யுக்தி டீமோடு டச்சில் உள்ள அந்த பிரமுகரிடம் நாம் பேசியபோது, "தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே இலக்கு. அதனால் தி.மு.க. கூட்டணியை உடைக்கவும், அதன் ஆதரவு வாக்குகளை சிதறடிக்கும் வகையில் புதிய கூட்டணிகள் உருவாக்கவும் எங்கள் தலைமை முயற்சி செய்து வருகிறது. ரஜினி கட்சி ஆரம்பிக்கமாட்டேன், நான் முதல்வர் வேட்பாளர் எனச்சொல்லமாட்டேன் என்கிற நிலைப்பாட்டிலேயே கடந்த மே வரை இருந்தார். அதன்பின்பே நாங்கள் அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தோம்.

 

சர்வேக்களின்படி தமிழகத்தில் சென்னை, வடதமிழகம், டெல்டா பகுதிகளில்தான் திமுக வலிமையாகவுள்ளது. கொங்குபகுதி, தென் மாவட்டங்களில் அதிமுக வலிமையாகவுள்ளது. பாஜகவுக்கான வாக்கு வங்கியும் இந்த பகுதிகளில் உயர்ந்துள்ளது தெரிய வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. மீது மக்களிடம் வெறுப்பு உருவாகியுள்ளது. இப்படி அலசி ஆராய்ந்த பின், வடமாவட்டம், டெல்டா, சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தை குறைக்க வேண்டும், ஆளும் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை திமுகவுக்கு செல்லாமல் திசை மாற்ற ஒரு கூட்டணியை உருவாக்க நாங்களும் அதிமுகவும் முயற்சி செய்கிறோம். அதற்காக ரஜினியை கட்சி தொடங்க சொல்லி டெல்லியில் இருந்து மீண்டும் நெருக்கடி தரப்படுகிறது. இதற்காக மூன்று ப்ளான்கள் அவரிடம் கூறப்பட்டுள்ளது.

 


rr
அதாவது ரஜினி கட்சி தொடங்கி பா.ம.க., தே.மு.தி.க. போன்றவற்றை அவருடன் கூட்டணி அமைக்க வைத்து நடுநிலை வாக்குகள், ஆளும்கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை ரஜினி தலைமையிலான கூட்டணி பெற்று ஆட்சிக்கு வருவது. இரண்டாவதாக, கட்சி தொடங்கவில்லையென்றால் அ.தி.மு.க. - பா.ஜ.க. தலைமையிலான இப்போதைய கூட்டணிக்கு ஆதரவு தரச்சொல்லி கேட்கப்படுகிறது. மூன்றாவதாக, தே..மு.தி.க.வை தனித்து தேர்தல் களத்தில் நிறுத்துவது, நண்பர் விஜயகாந்த் நல்ல மனிதர், அவர் முதலமைச்சராக நான் ஆதரவு தருகிறேன் என ரஜினியை வாய்ஸ் தருவது என rrமூன்று ப்ளான்கள் உள்ளன.

 

விஜயகாந்த்துக்கு ரஜினி வாய்ஸ் தந்தால், கம்யூனிஸ்ட்கள், வி.சி.க., வாசன் கட்சி போன்றவை விஜயகாந்த் பக்கம் போகும், திமுகவின் பலம் குறையும். கடந்தமுறை ம.ந.கூ. செய்ததை செய்தாலே, எங்கள் அணி இழுபறியிலாவது ஆட்சியைப் பிடிக்கும். பா.ம.க ராமதாஸோ அன்புமணியை முதல்வராக்க ரஜினி வாய்ஸ் தருவதற்கு முயற்சிக்கிறார்'' என்றார்.

 

இதுபற்றி ரஜினி குடும்பத்தாருடன் நெருக்கமானவர்களிடம் பேசியபோது, "கட்சி தொடங்குவது குறித்த ஆலோசனை தொடர்கிறது. தமிழக நிலவரத்தை ரஜினி எப்போதும் போல் உன்னிப்பாகவே கவனித்து வருகிறார். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை மட்டுமே நேரில் வரவைத்து அரசியல் குறித்து பேசுகிறார். ஒரு தொகுதிக்கு 5 பேர் கொண்ட பட்டியலையும் தயார் செய்து வைத்துள்ளார். அதில் மன்ற நிர்வாகிகளை தாண்டி சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்களின் பெயர்களும் உண்டு. ஆனால், அவர் தேர்தலில் நிற்க எந்த முடிவும் எடுக்கவில்லை'' என்றார்கள்.

 

இந்நிலையில்... உடல்நிலை குன்றிய நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் ரசிகர் ஒருவர், 'ரஜினி முதல்வராவதை காணவேண்டும்' என்ற ஆசையில் ட்விட் செய்திருந்தார். அவரை போனில் தொடர்பு கொண்ட ரஜினி, "கவலைப்படாதீங்க கண்ணா... உங்கள் உடல்நிலை விரைவில் குணமாகும்'' என்று அரசியல் கலப்பின்றி வாழ்த்தினார்.



-து.ராஜா

 

 

சார்ந்த செய்திகள்